எண்டோ யூராலஜி
சிறுநீரகத்தில் ஏற்படும் சில வியாதிகளை உள்நோக்கி மூலம் சரி செய்வதை அல்லது சிகிச்சை அளிப்பதை எண்டோயூராலஜி என்கிறோம். சிறுநீரகத்தில் ஏற்படும் பல வியாதிகளை இம்முறையில் சிகிச்சை செய்தாலும் கூட மிக முக்கியமான வியாதி சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கல் வியாதியாகும், சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் சிறுநீரகம், நீர் குழாய், சிறுநீரகப்பை, மற்றும் சிறுநீரகக் குழாயை பாதிக்கலாம். சிறுநீரக சம்பந்தப்பட்ட கற்கள் உருவாக பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக தேவையான அளவு நீர் எடுக்காமல் இருத்தல், சில உணவு பழக்க வழக்கங்கள், இரத்தத்தில் அதிக கால்சியம் இருத்தல், வளர்ச்சிதை மாற்றங்களால் ஏற்படும் மாறுதல்கள், பரம்பரை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குறிப்பிடத்தக்கவை. சிறுநீரகத்தில் இருக்கும் சிறு கற்களால் பெரும்பாலும் பெரிய பிரச்சனைகள் ஏதும் வருவதில்லை. ஆனால் சிறுநீரகத்தில் இருக்கும் கல்லின் அளவு பெரிதாகும் போது வலி மற்றும் நுண்ணுயிரியின் தாக்கம் உருவாக வாய்ப்பு உள்ளது. சிறுநீரகத்தில் இருந்து நீர்குழாய்க்கு வரும் கற்களின் அளவு 4 மில்லி மீட்டர் குறைவாக இருந்தால் அவை தானாகவே வெளியேறுகின்றன 4 மில்லி மீட்டருக்கும் அதிகமான கற்கள் நீர் குழாயை கடக்கும் போது வலி வரலாம். ஆனால் கல்லின் அளவு 6 மில்லி மீட்டருக்கு அதிகமாக இருந்தால் கல் நீர் குழாயில் தேங்கி வலியுடன் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை உருவாக்குவதால் அந்த கற்களை எண்டோஸ்கோபி மூலமாகற்றப்பட வேண்டியது கட்டாயமாகும்.
சிறுநீரக சம்பந்தப்பட்ட கற்களின் நோய் வெளிப்பாடுகள்
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கற்களின் வெளிப்பாடு வயிற்றில் விட்டு விட்டு வரும் தீவிர வலியாகும். இந்த வலி வயிற்றின் பின்னிருந்து முன்னாக பரவலாம். கல் இருக்கும் குறிப்பிட்ட பாகத்தில் வலி அதிகமாக இருக்கும். வலியுடன் பொதுவாக வாந்தியும், சிறுநீர் வெளியேறும் இடத்தில் எரிச்சலும் இருக்கும். காய்ச்சல் மற்றும் சிறுநீரில் ரத்தம் கலந்து இருப்பது சிறுநீரக கற்கள் சம்பந்தப்பட்ட வியாதியின் மற்ற அறிகுறியாகும். பொதுவாக., இந்த மாதிரியான நோய் வெளிப்பாடுகளால் நோயாளிக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட கற்கள் இருக்கலாம் என்பதை யூகிக்க முடியும்.
