பித்தப்பை கற்கள் இல்லாத பித்தப்பை அழற்சி
சில சமயங்களில் பித்தப்பையில் கற்கள் இல்லாமலே பித்தப்பை அழற்சி ஏற்படலாம். இதற்கு குறிப்பாக எந்த காரணமும் இல்லாவிட்டாலும் கூட பித்தப்பையின் அசைவில் ஏற்படும் மாற்றமும் பித்தப்பையில் ஏற்படும் பித்த நீர் தேக்கமுமே முக்கியமான காரணங்களாகும். குறிப்பாக முதிர்ந்த வயது, சர்க்கரை வியாதி, நீண்ட நாள் தீவிர சிகிச்சை பகுதியில் இருப்பது போன்ற காரணங்களால் பித்தப்பை அழற்சி வரலாம். சில சமயங்களில் இதன் வீரியம், மிக அதிகமாக இருப்பதால் பித்தப்பை அழுகுவதுடன் பித்தப்பை வெடிக்கவும் வாய்ப்புள்ளது. பொதுவாக, வயிற்றின் மேற்பகுதியில் வலது பக்கமாக வலி, காய்ச்சல் மற்றும் குறைந்த பசியே இந்நோயின் வெளிப்பாடாகும். வயிற்றிற்கு செய்யப்படும் சாதாரண அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை இதை கண்டறிய உதவியாக இருந்தாலும் கூட மாறுபடும் திரவம் செலுத்தி செய்யப்படும் சிடி பரிசோதனை இதை உறுதிப்படுத்துகின்றது. இதற்கு சிகிச்சை முறை பித்தப்பையை அகற்றுவதாகும் .நோயாளியின் உடல்நிலை சீராக இருந்தால் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையும் பொது உடல்நிலை மோசமாக இருந்தால் திறந்த அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது. சில சமயங்களில் நோயாளியின் உடல்நிலை மிக மோசமாக இருந்தால் பாதிக்கப்பட்ட பித்தப்பையினுள் இருக்கும் பாதிக்கப்பட்ட பித்தநீரை பெர்குடேனியஸ் கோலிசிஸ்ட்டாஸ்டமி எனும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டும். அதற்குப்பின்., நோயாளியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின் உடல்நிலை சீரான பிறகு பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.