blog-post-image

பித்தப்பை கற்கள்- மருத்துவரை சந்திப்பது எப்போது

Posted on 2025-05-12 02:44:53 by Dr. Sathish

பித்தப்பை கற்கள்- மருத்துவரை சந்திப்பது எப்போது

பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் வெளிப்பாடுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நோயின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கும். சிலருக்கு உணவுக்கு பின் அஜீரணத்தில் ஆரம்பித்து வயிற்று வலி வாந்தி காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை கூட வரலாம். பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீழே குறிப்பிடப்படும் நோய் அறிகுறிகள் இருந்தால் சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

1) அஜீரணம்

அஜீரணம் என்பது உணவுக்குப் பின் ஜீரணத் தன்மை குறைவாக இருப்பதை குறிக்கும். இது ஜீரண மண்டல சம்பந்தப்பட்ட எந்த வியாதியிலும் வரலாம். எனவே, பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்டவருக்கும் அஜீரணம் வரலாம். எனவே பித்தப்பை கல் உடன் அஜீரணம் இருப்பின் அதற்கு வேறு காரணங்களான இரைப்பை அழற்சி,  ஜீரண மண்டல புற்று வியாதி போன்றவை இருக்கிறதா என்பதை ஆராய வேண்டியது முக்கியம். வேறு எந்த வியாதியும் இல்லாத தருணத்தில் பித்தப்பை கற்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

2) பித்தப்பை கல் வலி

பித்தப்பை கல் வலி என்பது பித்தப்பை கல்லின் மிக முக்கியமான வெளிப்பாடு ஆகும். பித்தப்பை கல்லின் வலி வயிற்றின் மேல் பகுதி மற்றும் நடுப்பகுதியில் உருவாகின்றது. இந்த வலி முதுகு பக்கத்திற்கு கூட பரவலாம். குறிப்பாக வலியின் ஆரம்பம் கொழுப்பு சத்து மிகுந்த உணவுக்கு பின்னாக இருக்கலாம். இது திடீர் வலியோடு விட்டுவிட்டு வரும் வலியாகும். இந்த வலிக்கு காரணம் பித்தப்பையில் இருக்கும் கல் பித்தப்பையின் வாய் பகுதியை அடைப்பதாக இருக்கலாம். அல்லது பித்த குழாயின் கீழ்ப்பகுதியை அடைப்பதாகவும் இருக்கலாம். பித்தப்பையின் வாய்பகுதியில் ஏற்படும் அடைப்பு ஆறு மணி நேரத்திற்கு மேல் இருக்குமானால் பித்தப்பையில் நுண்ணுயிரியின் தாக்கம் ஏற்பட்டு பித்தப்பை அழற்சி  உருவாகின்றது. இதை திடீர் பித்தப்பை அழற்சி  என கூறுகின்றோம்.

பொதுவாக உணவுக்கு பின் பித்தப்பை சுருங்கி விரியும் பித்தப்பை கற்கள் பித்தப்பையின் வாய் பகுதியை அடைப்பதால் உணவுக்குப் பின் பித்தப்பை சுருங்கி விரியும் போது பித்தப்பையில் உள்ள பித்தம் வெளியேற முடியாமல் போகும். இத்தருணத்தில் பித்தப்பையின் உள் அழுத்தம் அதிகமாகி அதிக வலியை உருவாக்குகின்றது. பித்தப்பை விட்டு விட்டு சுருங்கி விரிவதால் வலியும் விட்டுவிட்டு இருக்கும்.

3) திடீர் பித்தப்பை அழற்சி

பொதுவாக பித்தப்பையின் வாய்பகுதியை பித்தப்பையின் கற்கள் அடைப்பதால் பித்தப்பை அழற்சி  உருவாகின்றது. பித்தப்பையின் வாய்பகுதியில் அடைப்பு ஏற்படும்போது பித்தப்பையில் வீக்கம் ஏற்படுவதோடு பித்தப்பையில் பித்தம் தேங்கி நிற்கும். அவ்வாறு தேங்கி இருக்கும் பித்தம் பித்தப்பையில் நுண்ணுயிரியின் தாக்கம் வருவதற்கு காரணமாகின்றன. பித்தப்பையின் வாய்ப்பகுதி அடைப்பு வருவதற்கு மிக முக்கியமான மற்றும் பொதுவான காரணம் பித்தப்பை கற்கள் ஆகும். பித்தப்பையில் இருக்கும் கல் பித்தப்பையின் கழுத்து பகுதியில் இருந்து பித்தப்பையின் வாய்பகுதியை அடைகின்றன. பித்தப்பையின் வாய்பகுதியில் அடைப்பு ஏற்பட்ட சுமார் ஆறு மணி நேரத்திற்கு பின்பு பித்தப்பை அழற்சி வருகின்றது. சில சமயங்களில் உணவுக்கு பின் பித்தப் பையின் வாய் பகுதியை அடைக்கும் கல் வலியை உருவாக்கும். ஆனால் சிறிது நேரத்தில்  கல் பித்தப்பைக்கு திரும்பி வந்துவிடும். இத்தருணத்தில், வலி குறையலாம். ஆனால் ஒவ்வொரு உணவுக்கு பின்னும் பித்தப்பை கல் பித்தப்பையின் வாயை அடைத்து உணவுக்கு பின் வலி என்ற நிலையை கொண்டு வரலாம். பித்தப்பையின் வாயை அடைக்கும் கல் பித்தப்பைக்கு திரும்பி வராமல் அங்கேயே இருக்குமானால் மட்டுமே திடீர் பித்தப்பை அழற்சி  வருகின்றது.