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கற்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகள்.,
சிறுநீரக சம்பந்தப்பட்ட கற்களுக்கு பல பரிசோதனைகள் இருந்தாலும் கூட சிறுநீரகத்தை மையப்படுத்தி செய்யப்படும் எக்ஸ்ரே பரிசோதனை மிக முக்கியமானதாகும். பொதுவாக 90% கிட்னி சம்பந்தப்பட்ட கற்கள் எக்ஸ்ரே மூலம் கண்டறியப்படுகின்றன. பொதுவாக இந்த கற்கள் சிறுநீரகம் அல்லது நீர் குழாய் அல்லது சிறுநீரகப்பை இருக்கும் இடத்தில் கண்டறியப்பட்டால் அது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கற்கள் என எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் இன்றைய காலத்தில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கற்களுக்கு மிக முக்கியமான பரிசோதனை சிறுநீரகத்தை மையப்படுத்தி செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை ஆகும். இந்த பரிசோதனையில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட இடங்களில் கற்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறிவதோடு அது இருக்கும் இடம், அதன் அளவு மற்றும் அது சிறுநீர் பாய்ச்சலை தடுக்கிறதா, என்பதையும் கண்டறிந்து விடுகிறது. இத்துடன்., இந்த அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் வயிற்று வலிக்கு முக்கியமான காரணங்களாவன., பித்தப்பை கற்கள் குடல்வால் அழற்சி மற்றும், அடிவயிற்று பிரச்சனைகளையும் கண்டறிய முடியும். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கற்கள் இருந்தால் அடுத்த கட்ட பரிசோதனையாக மாறுபடும் திரவம் செலுத்தி செய்யப்படும் சிடி பரிசோதனை மிக முக்கியமானதாகும். இந்த சி.டி பரிசோதனையில் கல் இருக்கும் இடம் மற்றும் அடைப்பின் வீரியம் போன்றவற்றை நன்றாக தெரிந்து கொள்ள முடியும். நீர் குழாயில் இருக்கும் கல்லுக்கும் சிறுநீரகத்திற்கும் இடையே உள்ள இடம் வீங்கி இருப்பின் அடைப்பின் வீரியம் அதிகமாக இருப்பதை உணர்ந்து அதற்கு தேவையான சிகிச்சை முறைகளை உடனடியாக தொடங்க வேண்டும். எம் ஆர் ஐ போன்ற பரிசோதனைகள் கூட சிறுநீரக சம்பந்தப்பட்ட கற்களை கண்டறிய உதவியாக இருக்கும். இத்துடன்., சில ரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக இரத்தத்தில் சர்க்கரை அளவு, யூரியா அளவு, கிரியாட்டினின் அளவு, முக்கியமானவை. ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் அளவு அதிகமாக இருந்தால் நுண்ணுயிரின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதை யூகிக்க முடியும். இருப்பினும் சிறுநீரில் செய்யப்படும் பாக்டீரியா வளர்ப்பு பரிசோதனை நுண்ணுயிரியின் தாக்கத்தை உறுதிப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவு அதிகமாக இருந்தால் உயர் கால்சியம் அளவு கற்கள் உருவாக காரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
சிறுநீரக கற்களின் கலவைகள்
சுமார் 80% சிறுநீரக கற்களுக்கு கால்சியம் ஆக்சலேட் மற்றும் கால்சியம் பாஸ்பேட் போன்ற மூலக்கூறுகளின் கலவைகளே முக்கியமான காரணங்களாகும். யூரிக் ஆசிட், ஸ்ட்ருவைட் மற்றும் சிஸ்டைன் போன்ற மூலக்கூறுகளும் சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகின்றன. கால்சியம் ஆக்சிலேட் கொண்ட சிறுநீரக கல்லின் முக்கிய மூலக்கூறு ஆன கால்சியம் காய்கறி வகைகள், பழ வகைகள் சக்கலேட் மற்றும் கல்லீரலில் அதிகமாக காணப்படுகின்றன.
உடல் பருமன் குறைக்க செய்யப்படும் மாற்றுப் பாதை அறுவை சிகிச்சைகள் சிறுநீரக கற்கள் உருவாக ஒரு முக்கியமான காரணமாகும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருத்தல் அதிக அளவு புரத சத்து நிறைந்த சத்து உணவு வகைகளை உண்பவர்களுக்கு கௌவுட் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் யூரிக் ஆசிட் சம்பந்தப்பட்ட வியாதிகள் உருவாகின்றன, ஸ்ட்ருவைட் கற்கள் உருவாக முக்கியமான காரணம்., சிறுநீர் பாதையில் ஏற்படும் தொடர் தொற்று வியாதியாகும், பரம்பரை வியாதியால் பாதிக்கப்பட்ட சிலர் சிறுநீரில் அதிக அளவு அமினோ ஆசிட் கலந்திருக்கும் இவர்களுக்கு சிஸ்டைன் கற்கள் உருவாகின்றன.
