பித்தப்பை கல்லின் பொது வெளிப்பாடுகள்
வயிற்று வலி
பித்தப்பை கல் நோயின் மிக முக்கியமான வெளிப்பாடு வயிற்று வலியாகும். பொதுவாக உணவுக்கு பின், குறிப்பாக கொழுப்புச்சத்து மிகுந்த உணவுக்கு பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி இருக்கும். இந்த வலி விட்டுவிட்டு வருவதோடு சில நொடிகள் அதிகமாகவும் சில நொடிகள் குறைவாகவும் இருக்கும். இவ்வாறு வயிற்றின் மேல் பகுதியில் வரும் வலி வயிற்றின் வலது பக்கத்திற்கும் சில சமயங்களில் முதுகு பக்கத்திற்கும் பரவலாம். இவ்வாறு பரவும் இத்தருணத்தில் மருத்துவர் வயிற்றின் வலது பக்கத்தை அழுத்தும் போது மிக அதிகமாக வலி இருக்கலாம். இதை மர்ஃபி சைன் என்று அழைக்கிறோம் மர்ஃபி சைன் இருந்தால் அந்த நோயாளிக்கு பித்தப்பையில் கல் இருப்பதோடு பித்தப்பையில் நுண்ணுயிரின் தாக்கம் இருப்பதையும் யூகிக்க முடியும்.
வாந்தி
வயிற்று வலியுடன் கூடிய வாந்தி குறிப்பாக உணவுக்குப் பின் மேல் வயிற்றில் வலி மற்றும் வாந்தி பித்தப்பையில் இருக்கும் கல்லின் வெளிப்பாடாக இருக்கலாம். நடுத்தர வயதில் இருக்கும் பெண்களுக்கு இவ்வாறு இருப்பது பித்தப்பை கல்லின் வெளிப்பாடாக இருக்கலாம். சில சமயங்களில் சுகாதாரமற்ற அல்லது ஒத்து வராத உணவை உண்பதாலும் இவ்வாறு வயிற்று வலியுடன் வாந்தி வரலாம் ஆனால் பித்தப்பை கல் வலியா அல்லது ஒத்து வராத உணவு சம்பந்தப்பட்ட வலியா என அறிய வயிற்றுக்கு செய்யப்படும் அல்ட்ராசோனோகிராபி என்ற ஸ்கேன் பரிசோதனை மிகவும் உதவியாக இருக்கும்.
காய்ச்சல்
பித்தப்பையில் இருக்கும் கல் பித்தப்பையின் வாய்பகுதியை அடைந்து பித்தப்பையில் இருந்து பித்த நீர் வெளியேறுவதை தடுக்கும் போது வயிற்றின் மேல் பகுதியில் வலி வருகிறது இந்நிலை சில மணி நேரம் நீடிக்கும் ஆனால் பித்தப்பையில் நுண்ணுயிரின் தாக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு பித்தப்பையில் நுண்ணுயிரியின் தாக்கம் வரும்போது வயிற்று வலியுடன் வாந்தி மற்றும் காய்ச்சல் வரலாம். நுண்ணுயிரியின் தன்மையை பொறுத்து காய்ச்சலின் தாக்கம் மாறுபடலாம். பித்தக் குழாயில் இருக்கும் கல் கூட பித்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி காய்ச்சலை உண்டாக்கலாம். இந்த காய்ச்சலுக்கு காரணம் பித்தப்பை கல்லா அல்லது பித்த குழாய் கல்லா என்பதை எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் கண்டறியலாம். பித்தப்பை கல்லின் வெளிப்பாட்டில் காய்ச்சல் முதலில் வருவதில்லை வயிற்று வலி மற்றும் வாந்திக்கு பின் சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்து காய்ச்சல் வருவதை காணலாம்.
மஞ்சள் காமாலை
பித்தப்பை கல்லின் ஒரு முக்கியமான வெளிப்பாடு மஞ்சள் காமாலையாக இருக்கலாம். சாதாரணமாக ரத்தத்தில் உள்ள பித்த நிறமியின் அளவு 1.2 மில்லி கிராம் சதவீதம் ஆகும். ரத்தத்தில் உள்ள பித்த நிறமியின் அளவு 2 மில்லி கிராம் சதவீதத்தை தாண்டினால் மஞ்சள் காமாலை என்று அழைக்கிறோம். ரத்தத்தில் உள்ள பித்த நிறமியின் அளவு 2.5 மில்லி கிராம் சதவீதத்தை அடையும்போது கண் மஞ்சளாக இருக்கும். 5 மில்லி கிராம் சதவீதத்தை அடையும்போது தோல் பகுதியில் மஞ்சள் நிறம் தெரியலாம்.
அதிக நாடித்துடிப்பு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம்
பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மஞ்சள் காமாலையுடன் காய்ச்சல் மற்றும் வயிற்று வலியுடன் அதிக நாடித்துடிப்பும் குறைந்த இரத்த அழுத்தமும் இருந்தால் அது பித்த நீரில் ஏற்படும் நுண்ணுயிரியின் தாக்கத்தை காட்டுகிறது மேலும் இவை அனைத்தும் அதிகரித்துக் கொண்டே போகுமமானால் அது நுண்ணுயிரியின் தாக்கத்தை ஓரளவு உறுதிப்படுத்துவதோடு, உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் காட்டுகின்றன.
