பித்தப்பை கல் நகர்வால் ஏற்படும் விளைவுகள்
i)பித்தக்குழாய் கற்கள்
பித்தப்பையின் வாய்பகுதியை அடைக்கும் கற்கள் பித்தப்பை அழற்சியை உருவாக்குகின்றன. இவ்வாறு பித்தப்பையின் வாய்ப்பகுதியை அடைத்திருக்கும் கல் ஆறு மணி நேரத்திற்கு அப்படியே இருக்குமானால் பித்தப்பையினுள் நுண்ணுயிரியின் தாக்கம் அதிகரிக்கின்றது. இவ்வாறு, அடைப்பட்ட கல் தொடர்ந்து அங்கேயே இருக்குமானால் தொடர்ந்து வயிற்று வலி இருப்பதோடு பித்தப்பையில் சீழ் உருவாகின்றது. இந்த கல் பித்தப்பைக்கு திரும்பி வந்தால் வலி குறைகின்றது. ஆனால், இந்த கல் முன்னோக்கி நகர்ந்து பித்தக் குழாயை அடைவதற்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு முன்னோக்கி நகரும் கல் பித்த குழாயை அடைந்து பித்தகுழாயின் எந்த பகுதியிலும் அடைப்பை ஏற்படுத்தலாம்.
ii)பொது பித்த குழாய் கற்களுடன் பித்தக் குழாய் அடைப்பு
பித்தப்பையில் இருந்து நகர்ந்து வரும் கற்கள் பித்த குழாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அடைப்பட்ட பித்தக் குழாயால் கல்லீரலில் வரும் பித்தநீரை முன் சிறு குடலுக்கு சரியாக அனுப்ப முடிவதில்லை இந்த அடைப்பட்ட பித்தக் குழாயால் வயிற்று வலி, காய்ச்சல், மற்றும் மஞ்சள் காமாலை வருகின்றது. இதை “சார்க்கோட் டிரைடு” என்கிறோம். இவ்வாறு அடைப்பட்ட பித்த குழாயின் அடைப்பு சரி செய்ய படாவிட்டால் பித்த குழாயில் நுண்ணுயிரியின் தாக்கம் தொடர்ந்து இருக்கும். இதன் விளைவாக நுண்ணுயிரியின் தாக்கம் உடலின் மற்ற உறுப்புக்களையும் பாதிக்கலாம். இத்தருணத்தில் மஞ்சள் காமாலை, வயிற்று வலி, மற்றும் குளிர் காய்ச்சலோடு இரத்த அழுத்தம் குறைதல் மற்றும் உணர்வு திறனில் குறைபாடு ஏற்படலாம். இதை “ரைனால்டு பென்டட்” என்கிறோம் இந்நிலைக்கு தள்ளப்பட்ட நோயாளியின் நோய் மீட்புத்தன்மை குறைவாகவே இருக்கும். என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையை, கண்டுபிடிப்பதற்கு இரத்த செயல்திறன் பரிசோதனை மற்றும் எம் ஆர் சி பி பரிசோதனை தேவைப்படுகிறது.
iii)பொது பித்தக் குழாய் கற்கள்
பித்தப்பையில் இருக்கும் கற்கள் முன்னோக்கி நகர்ந்து பித்தக் குழாயை அடைந்தால் இக்கற்கள் பொதுவாக பித்தக் குழாயின் கீழ் பகுதியான பொது பித்த குழாயை அடையலாம். சில சமயங்களில் இக்கற்கள் மேல் பித்த குழாயில் கூட இருக்கலாம். மேல் பித்த குழாயில் கற்கள் உருவாகுவதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் சில சமயங்களில் பித்த நீரின் இயல்பாகவே கல் உருவாகும் தன்மையால் கற்கள் மேல் பித்தக் குழாயிலே உருவாகின்றன. சில சமயங்களில் கோலிடாக்கல் சிஸ்ட் என்னும் பிறவியிலேயே இருக்கும் பித்த குழாய் வீக்க நோயால் பித்த குழாயில் அசைவு குறைந்து பித்தக் குழாயில் பித்தம் தங்குவதால் பித்த குழாயில் கற்கள் உருவாகின்றன. இந்த வியாதி பத்திலிருந்து 30 வயதிற்குள் உருவாகின்றது. பித்த குழாய் கற்கள் எம் ஆர் சி பி மற்றும் ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். பித்த குழாய் கற்களுக்கு காரணமான பித்தப்பை கற்களையும் பித்தப்பையை அகற்றுவதோடு இ ஆர் சி பி மூலம் பித்த குழாய் கற்களை அகற்ற வேண்டும் ஆனால் கோலிடாக்கல் சிஸ்ட் என்னும் பித்தக்குழாய் வீக்க வியாதி இருந்தால் பாதிக்கப்பட்ட பித்த குழாயை அகற்றுவதோடு ஹெப்பாட்டிக்கோ ஜெஜுனாஷ்டமி என்னும் பித்த நீர் மாற்று பாதை அறுவை சிகிச்சையும் செய்யப்பட வேண்டும்.