சிறுநீரக கற்களுக்கு காரணங்கள்
சிறுநீரகப்பை உள்நோக்கி
சிறுநீரகப்பை உள்நோக்கி என்பது சிறுநீர் குழாயிலும் சிறுநீரகப் பையிலும் உள்ள கற்களை அகற்ற உதவும் ஒரு கருவியாகும். இந்த கருவியானது ஒளியை கடத்தும் தன்மை கொண்ட ஒரு கருவியாகும். இந்த கருவி திடமாகவோ அல்லது வளையும் தன்மை கொண்டதாகவோ இருக்கும். இதில் ஒளியை கடத்தும் லென்ஸுடன் கேமரா பொருத்தப்பட்டு திரையின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த உள்நோக்கியின் கோணம் சிறுநீர் குழாய் மற்றும், சிறுநீர்ப்பை அடைப்பு மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் முதலில் சிறுநீர்ப்பை உள்நோக்கி சிறுநீர் குழாய் வழியாக சிறுநீர் பைக்கு செலுத்தப்படுகிறது. அதற்குப்பின்., சிறுநீரகப்பை திரவத்தால் நிரப்பப்படுகிறது இவ்வாறு நிரப்பப்பட்ட சிறுநீர்ப்பை நன்றாக விரிவடையும்போது உள்ளிருக்கும் கற்களை நன்றாக கண்டறிய முடியும். சிறு கற்களை கூடை போன்ற கருவிகளை வைத்து வெளியே எடுக்கப்படுகின்றன. கற்களின் அளவு பெரிதாக இருந்தால் கல் உடைக்கும் கருவிகளைக் கொண்டு கல் உடைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. கல் உடைப்பதற்கு எந்திரவியல் அல்லது லேசர் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
சிறுநீரக கற்களின் சிகிச்சை முறைகள்
சிறுநீரக கற்களின் சிகிச்சை முறையானது அது இருக்கும் இடம் அதன் அளவு மற்றும் அது ஏற்படுத்திய அடைப்பின் வீரியத்தை பொறுத்து மாறுபடும். பொதுவாக., சிறுநீர் குழாய் சிறுநீரகப்பை மற்றும் நீர் குழாயினுள் உள்ள கற்களை சிறுநீர்ப்பை உள்நோக்கி அல்லது நீர் குழாய் உள்நோக்கி மூலம் அகற்றலாம். சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீர் குழாய் உள்நோக்கி மூலமாகவோ அல்லது நீர் குழாய் உள்நோக்கியுடன் ESWL என்ற சிகிச்சை மூலமாகவோ அகற்றலாம். PCNL என்பது சிறுநீரக கற்களை அகற்ற பயன் படுத்தப்படும் ஒரு முக்கிய சிகிச்சை முறையாகும். சில சமயங்களில் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையும் முறையும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கற்களை அகற்ற உதவியாக இருக்கும். சிறுநீர்ப்பை உள்நோக்கியின் போது தசை வளர்ச்சி இருந்தால் அதிலிருந்து சதை பரிசோதனைக்கு சதை எடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீரக உள்நோக்கி சிகிச்சைக்கான காரணங்கள்
நோய் உறுதிப்படுத்துதல்
சிறுநீர்ப்பை உள்நோக்கியால் செய்யப்படும் சிகிச்சை முறைகள்
நீர்ப்பை உள்நோக்கியால் ஏற்படும் பின் விளைவுகள்
பொதுவாக நீர் பை உள்நோக்கியால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை இருப்பினும் நீர்ப்பை குழாய் மற்றும் சிறுநீரகப் பையில் உள்ள சீதமென் சவ்வில் காயம் ஏற்பட்டால் இரத்தக் கசிவு ஏற்படலாம்.
