பித்தப்பை கல்
பித்தப்பை கல் என்பது பித்தப்பையில் உருவாகும் ஒரு அசாதாரணமான திடப்பொருள் ஆகும். இது மனிதனின் எந்த வயதிலும் உருவாகலாம். மேலும் இந்த நோயின் வெளிப்பாடு எந்த வயதிலும் தோன்றலாம். பித்தப்பையில் கல் உருவான உடனேயே பித்தப்பை கல்லின் வெளிப்பாடு தோன்ற அவசியமில்லை, பித்தப்பை கல் உருவாக்கத்திற்கும் நோயின் வெளிப்பாட்டிற்கும் உள்ள இடைவெளி சரியாக குறிப்பிட முடிவதில்லை.
பொதுவாக நோயாளியின் நோய் அறிகுறிகளை பித்தப்பையில் கல் இருப்பதை உணர்த்துகின்றன. நோயாளியின் நோய் அறிகுறிகள் பித்தப்பை கல் தொடர்புடையதாக இருந்தால் அல்ட்ரா சோனோகிராபி என்னும் ஸ்கேன் பரிசோதனை மூலம் பித்தப்பையில் கற்கள் இருக்கின்றதா அல்லது இல்லையா என கண்டறியப்படுகின்றன.
ஸ்கேன் பரிசோதனையின் போது பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அப்போதைய நோயாளியின் பொதுவான உடல்நிலை கண்டறியப்பட வேண்டும். அத்துடன், பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட மற்ற சிக்கல்கள் குறிப்பாக பித்தக் குழாய் கல் மற்றும் கணைய அழற்சி இருக்கின்றத என கண்டறிதல் மிக முக்கியம். ஏனெனில், பித்தப்பை கல் சம்பந்தப்பட்ட வேறு சிக்கல்கள் இருந்தால் பொதுவாக அவைகள் சரி செய்ய பட்டு பின் பித்தப்பை கல்லுக்கான பித்தப்பை அகற்றுதல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.
பித்தப்பை கற்கள் ஏற்படும் வயது:
பித்தப்பையில் பித்தப்பை கற்கள் எந்த வயதிலும் உருவாகலாம். ஆனால் பொதுவாக 30 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக கல் உருவாகி நீண்ட காலங்கள் கல்லின் வெளிப்பாடு தோன்றாமல் இருக்கலாம், சில சமயங்களில் வயிற்றிற்கு செய்யப்படும் “அல்ட்ரோசோனோகிராபி” என்ற ஸ்கேன் பரிசோதனையின் மூலம் பித்தப்பை கற்கள் தற்செயலாக கண்டறியப்படுகின்றன. இன்னும் சில சமயங்களில் பித்தப்பை கற்களின் சிக்கல்களான மஞ்சள் காமாலை அல்லது கணைய அழற்சி போன்றவையே பித்தப்பை கல்லின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.
பித்தப்பை கற்கள் ஆண் பெண் விகிதம்
பித்தப்பை கற்களை பொறுத்த வகையில் ஆண்களை விட பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். மதிப்பிடப்பட்ட ஆண் பெண் விகிதம் 1:3 ஆகும்.
பித்தப்பை கற்கள் உருவாகுவதற்கான காரணங்கள்
பித்தப்பை கற்கள் உருவாகுவதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை சொல்லி விட முடியாது. பித்தப்பை கல் உருவாக பல காரணங்களை சொல்லலாம். குறிப்பாக பித்தப்பையில் உள்ள பித்த நீரில் ஏற்படும் மாறுதல்கள் முக்கியமாக கொலஸ்ட்ரால் மற்றும் பிலிருபின் போன்ற பொருட்களின் விகித மாறுதல்கள் பித்தப்பையில் கல் உருவாக காரணமாகின்றன. மற்றும், பித்தப்பையின் அசைவில் ஏற்படும் மாற்றங்களும் பித்தப்பையில் கல் உருவாக ஒரு காரணமாக அமைகின்றது. பெண்களை பொறுத்தவரை உடலில் தொடர்ந்து நடைபெறும் ஹார்மோன்களின் மாற்றத்தால் கூட பித்தப்பையில் கற்கள் உருவாகலாம். மேலும், பித்தப்பையில் பித்தப்பை கல் உருவாக மிக முக்கியமான காரணம் பித்தப்பையில் ஏற்படும் தொடர் அழற்சியாகும். இந்த தொடர் அழற்சிக்கு மிக முக்கியமான காரணம் டைபாய்டு எனும் நுண்ணுயிரியின் தாக்கம் ஆகும்.