iv)கல்லீரலினுள் இருக்கும் பித்தக் குழாய் கற்கள்
கல்லிரலினுள் இருக்கும் பித்தக் குழாய் கற்கள் என்பது பித்தக் குழாய் கற்களின் ஒரு பகுதியாகும். குறிப்பாக, வலது மற்றும் இடது பித்தக் குழாய் இரண்டும் சேரும் இடம் மற்றும் கல்லீரலினுள் இருக்கும் சிறு பித்தக்குழாய்களை குறிக்கும். கல்லீரல் பித்தக் குழாய் கற்கள் பொதுவாக பழுப்பு நிறத்துடன் காணப்படும். சில சமயம் கொலஸ்ட்ரால் கற்களும் காணப்படலாம். பொதுவாக கல்லீரல் பித்தக் குழாய் கற்களுடன் கல்லீரலின் வெளியில் உள்ள பித்த குழாயிலும் கற்கள் காணப்படலாம். கல்லீரல் பித்தக் குழாய் கற்களால் வயிற்று வலி மஞ்சள் காமாலை மற்றும் காய்ச்சல் வருகின்றன. இதை கல்லீரல் செயல்திறன் பரிசோதனை மற்றும் எம் ஆர் சிபி பரிசோதனை மூலம் கண்டறியலாம். இ ஆர் சி பி சிகிச்சை முறை மூலம் இக்கற்களை அகற்றினால் கூட இக்கற்கள் இதே இடங்களில் மீண்டும் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கற்கள் மீண்டும் மீண்டும் வருமானால் சில சமயங்களில் அறுவை சிகிச்சை தேவைபடலாம். குறிப்பிடத்தக்க அறுவை சிகிச்சைகளான பித்தக் குழாயில் ஓட்டை போட்டு கல்லை அகற்றுதல், பாதிக்கப்பட்ட கல்லீரலில் ஒரு பகுதியை அகற்றுதல், சுருக்கத்தை சரிப்படுத்துதல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மிக முக்கியமான சிகிச்சை முறைகளாகும். கல்லீரல் பித்தக் குழாய் கற்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் உணவு பழக்கவழக்கம், பித்த குழாயில் ஏற்படும் நுண்ணுயிரியின் தாக்கம், பித்தக் குழாயின் அமைப்பில் இருக்கும் மாறுபாடு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது மாதிரியான காரணங்கள் கண்டறியப்பட்டால் அதை சரிப்படுத்துவதன் மூலம் கல்லீரல் பித்த குழாய் கற்கள் வருவதை தடுக்கலாம்.
