பித்தப்பை கற்கள் சிகிச்சை முறைகள்
பித்தப்பை கற்களை மருந்துகளால் சரிப்படுத்த முடியாது என்பதோடு பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையே முதன்மை சிகிச்சை ஆகும்.பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எப்போது என்பதை நோயின் தாக்கத்தை பொறுத்தும் நோயின் தாக்கத்தால் ஏற்பட்ட சிக்கல்களை பொறுத்தும் உள்ளது. பித்தப்பை கற்கள் கண்டறியப்பட்டால் பித்தப்பை கற்கள் சம்பந்தமான வேறு சிக்கல்கள் இருக்கிறதா என்பது கண்டறிவது முக்கியமான ஒன்றாகும். பித்தப்பை கற்களின் வெளிப்பாடுகளை கீழ்க்கண்டவையாக பிரிக்கலாம்.
சிக்கல் இல்லாத பித்தப்பை கற்கள
i) அறிகுறியற்ற பித்தப்பை கற்கள்
இதில் நோயாளிக்கு நோயின் வெளிப்பாடு எதுவும் இருப்பதில்லை ஏதோ ஒரு காரணத்திற்காக அல்ட்ராசோனோகிராபி ஸ்கேன் பரிசோதனையின் போது இக்கற்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இவ்வாறு கண்டறியப்பட்ட கற்கள் வருடத்திற்கு 1 லிருந்து 3 சதவீதம் வரையே நோயாக வெளிப்படுகின்றன. ஆனால் நோயின் வெளிப்பாடு வயிற்று வலி மஞ்சள் காமாலை அல்லது கணைய அழற்சி ஆக இருக்கலாம். மஞ்சள் காமாலை மற்றும் கணையஅழற்சி என்பது சில சமயங்களில் ஆபத்தை உருவாக்கலாம். எனவே இளம் வயதில் இருப்பவர்கள் குறிப்பாக 60 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் பித்தப்பை கற்கள் கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சை செய்து கொள்வது நல்லது. பித்தப்பை கற்களுக்கு பித்தப்பை அகற்றுதலே முதன்மை அறுவை சிகிச்சை என்பதால் பிரச்சனை வருவதற்கு முன்பாகவே லேப்ராஸ்கோபி மூலம் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
ii) அறிகுறியற்ற பித்தப்பை கற்கள் உடன் இணை நோய்கள் இருப்பது
சில நோயாளிகளுக்கு அல்ட்ராசோனோகிராபி பரிசோதனையில் பித்தப்பை கற்கள் கண்டுபிடிக்கும் போது வேறு சில நோய்களும் குறிப்பாக இருதய நோய்களும் சேர்ந்து இருக்கலாம். சேர்ந்து இருக்கும் இணை நோய்களின் தன்மை கடுமையாக இருந்தால் அவர்களுக்கு பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பரிந்துரைப்பதில்லை. ஆனால் சில சமயங்களில் சர்க்கரை வியாதி இருக்குமானால் அவை பித்தப்பை கல்லின் வெளிப்பாடுகளை மறைத்து விடுகின்றன. எனவே சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவருக்கு பித்தப்பையில் கற்கள் இருக்குமானால் அவர் உடல் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கே தகுதி உடையதாக இருந்தால் லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகின்றது.
iii) வேறு வயிற்று அறுவை சிகிச்சையின் போது பித்தப்பை கற்கள் இருப்பது
வேறு சில வியாதிகளுக்காக வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது பித்தப்பை கற்கள் இருந்தால் நோயாளியின் உடல்நிலை அனுமதித்தால் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை சேர்த்து மேற்கொள்வது நல்லது.
iv) பித்தப்பை கற்களும் சிறுநீரக செயலிழப்பும்
சிறுநீரகம் பாதிக்கப்பட்டவருக்கு சில சமயங்களில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இத்தருணத்தில் பித்தப்பை கற்கள் இருந்தால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்வது நல்லது. ஏனெனில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் பித்தப்பை கற்களால் வரும் பித்தப்பை அழற்சி தவிர்க்க முடியாத ஒன்றாகும். எனவே பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
v) பித்தப்பை கற்களும் புற்று வியாதியும்
புற்று வியாதியால் பாதிக்கப்பட்டவருக்கு பொதுவாக ஹீமோதெரபி என்னும் சிகிச்சை முறையும் அளிக்கப்படுகின்றது. இத்தருணத்தில் பித்தப்பையில் கற்கள் இருந்தால் பித்தப்பை அழற்சி வரலாம். எனவே ஹீமோதெரபி தேவைப்படுபவருக்கு பித்தப்பையில் கற்கள் இருந்தால் அதை லேப்ராஸ்கோபி மூலம் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
vi) பித்தப்பை கல்லும் பித்தப்பை சதை வளர்ச்சியும்
பித்தப்பை கல்லுடன் பித்தப்பையில் சதை வளர்ச்சி இருந்தால் நோயின் வெளிப்பாடுகள் இல்லாமல் இருந்தால் கூட பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது. ஏனெனில் பித்தப்பை கல்லுடன் சேர்ந்திருக்கும் சதை வளர்ச்சி நாளடைவில் பித்தப்பை புற்று வியாதியாக மாற வாய்ப்புள்ளது .
vii) போர்சிலின் பித்தப்பை
போர்சிலின் பித்தப்பை என்பது பித்தப்பையில் அல்லது பித்தப்பை சுவரில் அதிக அளவு கால்சியம் படிந்து இருக்கும் இதை பீங்கான் பித்தப்பை எனவும் அழைக்கின்றனர் .இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு பித்தப்பையில் புற்று வியாதி உருவாக வாய்ப்பு அதிகமாக இருப்பதால் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
viii) பெரிய பித்தப்பை கல்
பெரிய பித்தப்பை கல் என்பது பித்தப்பை கல்லின் அளவு 15 மில்லி மீட்டருக்கு மேல் இருப்பதை குறிக்கும். இவ்வாறு இருக்கும் பெரிய கற்களால் பித்தப்பையில் புற்று வியாதி வர வாய்ப்பு அதிகமாக இருப்பதால் பித்தப்பை கல்லின் நோய் வெளிப்பாடு இல்லாமல் இருந்தால் கூட பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது
ix) உடல் குறைப்பு அறுவை சிகிச்சையும் பித்தப்பை கற்களும்
அதிக உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது பித்தப்பையில் கற்கள் இருந்தால் உடல் குறைப்பு அறுவை சிகிச்சையோடு பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையும் செய்து கொள்வது நல்லது. உடல் குறைப்பு அறுவை சிகிச்சைக்கு பின் வேகமாக உடல் குறையும் போது பித்தப்பை அழற்சி உருவாக ஒரு வாய்ப்பு இருப்பதால் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
சிக்கல்களுடன் கூடிய பித்தப்பை கல்
பித்தப்பை கல்லால் பல சிக்கல்கள் உருவாகலாம். குறிப்பாக திடீர் பித்தப்பை அழற்சி, தொடர் பித்தப்பை அழற்சி , பித்தப்பை அழுகுதல், பித்தப்பையில் ஓட்டை விழுதல், பித்தப்பை கல்லால் உருவாகும் மஞ்சள் காமாலை, பித்தப்பை கல் சம்மந்தப்பட்ட கணைய அழற்சி, மற்றும் மிரிசி நோய் குறி போன்றவைகள் முக்கியமானவை. இவ்வாறான, பாதிப்புகளுக்கு முதன்மை சிகிச்சை பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.