நீர்க் குழாய் உள்நோக்கி
இதன்மூலம் நீர்க்குழாய் மற்றும் சிறுநீரகத்தின் உட்பகுதியை பார்க்க முடியும். இது நீர்ப்பை உள்நோக்கிப் போன்றே இருக்கும் ஆனால் நீளமாகவும், மென்மையாகவும் இருக்கும். நீர்க் குழாய் உள்நோக்கியுடன் கேமரா பொருத்தப்பட்டு பின்பு சிறுநீர் குழாய் வழியாக சிறுநீர்ப்பையை அடைந்து அதற்குப்பின் வலது மற்றும் இடது நீர்க் குழாய் துவாரங்கள் கண்டறியப்படுகின்றன. இதற்குப் பின் எந்த நீர் குழாயில் பிரச்சனை உள்ளதோ அந்த நீர்க் குழாய் துவாரம் வழியாக நீர்க் குழாய் முன்னோக்கி செலுத்தப்பட்டு நீர்க் குழாய் மற்றும் சிறுநீரகத்தின் உள்பகுதி சம்பந்தப்பட்ட விவரங்கள் கண்டறியப்படுகின்றன. இவ்வாறு நீர்க் குழாய் உள்நோக்கி செலுத்தப்படும் போது சிறுநீர்ப்பை மற்றும் நீர்க் குழாயில் உள்ள பொது பிரச்சனைகளான கற்கள், சதை வளர்ச்சி, தொடர் அழற்சி, மற்றும் நீர்க் குழாய் சுருக்கங்கள் போன்றவை கண்டறியப்படுகின்றன. இத்தருணங்களில்., கல் இருப்பின் கல் அகற்றுதல், சதை வளர்ச்சி இருப்பின் அதை அகற்றுதலும் செய்யப்படுகின்றது. சதை வளர்ச்சி அல்லது, தொடர் அழற்சி இருப்பின் சதை பரிசோதனைக்கு தேவையான மாதிரி சதையையும் பரிசோதனைக்கு எடுக்கலாம். மேலும் தேவைப்பட்டால் நீர்க் குழாயில் வடிகால் குழாயும் பொருத்தலாம்.
நீர்க் குழாய் உள்நோக்கி பயன்படுத்துவதன் காரணங்கள்
நீர்க் குழாய் உள்நோக்கியால் ஏற்படும் பின் விளைவுகள்
பொதுவாக பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படுவதில்லை, இருப்பினும்., சில சமயங்களில் சிறுநீர்ப்பை அல்லது நீர்க் குழாயில் காயங்கள் ஏற்படுவதோடு இரத்த கசிவும் ஏற்படலாம். மேலும் மிக அபூர்வமாக நீர்க் குழாயில் ஓட்டை விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
நெப்ரோஸ்கோப்பி என்னும் சிறுநீரக உள்நோக்கி
சிறுநீரக உள்நோக்கி என்பது சிறுநீரகத்தின் உட்பகுதியில் உள்ள சில வியாதிகளை கண்டறியவும், சிகிச்சை செய்யவும் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இக்கருவி நீர் குழாய் உள்நோக்கிப் போலவே இருக்கும். இந்த உள்நோக்கி ஆனது பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தின் வெளிப்பகுதியில் உள்ள தோலின் மேல் சிறு துவாரம் போடப்பட்டு பின் சிறுநீரகத்திற்குள் செலுத்தப்பட்டு சிறுநீரகத்தின் தேவைப்பட்ட பகுதிகளை பார்வையிடலாம். இந்த பரிசோதனை ஆனது, பொதுவாக தொடர் எக்ஸ்ரே உதவியுடன் செய்யப்படுகிறது. சிறுநீரக உள்நோக்கியுடன் கேமரா மற்றும் சம்பந்தப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு சிறுநீரகத்தின் உள்பகுதி ஆராயப்படுகிறது. குறிப்பாக, சிறுநீரகத்தில் இருக்கும் சிறுநீர் தேங்கும் இடத்தில் இருக்கும் பொதுவான பிரச்சனைகளான கல் மற்றும் சதை வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள முடியும். இக்கருவி மூலம் கல் இருப்பின் கல்லை அகற்றலாம். பெரிய கல்லாக இருந்தால் லேசர் அல்லது அல்ட்ரா சவுண்ட் கருவி உதவியுடன் கல் உடைக்கப்பட்டு உடைக்கப்பட்ட கல் அகற்றப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சை ஆனது திறந்த முறைஅறுவை சிகிச்சையை விட எளிதாக இருப்பதால் நோயாளி நோயில் இருந்து விரைவில் குணமடைகிறார். இந்த சிறுநீரக உள்நோக்கியானது கற்களை அகற்றுவதோடு சதை வளர்ச்சி இருந்தால் அதை அகற்றுவதற்கோ அல்லது மாதிரி பரிசோதனைக்கு சதை எடுப்பதற்கோ உதவுகின்றது.