கல்லீரல் பித்த குழாய் கற்கள்
பித்த நீர் தேக்கம்
கல்லீரலில் உள்ள கல்லீரல் செல்கள் பித்தநீரை உற்பத்தி செய்து சிறு பித்த குழாய்கள் வழியாக பொது பித்தக்குழாய்க்கு அனுப்புகின்றது. பொது பித்தக் குழாயை அடைந்த பித்த நீர் பின்பு முன் சிறு குடலை அடைகின்றன. ஒருங்கிணைந்த பித்தக் குழாயின் சுருங்கி விரியும் தன்மையும் ஸ்பின்ரா ஓடி என்னும் வால்வின் விரிவடைதலுமே பித்த குழாயில் உள்ள பித்தநீரை வெளியேற்ற முக்கிய காரணமாக அமைகின்றன. ஏதாவது ஒரு காரணத்தால் பித்த நீர் உற்பத்தி தடைப்பட்டாலோ அல்லது பித்தம் வழியும் தன்மை மாறுபட்டாலோ பித்த நீர் தேக்கம் உருவாகின்றது. கல்லீரல் பித்த குழாய் கற்கள் உருவாக முக்கியமான காரணம் பித்த நீர் தேக்கமே. இந்த பித்த நீர் தேக்கத்திற்கு முக்கிய காரணங்கள் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள், சில மருந்துகள், சில நச்சுப் பொருள்கள், சில சதை வளர்ச்சிகள் மற்றும் மரபியல் முறையில் வரும் வளர்ச்சிதை மாற்றங்களால் ஏற்படும் மாறுதல்களாகும். இக்காரணங்களால் கற்கள் உருவாவதோடு பித்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. பித்த நீர் தேக்கத்தால் பித்தநீரில் உள்ள நச்சுப் பொருட்கள் முதலில் பித்த குழாய் சுவரில் படுகின்றன. பின்பு குறிப்பிட்ட வடிவங்கள் உள்ள கற்களாக மாறுகின்றன. இந்த கற்கள் மீண்டும் பித்தக் குழாயை அடைந்து மீண்டும் மீண்டும் பித்தக் குழாயில் கற்கள் வர காரணமாகின்றன. இவ்வாறு உருவாகும் கற்களால் பித்த குழாயில் அடைப்பு ஏற்படுவதோடு பித்த குழாயின் எல்லா பகுதிக்கும் நுண்ணுயிரியின் தாக்கம் பரவுகின்றன.
நுண்ணுயிரியின் தாக்கம்
கல்லீரல் பித்த குழாய் பொதுவாக பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள் என்னும் நுண்ணுயிரிகளால் பாதிக்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிரியின் தாக்கங்களே சில சமயம் பித்தக் குழாயினுள் கற்கள் உருவாக காரணமாகின்றன. பெரும்பாலான கல்லீரல் பித்தப்பை கற்களால் பாதிக்க பட்டோரின் பித்த நீரில் பாக்டீரியா இருப்பதை பரிசோதனை மூலம் கண்டறியலாம். பித்த குழாயில் உள்ள பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் பீட்டா குளுக்குரோனிடேஸ் என்னும் நொதிதான் பித்த குழாயில் கற்கள் உருவாக மிக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் ஒட்டுண்ணிகளான அஸ்காரிஸ், சிஸ்டோசோமா, குளோநார்கி சைனோசிஸ் போன்றவை பித்தக் குழாயை நேரடியாக சேதப்படுத்துவதோடு குளுக்குரோனிடேஸ் உற்பத்தி அதிகரிப்பதால் பித்த குழாயில் பிலிருபின் நிறமி கற்கள் உருவாக காரணமாகின்றது.
பித்தக் குழாய் அமைப்பில் மாறுதல்கள்
பொதுவாக வலது மற்றும் இடது பித்தக் குழாய்கள் கல்லீரலின் வெளிப்பகுதியில் இணைந்து பொது பித்த குழாயை உருவாக்குகின்றன.இந்த இரண்டு பித்தக் குழாய்களும் ஒன்றை ஒன்று செங்குத்தான கோணத்தில் இணைக்கின்றன. இந்த கோணத்தில் ஏற்படும் மாறுதல்கள் பித்த நீர் வடிதலை குறிக்கிடுவதால் பித்த நீர் தேங்கி பித்த குழாயில் கற்கள் உருவாகின்றன. சில சமயங்களில் துணை பித்த குழாய்கள் பித்தக் குழாயில் மாறுதல்களாக இணைந்து பித்த நீர் வடிதலை தடை செய்வதால் பித்தக் குழாயில் கற்கள் உருவாகின்றன. மேலும் கோலிடாக்கல் சிஸ்ட் என்னும் பிறவியிலேயே உருவாகும் பித்தக்குழாய் வீக்கத்தால் பித்த குழாயில் கற்கள் உருவாகின்றன. பித்தக்குழாயில் ஏற்படும் கற்களால் பித்த நீர் நுண்ணுயிரால் தாக்கப்படுதல், பித்த குழாய் சுருக்கம், பித்த குழாய் வீக்கம், தொடர் பித்த குழாய் அழற்சி, பித்த குழாய் புற்று வியாதி மற்றும் கல்லீரல் சுருக்கம் போன்றவை முக்கியமான பின்விளைவுகள் ஆகும். பித்தக்குழாயில் ஏற்படும் சுருக்கம் சில சமயங்களில் அறுவை சிகிச்சையின் மூலமாகவே சரிப்படுத்த முடியும்.
