blog-post-image

பித்தப்பை கற்கள் மஞ்சள் காமாலை காரணங்கள்

Posted on 2025-05-09 13:32:48 by Dr. Sathish

பித்தப்பை கற்கள் மஞ்சள் காமாலை காரணங்கள்

பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்டவருக்கு மஞ்சள் காமாலை இருக்கும் என்றால் அதற்கு பல காரணங்கள் சொல்லலாம் பித்தப்பையில் இருக்கும் கல் பித்தக் குழாய்க்குள் நழுவி விழுவதால் பித்த குழாய் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை வருவதே  மிக முக்கியமான காரணமாகும். இவ்வாறு வரும் மஞ்சள் காமாலையில் வயிற்று வலி வாந்தி மற்றும் குளிர் காய்ச்சல் சேர்ந்து இருக்கலாம் எனவே பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்ட ஒருவர் மஞ்சள் காமாலை மற்றும் குளிர் காய்ச்சலுடன் வந்தால் அதற்கு காரணம் பித்தக்குழாய் கல் ஏற்படுத்தும் பித்த குழாய் அடைப்பு ஆகும். இவ்வாறு வரும் நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை ஏறி இறங்கும். பித்தக் குழாயின் கீழ்ப்பகுதியில் வரும் கல் பித்தக் குழாயின் வாய்ப்பகுதியை அடைகின்றது. இதனால் பித்தக்குழாய் விரிவடைகின்றது விரிவடைந்த பித்தக் குழாயின் கீழ் இருக்கும் கல் விரிவடைந்த பித்தக் குழாயின் மேல் பகுதிக்கு வருகின்றது. எனவே பித்தம் சிறுகுடலில் வழிய ஆரம்பிக்கின்றன. இதனால் மஞ்சள் காமாலை குறைகின்றது. இதுவே பித்த குழாய் கல்லினால் ஏறி இறங்கும் மஞ்சள் காமாலை நோய்க்கு காரணமாகும்.

இரத்த சிதைவு மஞ்சள் காமாலை பித்தப்பையில் கல் உருவாக காரணமாவதோடு மஞ்சள் காமாலை வருவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இரத்த சிதைவு மஞ்சள் காமாலையில் அதிக அளவு இரத்த சிவப்பணுக்கள் சிதைகின்றன.

இது இளம் வயதில் அதிகமாக காணப்பட்டாலும் எந்த வயதிலும் வெளிப்படலாம். கன்ஜெனிட்டல் ஸ்பிரோ சைட்டோஸிஸ் மற்றும் சிக்கில் செல் அனிமியா போன்ற வியாதிகள் ரத்த சிதைவு மஞ்சள் காமாலை நோய்க்கு உதாரணங்களாகும். ரத்த சிதைவு மஞ்சள் காமாலை பித்தப்பை கற்களுடன் மஞ்சள் காமாலை வருவதற்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். பித்தப்பை கல்லுடன் மஞ்சள் காமாலை வருவதற்கு மூன்றாவது முக்கிய காரணம் பித்தப்பையில் ஏற்படும் தீவிர நுண்ணியரின் தாக்கமாகும். பித்தப்பையில் உள்ள கல் பித்தப்பையின் வாய்பகுதியை அடைக்கும் போது பித்தப்பையில் நுண்ணுயிரியின் தாக்கம் அதிகரிக்கிறது. இதனால் பித்தப்பையின் மென் சவ்வு பாதிப்பு ஏற்பட்டு பித்தப்பையில் இருக்கும் நுண்ணுயிரிகள் ரத்தத்தோடு கலப்பதோடு பித்தமும் ரத்தத்தோடு கலக்கின்றன. இது மஞ்சள் காமாலை உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. இதில் மஞ்சள் காமாலையின் அளவு குறைவாக இருந்தாலும் நோயின் வீரியம் அதிகமாக இருக்கும். பித்தப்பை கற்கள் உள்ளவர்களுக்கு மஞ்சள் காமாலைக்கான வேறு சில காரணங்களும் உள்ளன. இதில் முக்கியமானவை தொடர் மதுப்பழக்கம் மற்றும் வைரஸ்களால் ஏற்படும் கல்லீரல் அழற்சி ஆகும். தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மஞ்சள் காமாலை வருவதோடு கல்லீரல் சுருக்கம் வியாதியும் வருகின்றது. இந்நிலையில் பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்டால் பித்தப்பை கற்களும் தொடர் மதுப்பழக்கமும் மஞ்சள் காமாலை உருவாக காரணமாகலாம். எனவே மஞ்சள் காமாலையுடன் பித்தப்பை கற்கள் இருந்தால் அதற்கு காரணம் பித்தப்பை கற்களா அல்லது தொடர் மதுப்பழக்கமா என கண்டறிவது மிகவும் முக்கியம். இத்துடன் வைரசால் ஏற்படும் கல்லீரல் அழற்சியாலும் மஞ்சள் காமாலை வரலாம். வைரசால் வரும் கல்லீரல் அழற்சியில் பசியின்மை, குமட்டல், காய்ச்சலுடன் குமட்டல், காய்ச்சலுடன் மஞ்சள் காமாலை வரலாம். வலி இருப்பின் மிதமாகவே இருக்கும். ஆனால் பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட மஞ்சள் காமாலையில் மிக அதிகமான வலியுடன் வாந்தி மற்றும் காய்ச்சல் வரலாம். இத்துடன் மஞ்சள் காமாலையும் வரலாம். எனவே பித்தப்பை கற்கள் மற்றும் மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவருக்கு மஞ்சள் காமாலையின் காரணம் பித்தப்பை கற்களா அல்லது வைரசால் ஏற்படும் கல்லீரல் அழற்சியாலும் மஞ்சள் காமாலை வரலாம். வைரசால் வரும் கல்லீரல் அழற்சியா என வித்தியாசப்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு அறுவை சிகிச்சையும் வைரசால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்கு மருத்துவ சிகிச்சையும் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.