சிறுநீரக உள்நோக்கியால் செய்யப்படும் சிகிச்சை முறைகள்
இந்த அறுவை சிகிச்சை பொதுவாக முழு மயக்கத்தில் செய்யப்படுகிறது. மயக்கத்திற்கு பின் பாதிக்கப்பட்ட சிறுநீரகம் மேற்பக்கமாக வரும் படி, நோயாளி ஒரு பக்கமாக படுக்க வைக்கப்படுவர். இத்தருணத்தில்., அறுவை சிகிச்சைக்கு தேவையான இடம் சுத்தப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை தொடங்குவதற்கு முன்பே, சிறுநீர்ப்பை உள்நோக்கி மூலம் சிறுநீர் குழாயில் நீண்ட குழாய் ஒன்று பொருத்தப்படுகிறது. நெப்ரோஸ்கோப்பி சிகிச்சையின் போது இந்த குழாயின் வழியாக மாறுபடும் திரவம் செலுத்தி சிறுநீரகத்தின் இருப்பிடத்தையும் அதில் ஏற்படும் பிரச்சனைகளையும் பற்றியும் கண்டறியப்படுகிறது. இதற்குப் பின் தொடர் எக்ஸ்ரேவின் உதவியுடன் தேவைப்படும் இடத்திற்கு சிறுநீரக உள்நோக்கி செலுத்துவதற்கு தேவையான வழிகாட்டி கம்பி செலுத்தப்படுகிறது. இதற்குப் பின் வழிகாட்டி கம்பி உதவியுடன் சில குழாய்கள் செலுத்தப்பட்டு சிறுநீரக உள்நோக்கி செலுத்துவதற்கான பாதை அகலப்படுத்தப்படுகிறது. இத்தருணத்தில் கேமரா பொருத்திய சிறுநீரக உள்நோக்கி செலுத்தப்பட்டு சிறுநீரகத்தின் தேவையான பகுதியை ஆராயப்படுகிறது. குறிப்பாக., சிறுநீரக கல் பாதிப்பு அல்லது சிறுநீரக சதை வளர்ச்சி போன்றவை உறுதிப்படுத்தப்பட்டு அதற்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சிகிச்சை முறையை PCNL என்கிறோம். உரிய சிகிச்சைக்கு பின் சிறுநீரக உள்நோக்கி அகற்றப்படுகிறது. முடிவில் நீர் குழாயினுள் ஒரு வடிகால் குழாய் பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தப்பட்ட வடிகால் குழாய் 2 அல்லது 4 வாரங்களுக்கு பின் அகற்றப்படும். இந்த அறுவை சிகிச்சையின் போதும், அதற்கு பின்பும் நோய் எதிர்ப்பு மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் குளிர் காய்ச்சல் வந்தாலோ அல்லது சிறுநீரில் ரத்தம் கலந்து இருந்தாலோ மருத்துவ ஆலோசனை முக்கியமானதாகும். இந்த PCNL என்னும் சிறுநீரக உள்நோக்கி சிகிச்சையின் மூலம் வழக்கமாக செய்யப்படும் திறந்தமுறை அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம் இருப்பினும் நுண்ணுயிரியின் தாக்கம் ரத்தக் கசிவு மற்றும் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படுதல் போன்றவை இந்த சிகிச்சை முறையின் பின் விளைவுகள் ஆகும்.
