லேப்ரோஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை
பித்தப்பை கற்களுக்கு முதன்மையான வைத்தியம் லேப்ராஸ்கோபி மூலம் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையாகும். பித்தப்பை கற்கள் கண்டறியப்பட்டால் அது சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. அத்துடன் இந்த அறுவை சிகிச்சை முழு மயக்கத்தில் செய்யப்படுவதால் முழு மயக்கத்திற்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் தேவைப்படுகின்றன. தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவ வல்லுனர்களின் ஒப்புதல்கள் பெறப்படுகின்றன. அதற்குப்பின் மயக்கவியல் மருத்துவ நிபுணரின் ஒப்புதலோடு லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.
ஐசிஜி சாயம் பயன்படுத்தும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்படும் கருவிகள் இருந்தால் ஐ சி ஜி மருந்தானது அறுவை சிகிச்சைக்கும் 45 நிமிடத்திற்கு முன் ரத்தக்குழாய் வழியாக செலுத்தப்படுகின்றது. இவ்வாறு செலுத்தப்பட்ட ஐ சி ஜி சாயம் கல்லீரல் வழியாக பித்த நாளத்தை அடைகின்றது. பித்த நாளங்களில் இருக்கும் ஐ சி ஜி சாயத்தின் ஒளிரும் தன்மையால் பித்த நாளங்களின் தன்மையை லேப்ராஸ்கோபி கேமரா மூலம் கண்டறியப்படுகின்றது. இதனால் லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை மிக நுணுக்கமாக செய்து முடிக்க முடிக்கின்றது. இந்த அறுவை சிகிச்சை முழு மயக்கத்தில் பண்ணப்படுவதால் முழு மயக்கத்திற்கு தேவையான மருந்துகளுடன் முழு தசை தளர்வு மருந்துகளும் செலுத்தப்படுகின்றன. இதற்குப் பின் மூக்கு வழியாக ரெல்ஸ் டியூப் என்னும் குழாயை இரைப்பைக்கு செலுத்துவதின் மூலம் இரைப்பையின் வீக்கம் குறைவதால் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையை சுலபமாக செய்து முடிக்க முடிகின்றது. இந்த குழாய் அறுவை சிகிச்சை முடிந்த உடனே வெளியே எடுக்கப்படுகின்றது. அறுவை சிகிச்சையின் போது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் இரத்த குழாய் வழியாக செலுத்தப்படுகின்றன.
முழு மயக்கத்திற்கு பின் நோயாளியின் வயிற்றுப் பகுதியானது கிருமி நாசினியால் சுத்தப்படுத்தப்பட்டு பின் திரைசீலைகளால் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுகின்றன. அறுவை சிகிச்சையின் தொடக்கமாக சுமார் 10 மில்லி மீட்டர் நீளம் கீறல் தொப்புளின் மேல் பகுதியிலோ அல்லது கீழ் பகுதியில் உருவாக்கப்படுகின்றன. இந்த கீறல் வழியாக வேரிஸ் ஊசி என்னும் சிறப்பு ஊசி வயிற்றுக்குள் செலுத்தப்படுகின்றன. இந்த ஊசியின் சிறப்பு அம்சமாக இந்த ஊசியின் முனைப்பகுதி வயிற்றின் குடல் பகுதியையோ அல்லது மற்ற பாகங்களை தொட்டால் கூட பெரிதும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவ்வாறு செலுத்தப்பட்ட வேரிஸ் ஊசியின் வழியாக கரியமில வாயு என்னும் கார்பன் டை ஆக்சைடு செலுத்தப்படுகின்றது. இவ்வாறு செலுத்தப்படும் வாயு வயிற்றினுள் தேங்கி வயிற்றுப் பெருக்கத்தை உருவாக்குகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் வயிற்றுப் பெருக்கத்தால் வயிற்றினுள் அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான இடம் கிடைக்கும். இந்த அறுவை சிகிச்சையின் போது தேவைப்படும் வயிற்று அழுத்தமானது 12ல் இருந்து 15 மில்லி மீட்டராக இருக்கும் கரியமில வாயு எளிதில் நீரில் கரையும் தன்மையுள்ளதால், வாயு சம்பந்தமான பிரச்சனைகள் ஏதும் வருவதில்லை. வேரிஸ் ஊசி மூலம் தேவையான கரியமில வாயு சென்றவுடன் வயிற்றுப் பெருக்கம் சீராகின்றது. வயிற்றுப் பெருக்கம் சீரான பின்பு ட்ரோக்கர் என்னும் குழாய் வடிவ கருவி அதே கீறல் வழியாக வயிற்றினுள் செலுத்தப்படுகின்றது. இந்த கருவியில் ஒரு சிறப்பம்சமாக வால்வு அமைப்பு உள்ளது இந்த வால்வு கருவிகளை உள்ளே அணுமதிப்பதோடு உள்ளே இருக்கும் காரியமில வாயு வெளியேறாமல் தடுக்கின்றது .பொதுவாக இந்த கருவி 10.5 மில்லி மீட்டர் அகலம் உடையதாக இருப்பதால் 10 மில்லி மீட்டர் அளவுள்ள டெலஸ்கோப் என்னும் உள்நோக்கியை உள்ளே அனுமதிக்கின்றது. 10 மில்லி மீட்டர் கருவிக்கு பதிலாக 5 மில்லி மீட்டர் கருவியை பயன்படுத்தினால் அதற்கு மினி லேப்ரோஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை என்கிறோம். மினி லேப்ரோஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு சிறப்பு லேப்ராஸ்கோபி கருவிகளும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணரின் சிறப்பு அனுபவமும் முக்கியமானவை.