பித்தப்பையின் வாய்பகுதியை அடைக்கும் கற்கள் பின்னோக்கி வருவது போல முன்னோக்கி நகர்ந்து பித்தக் குழாயை அடைகின்றன. இவ்வாறு பித்தக் குழாயை அடையும் கற்கள் பித்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி வலியுடன் மஞ்சள் காமாலை உருவாக காரணமாகின்றன. பித்தப்பை கற்கள் பித்தப்பை வாய்ப்பகுதியை அடைத்தாலோ அல்லது பித்தக் குழாயை அடைத்தாலோ வரும் வலி விட்டு விட்டு வருவதோடு மிக கடினமாக இருக்கும். இந்த வலியை தாங்கும் சக்தி பெரும்பாலான நோயாளிக்கு இல்லாமல் இருப்பதால் நோயாளிகள் அவசரமாக  மருத்துவமனைக்கு வந்து மருத்துவ ஆலோசனையை பெறுகின்றனர். இந்த வலி முதுகுப் பக்கத்திற்கு பரவுவதோடு வலது தோள்பட்டைக்கும் பரவலாம். இச்சமயத்தில் நுண்ணுயிரியின் தாக்கம் அதிகமாக இருந்தால் காய்ச்சல் வரலாம்.

4)தொடர் பித்தப்பை அழற்சி

கொழுப்புச்சத்து மிகுந்த உணவுக்கு பின் வரும் வயிற்று வலிக்கு காரணம் பித்தப்பை கற்கள் ஆக இருக்கலாம். பொதுவாக சில நோயாளிகள் கொழுப்புச்சத்து மிகுந்த உணவுக்கு பின் வயிற்று வலி வருவதால் கொழுப்புச்சத்து மிகுந்த உணவை தவிர்ப்பதை பார்க்கிறோம். பித்த குழாயில் இருக்கும் கற்கள் கூட இம்மாதிரியான வயிற்று வலியை உருவாக்கலாம்.  இதற்கு காரணம் கொழுப்புச்சத்து மிகுந்த உணவு வகைகள் பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மையை  அதிகரிப்பதாலும், பித்தப்பையின் வாய்பகுதியை அடைப்பதாலும் பித்த குழாயில் இருக்கும் கற்கள் பித்தக்குழாயின்  கீழ் பகுதியை அடைப்பதாலும் தாங்க முடியாத கடின வயிற்றுவலி உருவாகின்றன.

5) பித்தப்பை சீழ்

பித்தப்பை சீழ் என்பது பித்தப்பை அழற்சியால் ஏற்படும் ஒரு நோயாகும். பித்தப்பையின் வாய்பகுதி பித்தப்பை கல்லால் அடைபட்டு பித்தப்பை  அழற்சி உருவாகும்போது உரிய அறுவை சிகிச்சை செய்யப்படாவிட்டால் பித்தப்பையில் நுண்ணுயிரியின் தாக்கம் அதிகரித்து அது சீழாக மாறுகின்றது. இவ்வாறு உருவாகும் பித்தப்பை சீழால் தொடர் வயிற்று வலி இருப்பதோடு காய்ச்சலும் உருவாகின்றது சர்க்கரை வியாதி இருப்போருக்கு பித்தப்பையில் சீழ் வைக்கும் தன்மை அதிகரிப்பதோடு சில சமயங்களில் வலியின் தன்மை குறைவாக இருக்கலாம். ஏனெனில் நீரழிவு நோய் இருப்பவர்களுக்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பும். உடலில் ஏற்படும் தடுப்பு சக்தியின் குறைபாடும் மிக முக்கிய காரணங்களாகும்.