பித்த நீர், பித்தநீரில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்ற ஏற்றத்தாழ்வுகள்
பித்தநீரில் உருவாகும் பித்தப்பை கற்களுக்கு குறிப்பாக கொலஸ்ட்ரால் கற்களுக்கு முக்கிய காரணம் பித்த நீரில் கலந்துள்ள பொருட்களின் ஏற்றத்தாழ்வுகள் ஆகும். குறிப்பாக பித்த நீரில் அதிகமாக கொலஸ்ட்ரால் இருப்பது அல்லது குறைந்த அளவு பித்த உப்புக்கள் இருப்பதால் அதிகமான கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்ட கற்கள் உருவாகின்றன. அத்தோடு பித்தப்பையில் உருவாகும் சளியின் அளவு அதிகமானால் அவை கொலஸ்ட்ராலை படிகங்கள் ஆக்கி பித்தப்பை கற்கள் உருவாக காரணமாகின்றன.
கல்லீரல் பித்தக் குழாயில் கற்கள் ஏற்பட்டால் அதை சரிப்படுத்துவது சிறிது கடினமாகும். பொதுவாக கல்லீரல் பித்த குழாய் கல் அகற்றுவதற்கு இ ஆர் சி பி முறை மிக முக்கியமானதாகும். இ ஆர் சி பி முறையில் கல் அகற்றப்பட்டாலும் சில சமயங்களில் கல்லீரல் பித்த குழாயில் கற்கள் திரும்பி வருவதோடு பித்த குழாயில் சுருக்கம் ஏற்படலாம். இவ்வாறு அடிக்கடி பித்தக் குழாயில் கற்கள் உருவாகுமானால் திறந்த அறுவை சிகிச்சை மூலம் பித்தக் குழாயை திறந்து கற்களை அகற்றுவதோடு ஹெப்பாடிக்கோ ஜெஜுனாஸ்டமி என்னும் பித்தநீர் மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. சில சமயங்களில் கல்லீரல் பித்த குழாய் கற்கள் வலது அல்லது இடதுபுற கல்லீரலை மட்டும் பாதிக்குமானால் பாதிக்கப்பட்ட கல்லீரல் பகுதியை மட்டும் அகற்றுவது சில சமயங்களில் தேவைப்படும் அறுவை சிகிச்சை ஆகும். இன்னும் குறிப்பாக வலது மற்றும் இடதுபுற கல்லீரலில் பித்த குழாய்களின் அதிகமாக கற்கள் ஏற்பட்டால் சில சமயங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
4)திடீர் பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட கணைய அழற்சி
பித்தப்பை அல்லது பித்த குழாயில் உருவாகும் கற்கள் பித்தப்பையின் அடிப்பகுதியில் இணையும் கணைய குழாயின் வாய்ப்பகுதியை அடைப்பதால் கணைய அழற்சி உருவாகின்றது. கணைய குழாய் என்பது கணையத்தில் உருவாகும் கணையநீரை சேகரித்து பித்தக் குழாயுடன் இணைந்து முன் சிறு குடலின் ஒரு பொது புள்ளியில் திறக்கின்றன. கணையத்தில் உருவாகும் கணைய நீர் கொழுப்புச்சத்து மிகுந்த உணவை ஜீரணிப்பதற்கு மிகவும் உதவியாக அமைகின்றன. ஏதாவது ஒரு காரணத்தினால் பித்தக் குழாயின் அடிப்பகுதி அடைப்படும் போது கணைய குழாயும் அடைப்பட்டு கணைய அழற்சி உருவாக ஏதுவாக அமைகின்றது. பொதுவாக கணையக்குழாய் அடைபடுவதற்கு முக்கிய காரணம் பித்த குழாய் கற்களாகும். கணையக் குழாய் அடைபடும் போது கணையத்தினுள் தேங்கும் கணைய நீரால் கணைய அழற்சி உருவாகின்றது. கணைய அழற்சியால் வயிறு பாதிக்கப்படும் போது வயிற்றின் நடுப்பகுதியில் வலி வருவதோடு வாந்தியும், ஜீரணத்தன்மை குறைவும் ஏற்படுகின்றன. இதை மீறி உணவு உண்டால் வயிற்றுப் பெருக்கம் வருவதோடு