முதல் ட்ரோக்கார் தொப்புள் அருகிலும் மூன்று துணை ட்ரோக்கார்கள் வலது பக்கம் மேல் பகுதியிலும் செலுத்தப்படுகின்றது. இதில் 5 மில்லி மீட்டர் அளவுள்ள இரண்டு துணை ட்ரோக்கார்கள் வயிற்றின் மேல் புறம் வலது பகுதியிலும் 10 மில்லி மீட்டர் அளவுள்ள ட்ரோகார் வயிற்றின் மேல் பகுதியில் நடுப்பகுதியில் செலுத்தப்படுகின்றன. தொப்புளை சுற்றி செலுத்தப்படும் ட்ரோகார் முக்கிய ட்ரோகார் என்றும் மற்ற மூன்று ட்ரோகார்களும் துணை ட்ரோகார்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் முக்கிய ட்ரோகார் ஆனது வீங்கிய வயிற்றினுள் மிகுந்த பாதுகாப்புடன் செலுத்தப்படுகின்றன. முக்கிய ட்ரோகார்கள் செலுத்திய பின் அதன் வழியாக கேமரா பொருத்திய உள்நோக்கி செலுத்தப்பட்டு வயிற்று உள் பகுதியை திரை வழியாக ஆராய்ந்த பின்பே துணை ட்ரோகார்கள் செலுத்தப்படுகின்றன. எனவே முக்கிய ட்ரோகார் பாதுகாப்பாக செலுத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும். நான்கு ட்ரோகார்களும் செலுத்திய பின் அறுவை சிகிச்சைக்கு தேவையான மற்ற கருவிகள் செலுத்தப்படுகின்றன. வலது பக்கம் இருக்கும் இரண்டு 5 மில்லி மீட்டர் ட்ரோகார் வழியாக கிராஸ்பர் என்னும் கருவி செலுத்தப்பட்டு அது பித்தப்பையின் தலைப்பகுதியையும் பித்தப்பையின் கழுத்து பகுதியையும் பிடித்து வைத்திருக்கும். தலைப்பகுதியில் பிடித்திருக்கும் கிராஸ்பர் என்னும் கருவி வழியாக பித்தப்பையையும் வலது புற கல்லீரலையும் மேல்நோக்கி இழுப்பதால் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் இடத்தை எளிதாக அடைய முடியும். பித்தப்பையின் கழுத்து பகுதியை பிடித்து இருக்கும் கிராஸ்பர் பித்தப்பையை மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் அசைத்து கேலோட்டின் முக்கோணத்தை அடையவும் அங்கிருக்கும் உறுப்புகளான பித்தப்பை தமனி மற்றும் பித்தப்பை குழாயை தனித்தனியாக பிரிப்பதற்கும் உதவுகின்றது. இவ்வாறு தனித்தனியாக பிரிப்பதை வயிற்றின் நடுப்பகுதியில் செலுத்தப்பட்டிருக்கும் ட்ரோகார் வழியாக டிஸக்ட்டர் என்னும் கருவி மூலம் செய்து முடிக்கப்படுகிறது. இந்த டிஸக்டருடன் டையதெர்மி என்னும் கருவி பொருத்தப்படுவதால், சிறு சிறு ரத்தக் கசிவுகள் இதன் மூலமே கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த டிஸக்டக்டருடன் கூடிய டைதெரமிக் பதிலாக ஹார்மோனிக் ஸ்கேல்பில் என்னும் அதிநவீன கருவி பயன்படுத்துவதால் கேலோட்டின் முக்கோணத்தில் செய்யப்படும் உறுப்புகளைப் பிரிக்கும் அறுவை சிகிச்சையை எளிதாக மேற்கொள்ளலாம். இவ்வாறாக பித்தப்பை குழாய் மற்றும் பித்தப்பை தமனியைப் பிரிக்கும் அறுவை சிகிச்சை பித்தப்பை கழுத்துப் பகுதி பித்தப்பை குழாய் உடன் இணையும் இடத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. முதலில் அந்த இடத்தை சுற்றி இருக்கும் குடல் தாங்கு சவ்வு எனப்படும் பெரிடோனியத்தை திறந்து அதன் வழியாக ஒவ்வொரு உறுப்புகளையும் துல்லியமாக பிரிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரிக்கப்படும் போது கேலோட்டின் முக்கோணத்திற்குள் பித்தப்பை தமனி இருப்பதை கண்டறியலாம். சில சமயங்களில் பித்தப்பையுடன் குடலின் ஒரு பாகமோ அல்லது வயிற்றினுள் இருக்கும் கொழுப்பு