பித்தப்பை கல் உருவாக முக்கியமான காரணங்கள்:
A)பித்த நீரில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது
பித்தநீரில் இருக்கும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் பித்தப்பையில் மஞ்சள் நிற கற்கள் உருவாக காரணமாகின்றது. கல்லீரல் அதிகப்படியான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்தால் உற்பத்தி செய்யப்பட்ட கொலஸ்ட்ரால் பித்தநீரில் கலந்து இருக்கின்றன. அதிகப்படியாக கொலஸ்ட்ரால் உற்பத்தியாகும் போது பித்த நீரில் இருக்கும் பித்த உப்புக்கள் பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ராலை கரைப்பதற்கு போதுமானதாக இல்லாததால் மீதி இருக்கும் கொலஸ்ட்ரால் பித்தப்பையில் மஞ்சள் நிற கொலஸ்ட்ரால் கற்களாக மாறுகின்றன. இந்தியாவில் வெறும் கொலஸ்ட்ராலினால் உருவாகும் கற்களின் விகிதம் மிகக் குறைவே பொதுவாக கொலஸ்ட்ரால் பித்தப்பை கற்களுடன் பிலிருபின் நிறமிகளும் சேர்ந்து காணப்படுகின்றன. கொலஸ்ட்ரால் கற்கள் மஞ்சள் நிறமாகவும் கொலஸ்ட்ராலுடன் பிலிருபின் சேர்ந்த கற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்து பழுப்பு நிறம் வரை காணப்படுகின்றன.
B)பித்தநீரில் அதிக பிலிருபின் இருப்பது
பிலிருபின் என்ற நிறமி உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் மற்றும் மையோ குளோபின் சிதைவுகளால் உற்பத்தியாகின்றன. ரத்த சிதைவு மஞ்சள் காமாலை, தொடர் கல்லீரல் அழற்சி போன்ற வியாதிகளால் பிலிரூபின் உற்பத்தி அதிகமாகின்றது. இவ்வாறு உருவாகும் பிலிருபின் பித்த நீர் வழியாக வெளியேறுவதால் பிலிருபனின் உற்பத்தி அதிகமாகும் போது பித்த நீரில் இருக்கும் பிலிருபினின் அளவும் அதிகமாகின்றன. இச்சமயத்தில், பிலிருபின் அடங்கிய நிறமி கற்கள் உருவாகின்றன. இந்த நிறமி கற்களில் உள்ள நிறமிகளின் அளவை பொறுத்து அதன் நிறம் மாறுபடுகின்றன. குறிப்பாக முழுவதும் பிலிருபின் நிறமியால் ஆன கல் கறுப்பாகவும் பிலிருபினோடு கொலஸ்ட்ரால் சேர்ந்த கற்களின் நிறம் பழுப்பு நிறமாகவோ காணப்படுகின்றன கறுப்பு நிற கற்கள் கடினமானதாகவும் பழுப்பு நிற கற்கள் மென்மையானதாகவும் இருக்கும்.