வாந்தியும் வருகின்றன. இவ்வாறு வரும் கணைய அழற்சி பெரும்பாலும் லேசாக இருந்தாலும் கூட சில சமயங்களில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தலாம். இவ்வாறு தீவிரமாக கணையம் பாதிக்கப்படும் போது கணைய திசுவின் சில இடங்கள் செயலிழந்து விடுகின்றன. இதை கணைய நசிவு என்கிறோம். இவ்வாறு கணைய திசுக்கள் இரத்த ஓட்டம் குறைந்து கணையம் அழுகும் போது நுண்ணுயிரியின் தாக்கம் ஏற்பட்டு கணையத்தின் பாதிப்பை இன்னும் அதிகமாக்குகின்றன. இவ்வாறு கணையம் பாதித்து நுண்ணுயிரியின் தாக்கம் அதிகமாகும் போது உடலில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புக்கள் செயலிழக்கலாம். குறிப்பாக சிறுநீரகம் பாதிக்கும்போது சிறுநீர் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியாடீனின் அளவு அதிகமாகிறது. கணைய அழற்சியுடன் கூடிய நுண்ணுயிரியின் தாக்கம், நுரையீரல் தாக்கத்தை ஏற்படுத்தும்போது மூச்சுத்திணறல் ஏற்படலாம். சில சமயங்களில் இவை இரத்த ஓட்டத்தை பாதிப்பதோடு இரத்த அழுத்தத்தை குறைத்து நாடித்துடிப்பை அதிகரிக்கிறது. இத்தருணங்களில் ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருப்பதால் மூளையின் ரத்த ஓட்டம் குறைவதோடு நோயாளியின் உணர்வு நிலையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் உணர்வு நிலையில் ஏற்படும் மாறுதல்கள் நோயாளியின் உடல்நிலை மோசமாக இருக்கின்றன என்பதை உணர்த்துகின்றன.
5)பித்தப்பை கல்லால் ஏற்படும் குடல் அசைவு இழப்பு
இது ஒரு மிகவும் அரிதான பித்தப்பை கல்லின் பாதிப்பாகும். மிக நீண்ட நாட்களாக பித்தப்பையின் வாய்ப்பகுதியில் தேங்கியிருக்கும் கல் பித்தப்பையின் சுவர் பகுதியை அரிப்பதோடு பித்தப்பையை ஒட்டி இருக்கும் உறுப்பின் சுவர் பகுதியையும் அரிகின்றது. இதனால் பித்தப்பையில் இருந்து பாதிக்கப்பட்ட உறுப்பிற்கு நேரடி இணைப்பு ஏற்பட்டு பித்தப்பை கற்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட உறுப்பை அடைகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட உறுப்பினுள் அடைப்பு வரலாம். இவ்வாறு பாதிக்கப்படும் போது பித்த குழாயை அடையும் கற்கள் மஞ்சள் காமாலையும் முன் சிறு குடலை அடையும் கற்கள் குடல் அடைப்பையும் ஏற்படுத்துகின்றன. பொதுவாக செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை பித்தப்பை கற்களை உறுதிப்படுத்துகின்றன. வயிற்றுக்கு செய்யப்படும் எக்ஸ்ரே பரிசோதனை வயிற்றில் குடல் அடைப்பு இருந்தால் அதை உறுதிப்படுத்துகின்றன. எம் ஆர் சி பி பரிசோதனை பித்தப்பைக்கும் பக்கத்து உறுப்புக்கும் ஏற்பட்டுள்ள செயற்கை இணைப்பை உறுதிப்படுத்துகின்றன. இத்தருணங்களில் அறுவை சிகிச்சையே மிக முக்கியமான சிகிச்சை முறை என்பது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சையின் போது பித்தப்பை கற்களோடு அகற்றுவதோடு அடைப்புக்கு காரணமாக உள்ள கல்லும் அகற்றப்படுகின்றன.
