blog-post-image

பித்தப்பை புற்று வியாதியும் பித்தப்பை கற்களும்

Posted on 2025-05-12 02:58:43 by Dr. Sathish

பித்தப்பை புற்று வியாதியும் பித்தப்பை கற்களும்

சில சமயங்களில் பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்டவர்க்கு பித்தப்பையில் புற்று வியாதி உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பித்தப்பை புற்று வியாதி என்பது மிகக் குறைந்த அளவே காணப்படும் ஒரு வியாதியாகும், பித்தப்பை புற்று வியாதிக்கு பித்தப்பை கற்கள் ஒரு காரணமாக இருந்தாலும் கூட பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்ட ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே பித்தப்பை புற்று வியாதி வருகிறது. முக்கியமாக பித்தப்பை கல்லின் அளவு 15 மில்லி மீட்டருக்கு அதிகமாக இருந்தால் பித்தப்பையில் புற்று வியாதி உருவாக வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்டவரின் பித்தப்பையில் உள்ள நுண்ணுயிரிகள் பித்த உப்புகளை உடைத்து அதிலிருந்து உருவாகும் பொருட்கள் பித்தப்பை புற்றுநோய் வர ஒரு காரணமாக அமைகின்றது. அத்துடன் பித்தப்பையில் ஏற்படும் தொடர அழற்சியும் பித்தப்பை புற்றுநோய் வர ஒரு காரணமாக அமைகின்றது. இத்துடன் பித்தப்பை கல் உடன் பித்தப்பை சதை வளர்ச்சியும் சேர்ந்து இருந்தால் பித்தப்பையில் புற்று வியாதி வர வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பித்தப்பை புற்று வியாதியின் வெளிப்பாடு பித்தப்பை கற்கள் போன்றே இருக்கலாம். சில சமயங்களில் மற்ற இடங்களுக்கு பரவி அதன் வெளிப்பாடுகளும் தோன்றலாம். பொதுவாக பித்தப்பை கற்களுக்கு செய்யப்படும் அல்ட்ராசோனக்ராபி என்ற பரிசோதனையை பித்தப்பை புற்று வியாதியை கண்டுபிடிக்கின்றன. அல்ட்ராசோனாக்ராபி ஸ்கேன் பரிசோதனையில் பித்தப்பையில் புற்று வியாதி இருப்பது சந்தேகப்பட்டால்    பிஇடி என்னும் சிறப்பு ஸ்கேன் பரிசோதனை மூலம் பித்தப்பை புற்று வியாதியை உறுதி செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் பிஇடி சிறப்பு ஸ்கேன் பரிசோதனை மூலம் பித்தப்பை புற்று வியாதியை கண்டுபிடிப்பதோடு, அது பக்கத்து உறுப்புகளுக்கும் பரவி இருக்கின்றதா என கண்டறிவதன் மூலம் என்ன அறுவை சிகிச்சை தேவை என்பதை முடிவு செய்யலாம். பொதுவாக பித்தப்பை கற்களுக்கு பித்தப்பையும், கற்களும் மட்டுமே அகற்றுவதே சிகிச்சை முறையாகும். ஆனால், பித்தப்பை புற்று வியாதிக்கு பித்தப்பை அகற்றுவதோடு அதை சுற்றி இருக்கும் கல்லீரலில் ஒரு பகுதி மற்றும் சுற்றி இருக்கும் நிணநீர் மண்டலத்தையும் அகற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கேலோட்டின் முக்கோணத்தில் இருக்கும் கேலோட் நிணநீர் கட்டி மற்றும் நிணநீர் திசுக்களும் அகற்றப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அகற்றப்படும் பித்தப்பை ஆனது ஒரு பையனுள் வைத்து எடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் துவாரம் சிறியதாக இருப்பதால் பை பயன்படுத்தாவிட்டால் துவாரம் போடப்பட்ட பகுதியில் புற்று நோய் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.