6) பித்தப்பை அழுகுதல்

இதுவும் பித்தப்பை அழற்சியால் ஏற்படும் ஒரு விளைவாகும் நீண்ட நாள்பட்ட சர்க்கரை வியாதி ரத்த அழுத்தம் வியாதி, மற்றும் இருதய வியாதி உடையவர்களுக்கு இரத்த குழாய்களில் இரத்த ஓட்டம் குறைவதால் குறிப்பாக பித்தப்பைக்கு செல்லும் இரத்த குழாயில் இரத்த ஓட்டம் குறைவதால் பித்தப்பை அழுகுகின்றது. இவ்வாறு அழுகிய பித்தப்பை, பித்தப்பையின் உயிரற்ற நிலையை காட்டுகின்றது. இவ்வாறு அழுகிய பித்தப்பையால் பித்தப்பையில் நுண்ணுயிரியின் தாக்கம் அதிகரிப்பதால் உடலில் உள்ள மற்ற உறுப்புக்களையும் பாதிக்கலாம்.

7) பித்தப்பையில்  ஓட்டை விழுதல்

பித்தப்பை கற்களால் பித்தப்பை அழுகும் போது, பித்தப்பையில் ஓட்டை விழலாம். குறிப்பாக நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் நோய் இருக்கும் போது பித்தப்பைக்கு இரத்த ஓட்டம் குறைவதால் பித்தப்பை அழுகி ஓட்டை விழுகின்றது. மற்றும் பித்தப்பையின் வாய்பகுதியில் அடைப்பட்டிருக்கும் கல்லால் பித்தப்பையில் உள்ள பித்த நீர் வெளியேற முடியாமல் ஆகின்றது இத்தருணத்தில் பித்தப்பை தொடர்ந்து சுருங்கி விரிவதால் பித்தப்பையில் உள்ள அழுத்தம் அதிகமாகி பித்தப்பையில் ஓட்டை விழுகின்றது.

சில சமயங்களில் பித்தப்பை வாய் பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் கல் பித்தப்பையை அரித்து ஓட்டையை ஏற்படுத்தி பக்கத்தில் இருக்கும் உறுப்புகளான பித்த குழாய் அல்லது முன் சிறு குடலுக்கு செல்கின்றன.

பித்தப்பையில் ஓட்டை ஏற்பட்டால் பித்தப்பையில் இருக்கும் பித்த நீர் வயிற்றினுள் பரவுகிறது. இதனால் பித்தப்பையில் இருக்கும் நுண்ணுயிரியின் தாக்கம் முழு வயிற்றையும் பாதித்து மிக அதிக வயிற்று வலியை உருவாக்குகின்றன. மருத்துவர் வயிற்றை பரிசோதனை செய்யும் போது வயிற்றில் அதிக வலி இருப்பதோடு வயிறு இறுக்கமாக இருக்கும் இந்நிலை உடனடியாக கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்து வரலாம்.

8) கல்லீரலில் சீழ்

பித்தப்பை அழற்சி ஏற்படும் போது பித்தப்பையில் ஏற்படும் ஓட்டை பித்தப்பை கல்லீரலுடன் இணைந்து இருக்கும் இடத்தில் ஏற்பட்டால் பித்தப்பை ஓட்டை வழியாக சிந்தும் பித்தம் கல்லீரலினுள் சென்று கல்லீரல் சீழ் உருவாக காரணமாகின்றன. இந்நோயாளிகள் வயிற்று வலியுடன் வருவதோடு அதிக காய்ச்சலும் இருக்கும்.

9)  பித்தப்பை ஃபிஸ்டுலா

பித்தப்பையில் ஏற்படும் பிஸ்டுலா என்பது பித்தப்பைக்கும் பித்தப்பைக்கு பக்கத்தில் இருக்கும் உறுப்புக்கும் ஏற்படும் அசாதாரண   தொடர்பாகும். பித்தப்பையின் வாய்பகுதியில் தேங்கியிருக்கும் கல் நீண்ட நாளாக இருக்குமானால் அது பித்தப்பையை அரிப்பதோடு பக்கத்தில் இருக்கும் உறுப்பின் சுவர் பகுதியையும் அரிகின்றது. இதன் விளைவாக பித்தப்பைக்கும் பக்கத்தில் இருக்கும் உறுப்புக்கும் ஏற்படும் தொடர்பை ஃபிஸ்டுலா என்கின்றோம். பித்தப்பை பிஸ்டூலாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு வயிற்று வலி மஞ்சள் காமாலை மற்றும் குளிர் காய்ச்சல் இருக்கலாம். இந்த பித்தப்பை சம்பந்தப்பட்ட பிஸ்டுலாவை கண்டுபிடிப்பதற்கு எம் ஆர் சி பி பரிசோதனை மிகவும் உதவியாக இருக்கும்.