6)மிரிசி நோய் குறி
மிரிசி நோய்க்குறி என்பது பித்தப்பை கற்களால் ஏற்படும் ஒரு பின் விளைவாகும். பித்தப்பையில் இருக்கும் கற்கள் பித்தப்பையின் வாய்பகுதியை அடைந்து பித்தப்பை குழாயை அடைக்கும் போது பித்தப்பை பாதிப்பு உருவாகின்றது. இந்த கற்கள் தொடர்ந்து பித்தப்பையின் வாய்பகுதியிலேயே இருந்தால் பித்தப்பைக்கும் பித்தப்பையின் பக்கத்தில் இருக்கும் உறுப்புக்கும் இடையே தொடர் அழுத்தம் உருவாகின்றது. இந்த தொடர் அழுத்தம், பித்தப்பையின் சுவர் பகுதியை பாதித்து பக்கத்தில் இருக்கும் உறுப்புடன் ஒரு தொடர்பை உருவாக்குகின்றது. இவ்வாறு புதிதாக உருவாகும் தொடர்பு பொதுவாக பித்த குழாயை பாதிக்கின்றன. இதனால் பித்தப்பையில் இருக்கும் கற்கள் நேரடியாகவே பாதிக்கப்பட்ட உறுப்பை அடைகின்றன.இவ்வாறு பித்தப்பைக்கும் பித்தக்குழாய்க்கும் இடையே உருவாகும் புது தொடர்பை இதை மிரிசி நோய் குறியீடு என்கிறோம். மிரிசி நோய் குறியீடு நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது
இதில் பித்த பகுதியின் வாய் பகுதியில் உள்ள கல் பித்தக் குழாயின் வெளிப்புறத்தில் அழுத்தத்தை கொடுக்கின்றது. இதனால் பித்த குழாயில் லேசான அடைப்பு இருப்பது போல் தெரியும். ஆனால் பித்தப்பைக்கும் பித்தக் குழாய்க்கும் நேரடி தொடர்பு இருப்பதில்லை.
இதில் பித்தப்பைக்கும் பித்தக் குழாய்க்கும் நேரடி தொடர்பு இருக்கும். இந்த தொடர்பின் அளவு பித்தக் குழாயின் சுற்றளவிற்கு 33 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும்.
3) வகை மூன்று மிரசி நோய் குறியீடு
இதிலும் பித்தப்பைக்கும் பித்த குழாய்க்கும் நேரடி தொடர்பு இருக்கும் இதில் பித்தக் குழாயின் பாதிப்பு அதன் சுற்றளவில் 33% இருந்து 66% வரை இருக்கும்.
4) வகை நான்கு மிரசி நோய் குறியீடு
இதில் பித்தப்பைக்கும் பித்த குழாய்க்கும் நேரடி தொடர்பு இருப்பதோடு பித்தக் குழாயின் பாதிப்பு அதன் சுற்றளவில் 66% அதிகமாக இருக்கும்.
பித்தப்பைக்கும் பித்தக் குழாய்க்கும் நேரடி தொடர்பு ஏற்பட முக்கிய காரணங்கள் தொடர் அழுத்தமும் தொடர் அழற்சியும் ஆகும். ஆனால் வகை ஒன்று மிரிசி நோய் குறியீட்டில் நேரடி தொடர்பு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வகை மிரிசி நோய் குறியீடுகளுக்கும் சிகிச்சை முறைகள் வேறுபடுகின்றன. குறிப்பாக வகை ஒன்று மிரிசி நோய் குறியீட்டிற்கு கவனமாக மேற்கொள்ளப்படும் லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையே போதுமானது.
வகை இரண்டு மிரிசி நோய் குறியீட்டிற்கு முதலில் லேப்ராஸ்கோப்பி பித்தப்பை அகற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் பித்தக் குழாயில் இருக்கும் ஓட்டையை T குழாய் என்ற ஒரு வடி குழாயை பொருத்தி பின் அந்த ஓட்டையை சரி செய்யப்படுகிறது. சில சமயங்களில் தொடர் அழற்சியின் காரணமாக லேப்ராஸ்கோப்பி முறையில் செய்ய சிரமம் இருந்தால் திறந்த அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வகை மூன்று மற்றும் நான்கு மிரிசி நோய்க்குறியீடு:
லேப்ராஸ்கோப்பி மூலமாகவோ அல்லது திறந்த அறுவை சிகிச்சை மூலமாகவோ மேற்கொள்ளலாம். எந்த முறை அறுவை சிகிச்சையாக இருந்தாலும் பித்த குழாயையும் முன் சிறு குடலின் ஒரு பகுதியையும் இணைக்கும் ஹெப்பாட்டிக்கோ ஜெஜூனாஷ்டமி என்ற அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.