லேப்ராஸ்கோபி முறையில் சிறுநீரக கற்கள் அகற்றுதல்
லேப்ராஸ்கோபி என்பது அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு நுண்ணிய சிகிச்சை முறையாகும். லேப்ராஸ்கோபி என்பது உடலின் வயிற்றுப் பகுதி திறக்கப்படாமல் குறிப்பிட்ட அறுவை சிகிச்சையை சாவி துவாரங்கள் வழியே செய்து முடிப்பதை குறிக்கும். சிறுநீரகம் மற்றும் சம்பந்தப்பட்ட உறுப்புகளை பாதிக்கும் முக்கிய வியாதியாக கருதப்படுவது கல் சம்மந்தப்பட்ட வியாதிகளாகும். பொதுவாக இந்த கல் சம்பந்தப்பட்ட வியாதிகள் சிறுநீர்ப்பை உள்நோக்கி அல்லது நீர் குழாய் உள்நோக்கி மூலமாகவோ சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையில் இயற்கை துவாரங்கள் வழியாக உள்நோக்கிகள் செலுத்தப்பட்டு கற்கள் அகற்றப்படுகின்றன. சில சமயங்களில் இந்த சிகிச்சைகள் பலனளிக்காவிட்டால் PCNL என்னும் சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய சிகிச்சை முறைகளின் மூலம் கற்கள் அகற்றப்பட முடியாவிட்டால் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை பயனுள்ளதாக அமையும். லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில் சிறுநீரகத்தில் இருக்கும் பெரிய கல்லும், நீர் குழாயில் சிக்கி இருக்கும் கல்லும் சுலபமாக வெளியேற்றலாம். PCNL மற்றும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையின் போது நீர் குழாய் உள்நோக்கி சிகிச்சை முறையும் கலந்து செய்யப்பட வேண்டி இருக்கும். ஏனெனில் PCNL மற்றும் லேப்ராஸ்கோபி சிகிச்சையின் போது நீர் குழாய் உள்நோக்கியின் உதவியுடன் நீர் குழாயில் வடிகால் குழாய் பொருத்தப்படும்.
சிறுநீரகத்திற்கு செய்யப்படும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையானது வயிற்றின் முன்புறம் மூலமாகவோ அல்லது பின்புறம் மூலமாகவோ செய்யப்படுகிறது. மயக்கத்திற்கு பின் நோயாளி ஒரு பக்கமாக படுக்க வைக்கப்பட்டு குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யப்படும் சிறுநீரகம் மேல் பக்கமாக இருக்கும் வகையில் படுக்க வைக்கப்பட்டு, 3 அல்லது 4 துவாரங்கள் வழியாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கற்கள் இருக்கும் இடத்தை பொறுத்து துவாரங்கள் அமைக்கப்படுகின்றன. பொதுவாக., சிறுநீரகத்தின் உள்ளிருக்கும் கல் அல்லது நீர் குழாயின் மேற்பகுதியில் இருக்கும் கற்கள் இந்த முறையில் அகற்றப்படுகின்றன. கல் இருக்கும் இடம் அறுவை சிகிச்சைக்கு முன்பே தெரியும் என்பதால் அந்த குறிப்பிட்ட இடத்தில் உள்ள சதைகள் பிரிக்கப்பட்டு பின் கல் இருக்கும் இடம் திறக்கப்பட்டு கற்கள் அகற்றப்படுகின்றன. கற்கள் அகற்றப்பட்ட பின் திறக்கப்பட்ட இடம் லேப்ராஸ்கோபி மூலமாகவே தைக்கப்படுகின்றன. பொதுவாக., சிறுநீரக சம்பந்தப்பட்ட இடங்களில் இருக்கும் கற்கள் சிறுநீர்ப்பை உள்நோக்கி அல்லது நீர் குழாய் உள்நோக்கி மூலம் அகற்றப்படுகின்றன. இந்த சிகிச்சை முறை முடியாத தருணத்தில் திறந்த முறை அறுவை சிகிச்சையே பரிந்துரைக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போதைய லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் திறந்தமுறை அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டு லேப்ராஸ்கோபி மூலமாகவே செய்து முடிக்கப்படுகின்றது.
இதனால் குறைந்த வலி மற்றும் சிறிய தழும்புடன் நோயாளி விரைவில் குணமடைகிறார். இந்த சிகிச்சை முறையிலும் சில பின் விளைவுகள் இருக்கலாம் குறிப்பாக கல் அகற்றுவதில் சிரமம், அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் இரத்த கசிவு, மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் சிறுநீர் கசிவு போன்றவை குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சையின் போது ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அத்தருணங்களில் லேப்ராஸ்கோபி சிகிச்சை முறையை திறந்த முறை அறுவை சிகிச்சைக்கு மாற்றி அறுவை சிகிச்சை முடிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சையின் போதும் அதற்குப் பின்பும் உரிய நோய் எதிர்ப்பு மருந்துகள் செலுத்தப்பட வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் சிறுநீர் கசிவை தடுக்கவே நீர் குழாயில் வடிகால் குழாய் பொருத்தப்படுகிறது இதை மீறி சிறுநீர் கசிவு ஏற்பட்டால் அது தானாகவே நின்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.