பொதுவாக உணவு உண்டபின் முன் சிறு குடலில் இருக்கும் சீதமென் சவ்வு கோலிசிஸ்டோக்கனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. இந்த ஹார்மோன் தான் பித்தப்பையை சுருங்கி விரிய வைத்து பித்தப்பையில் இருக்கும் பித்தநீரை வெளியேற்ற மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. ஏதோ ஒரு காரணத்தினால், பித்தப்பையின் பித்தம் வெளியேற்றும் திறன் குறைந்து விட்டால் பித்த நீர் பித்தப்பையில் தேங்குகின்றது. இவ்வாறு தொடர்ந்து தேங்கும் பித்த நீர் பித்தப்பையில் கல் உருவாக காரணமாகின்றது. பெண்களை பொறுத்தவரை தொடர்ந்து ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களால் குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்ட்ரானின் மாற்றங்களால் பித்தப்பையின் அசைவும் மாறுபடுகின்றது. இந்த பித்தப்பையின் அசைவு மாற்றம் பித்தப்பையில் கற்கள் உருவாக ஒரு காரணமாக அமையலாம். பொதுவாக பித்தப்பை ஆரோக்கியத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பித்தப்பை சுருங்கி விரிவது நல்லது. இவ்வாறு குறிப்பிட்ட இடைவெளியில் பித்தப்பை சுருங்கி விரியாத தருணத்தில் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன. இன்னும் குறிப்பாக வயிற்றின் மேற்பகுதியில் செய்யப்படும் சில அறுவை சிகிச்சைக்கு பின்பு பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மை மாறலாம். குறிப்பாக முக்கியமான அறுவை சிகிச்சை வயிற்று புண்ணுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும் இந்த அறுவை சிகிச்சையில் உடலில் இருக்கும் இரண்டு வேகஸ் நரம்புகளும் துண்டிக்கப்படுகின்றது. இதனால் பித்தப்பைக்கு வரும் நரம்புகளும் பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மையும் குறைந்து பித்தப்பையில் கற்கள் உருவாக ஒரு காரணமாக அமைகின்றன.
D)ஈஸ்ட்ரோஜன் மற்றும் பித்தப்பை கற்கள்
உடலில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியானால் அது அதிக கொலஸ்ட்ரால் உற்பத்தியாவதற்கு ஒரு காரணமாக அமைகின்றது. இவ்வாறு உற்பத்தியாகும் கொலஸ்ட்ரால் பித்தநீரில் உள்ள பித்த உப்புக்களால் நடுநிலை யாக்கப்படுகின்றன. ஆனால் கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகமாக இருந்தால் அதை பித்த உப்புகளால் நடுநிலை படுத்த முடியாமல் போகலாம். இத்தருணத்தில் எஞ்சி இருக்கும் பித்த நீர் கொலஸ்ட்ரால், கொலஸ்ட்ரால் கற்களாக பித்தப்பையில் உருவாகின்றது. இக்கற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும்.
E)பித்தப்பையின் தொடர் நுண்ணுயிரியின் தாக்கம்
பித்தப்பையில் இருக்கும் தொடர் நுண்ணுயிரியின் தாக்கம் பித்தப்பையில் கற்கள் உருவாக ஒரு காரணமாக இருக்கலாம். குறிப்பாக டைபாய்டு வியாதியை உருவாக்கும் பாக்டீரியா சால்மோனெல்லா டைபை என்னும் பாக்டீரியா மிக முக்கியமானதாகும். டைபாய்டு அல்லது குடல் காய்ச்சல் என்பது மனிதனின் குடலை தாக்கும் ஒருவித நோயாகும் டைபாய்டு நோயை உருவாக்குவது சால்மோனெல்லா டைபை என்னும் நுண்ணுயிரி ஆகும். பொதுவாக டைபாய்டு நோய் ஆனது உண்ணும் உணவு வழியாகவோ அல்லது குடிக்கும் நீர் வழியாகவோ பரவுகின்றது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்று வலி வரலாம். சில சமயங்களில், மஞ்சள் காமாலை கூட வரலாம். இந்த நோய் தெற்கு மத்திய ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் அதிகமாக காணப்படுகின்றன. சில சமயங்களில் இந்த நோயின் தாக்கம் அதிகம் இருந்தால் குடலில் புண் ஏற்பட்டு குடலில் ஓட்டை கூட வரலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்த டைபாய்டு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவ்வாறு இருப்பின் இந்த பாக்டீரியா ரத்தத்தில் கலந்து செப்டி சீமியா என்னும் ஒரு பெரு விளைவை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தான நிலை வரலாம். டைபாய்டு பாக்டீரியா சரியாக பாதுகாக்கப்படாத அல்லது சுத்தமற்ற உணவு பொருட்களை உண்பதாலோ அல்லது சுத்தமற்ற நீரை பருகுவதாலோ பரவுகின்றது. இவ்வாறு உணவு வழியாக பரவும் பாக்டீரியா சிறுகுடலை அடைகின்றது.