மாறுபட்ட உணர்திறன்
தொடர்ந்து ஏற்படும் நுண்ணுயிரியின் தாக்கம் அதிக நாடித்துடிப்பை உருவாக்குவதோடு இரத்த அழுத்தத்தையும் குறைக்கின்றன இது மூளைக்குப் போகும் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றது இதனால் நோயாளியின் உணர்திறனில் மாற்றம் ஏற்படுகிறது இந்நிலை மிகவும் துரிதமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
பித்தப்பை அழற்சியின் சம்பந்தப்பட்ட பிற அறிகுறிகள்
பித்தப்பை அல்லது பித்தக் குழாய் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் போது இதில் இருக்கும் தொற்று மற்ற உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கின்றன. குறிப்பாக இது சிறுநீரகத்தை பாதித்தால் ரத்த சுத்திகரிப்பில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியாடினின் அளவு அதிகமாகலாம். இந்த நுண்ணுயிரிகள் ரத்தத்தை பாதிக்கும் ஆனால் ரத்தம் உறையும் சக்தியில் மாற்றம் ஏற்படலாம். இன்னும் குறிப்பாக இந்த நுண்ணுயிரிகள் நுரையீரலை பாதித்து ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைக்கலாம். இவ்வாறு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் அதற்கு காரணம் பித்தப்பை மற்றும் பித்தக் குழாயில் உள்ள நுண்ணுயிரின் தாக்கம் தீவிரமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பித்தப்பை கற்களை கண்டறிய மருத்துவர் பரிசோதனை
1) வயிற்றில் தொட்டால் வலிக்கும் இடங்கள்
வயிற்றின் வலது புறம் மேல்பகுதியில் சிறு அழுத்தம் கொடுத்தால் வலி இருப்பின் அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்களும் அத்துடன் நுண்ணுயிரின் தாக்கமும் ஆகும். இதற்கு மர்ஃபி சைன் என்று பெயர்.
2) வயிற்றில் கட்டி தென்படுதல்
வயிற்று வலியால் அவதிப்படுவோரின் வயிற்றின் மேல் பகுதியில் பரிசோதனையின் போது கட்டி இருப்பது தெரிய வரலாம். இந்த கட்டி மிகுந்த வலியுடன் இருப்பின் அதற்கு ஒரு முக்கியமான காரணம் பித்தப்பையின் நுண்ணுயிரியின் தாக்கமாகும். பித்தப்பையை நுண்ணுயிர்கள் அதிகமாக தாக்கும் போது பித்தப்பை அழுகவோ அல்லது வெடிக்கவோ செய்யலாம். இந்நேரங்களில் பித்தப்பையை சுற்றி இருக்கும் குடல் மற்றும் கொழுப்பு சார்ந்த உறுப்புகள் பித்தப்பையை மூடி மறைப்பதால் அது ஒரு கட்டி போல் கைக்கு தென்படுகின்றது.
3) வயிற்று உள் அழற்சி பெரிட்டோனைட்டிஸ்
வயிற்று வலியுடன் வரும் நோயாளியை வயிற்று பரிசோதனை செய்யும் போது தொடும்போது வலி அதிகமாக இருக்கலாம். மற்றும் வயிறு இறுக்கமாக இருக்கலாம். இவ்வாறு இருப்பின் அது குடலினுள் இருக்கும் நுண்ணுயிரிகள் வயிற்றினுள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதற்கு முக்கியமான காரணங்கள் குடல் பகுதியில் ஏற்படும் ஓட்டையாகும். குறிப்பாக வயிற்றுப்புண்ஓட்டை, குடல் கட்டி ஓட்டை, டைபாய்டு காய்ச்சல் மற்றும் பித்தப்பை அழற்சியால் ஏற்படும் பித்தப்பை ஓட்டை போன்றவைகள் முக்கியமான காரணங்களாகும்.
4) உடல் வெப்பநிலை
வயிற்று வலியுடன் வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் உயர்ந்த உடல் வெப்பநிலை பித்தப்பை சார்ந்த உறுப்புக்களில் நுண்ணுயிரியின் தாக்கம் இருப்பதை வெளிப்படுத்துகின்றது.
5 ) மஞ்சள் காமாலை
வயிற்று வலியுடன் வரும் நபருக்கு பித்தப்பை கற்களோடு மஞ்சள் காமாலை இருப்பின் அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்கள் அல்லது தீவிர நுண்ணுயிரியின் தாக்கமாகும்.
6) இரத்த அழுத்தம்
பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்டவருக்கு சாதாரண இரத்த அழுத்தத்தை விட குறைவாக இருப்பின் அது நுண்ணுயிரியின் தொடர் தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.
7) நாடித்துடிப்பு
பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்டவருக்கு சாதாரண நாடித்துடிப்பை விட அதிகமாக இருப்பின் அது தொடர் நுண்ணுயிரியின் தாக்கத்தை உறுதிப்படுத்துவதோடு மற்ற உறுப்புகளில் பாதிப்பு இருக்கலாம் என்பதை உணர வைக்கிறது.
8) நோயாளியின் உணர்திறன்
நோயாளியின் உணர்திறனை கண்டறிதல் மிக முக்கியமாகும். சாதாரணமான நுண்ணுயிரியின் தாக்கத்தின் நோயாளியின் உணர்திறனில் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை நோயாளியின் உணர்திறனில் பாதிப்பு ஏற்பட்டால் அது உடலில் உள்ள பல உறுப்புகளின் பாதிப்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ளலாம்.