அங்கு சிறுகுடலின் மென் சவ்வு வழியாக நுழைந்து ரத்தத்தில் கலக்கின்றன. இவ்வாறு ரத்தத்தில் கலந்த பாக்டீரியா பெருகி டைபாய்டு நோயை உருவாக்குகின்றன. பொதுவாக சிறுகுடல், கல்லீரல், எலும்பின் உட்பகுதி மற்றும் பித்தப்பை போன்ற உறுப்புகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. டைபாய்டு பாக்டீரியா கல்லீரலையும் சிறு குடலையும் இணைக்கும் பித்த குழாய்கள் வழியாகவோ அல்லது ரத்தக்குழாய்களின் வழியாகவோ பித்தப்பையை அடைகின்றன. இந்த நோய் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் உரிய சிகிச்சை முறைகள் நோயிலிருந்து விடுபட மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும் சில சமயங்களில் குறிப்பாக 3-5 சதவிகிதம் நபர்களில் இந்த பாக்டீரியா பித்தப்பையை தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்குகின்றது. இது பின் நாள்பட்ட தொற்றாக மாறுகின்றது. டைபாய்டு பாக்டீரியா மனிதனை மட்டுமே பாதிக்கும் நுண்ணுயிரியாகும் தொடர் அழற்சியால் பாதிக்கப்படும் போது குறிப்பாக பித்தப்பையில் இருக்கும் பாக்டீரியா பாதிக்கப்பட்டவரின் மலம் வழியாகவும் ரத்தத்தில் இருக்கும் பாக்டீரியா பாதிக்கப்பட்டவரின் சிறுநீர் வழியாகவும் பரவுகின்றது. சில சமயங்களில் இந்த நாள்பட்ட பாக்டீரியா பல வருடங்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் குறிப்பாக டைபாய்டு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 25 சதவீதம் நபர்கள் நோயின் கடுமையான தாக்கத்திற்கு ஆளாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டைபாய்டு நோயின் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் நடத்தப்பட்ட தொற்றுநோய் ஆய்வுகள் இந்த தொற்று நோய்க்கும் பித்தப்பை கற்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக நாள்பட்ட டைபாய்டு தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்ட 90% நபர்களுக்கு பித்தப்பையில் கற்கள் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரபியல் காரணிகள்
பித்தப்பை கற்கள் ஒரே குடும்பத்தை சார்ந்த ரத்தம் தொடர்புடையவர்களிடம் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக அம்மா மகள் அப்பா மகன் அக்கா தங்கை போன்றவர்களிடம் காணப்படுவதோடு இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக பித்தப்பை கற்கள் காணப்படுகின்றன. பித்தப்பை கல் நோய்க்கு மரபணு சம்பந்தம் இருக்கலாம் என்று சொல்வதற்கு இதுவே சான்று.
பித்தப்பை கல் உருவாகவதற்கான பொது காரணிகள்:
பித்தப்பை கற்கள் உருவாவதற்கு ஒரு குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல் இருந்தாலும் கீழே கூறப்படும் காரணங்கள் கல் உருவாவதை அதிகப்படுத்துகின்றன.
1) பெண்ணாக இருப்பது
2) உடல் பருமன் அதிகமாக இருப்பது
3) சரீர உழைப்பில்லாத நிலை
4) கர்ப்பமாக இருப்பது
5) உணவில் அதிகமாக கொழுப்பு சேர்ப்பது
6) அதிக கொலஸ்ட்ரால் உணவை உண்ணுதல்
7) நார்ச்சத்து குறைந்த உணவை உண்ணுதல்
8) குடும்பத்தில் பித்தப்பை கற்கள் பாதிப்பு இருப்பது
9) சர்க்கரை நோய் இருப்பது
10) மிக விரைவாக எடை குறைதல்
11) கல்லீரல் நோய் இருப்பது குறிப்பாக கல்லீரல் சுருக்கம்