உறுப்பான ஓமெண்டம் என்னும் உறுப்பு ஒட்டி இருக்கலாம். இவ்வாறு ஒட்டி இருப்பதற்கு காரணம் பித்தப்பை தொடர் அழற்சியாகும். இத்தருணத்தில், முதலில் இந்த ஒட்டியிருக்கும் உறுப்புகளை பிரித்த பின்பே உண்மையான அறுவை சிகிச்சையை தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சில சமயங்களில் இந்த உறுப்புக்கள் இடதுபுறம் பித்தக்குழாய் அருகில் ஒட்டி இருந்தால் அறுவை சிகிச்சையை சிறிது மாற்றி ஆரம்பிக்க வேண்டியது முக்கியமாகும். இத்தருணத்தில் அறுவை சிகிச்சை ஆனது பித்தப்பையின் உடற்பகுதிக்கும் கல்லீரலுக்கும் இடையில் ஆரம்பித்து பின் கலோட்டின் முக்கோணத்தை நோக்கி நகர வேண்டும். ஏனெனில், எந்த ஒரு தருணத்திலும் பித்தக்குழாய்க்கு சேதம் வராமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். அறுவை சிகிச்சையின் போது சில சமயங்களில் சில சிக்கல்கள் வரலாம் குறிப்பாக கேலோட்டின் முக்கோணத்தில் தொடர் அழற்சி இருப்பது அறுவை சிகிச்சைக்கு ஒரு இடையூறாக இருக்கலாம். சில சமயங்களில், பித்தப்பை குழாயில் ஒரு கல் சிக்கியிருந்து அறுவை சிகிச்சைக்கு இடையூறு விளைவிக்கலாம். இத்துடன் பித்த நாளங்களில் உள்ள அமைப்பு வேறுபாடுகளாலும் அறுவை சிகிச்சைக்கு சிரமம் இருக்கலாம். பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு தடங்கலாக இருக்கும் முக்கிய காரணங்களாவன:
i) பித்த நாளங்களின் அமைப்பில் மாறுதல்கள்
ii) தீவிர நுண்ணுயிரியின் தாக்கம்
iii) பித்தப்பை கல்லுடன் பித்தப்பை குழாய் கல்லிறுத்தல்
iv) பித்தப்பை கல்லுடன் கணைய அழற்சியிருத்தல்
v) பித்தப்பை கல்லுடன் மற்ற உறுப்புக்களும் தொடர்பு இருத்தல்
இவ்வாறாக இருக்கும் பிரச்சனைகளால் அறுவை சிகிச்சைக்கு பல தடைகள் வரலாம். எனவேதான், அறுவை சிகிச்சைக்கு முன்பே இது மாதிரியான பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை பல பரிசோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது இந்த பிரச்சனைகளை கண்டுபிடிப்பது எளிதான விஷயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கலோட்டின் முக்கோணத்தில் அறுவை சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட பின்பு, பித்தப்பை குழாயையும், பித்தப்பை தமனியையும் தனித்தனியாக பிரித்தல் முக்கியமானதாகும். பித்தப்பை தமனி ஆனது கல்லீரலுக்கும் பித்தப்பைக் குழாய்க்கும் இடையே இருக்கும். பித்தப்பை தமனியை கண்டுபிடித்த உடன் எல் டி 300 என்னும் டைட்டானியம் கிளிப் மூலம் பித்தப்பை தமனி துண்டிக்கப்படுகிறது. ஒருவேளை அறுவை சிகிச்சையின் போது ஹார்மோனிக் ஸ்கேல்பில் என்னும் கருவி பயன்படுத்தினால் இக்கருவி வழியாகவே பித்தப்பை தமனியை துண்டித்து விடலாம். பித்தப்பை தமனி துண்டித்த பின் பித்தப்பை குழாயை டைட்டானியம் கிளிப் மூலம் அடைக்கப்பட்டு பின் துண்டிக்கப்படுகிறது. சில சமயம் இந்த இடத்தில் ரணம் தீவிரமாக இருந்தால் டைட்டானியம் கிளிப்பினால் பித்தப்பை குழாய் அடைக்க முடியாமல் போகலாம். இத்தருணத்தில், எண்டோலுப் எனப்படும் தையல் முறையோ அல்லது சாதாரண தையல் முறையோ பயன்படுத்தி பித்தப்பை குழாயை அடைக்கலாம்.
பாதுகாப்பான லேப்ரோஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை
ருவியர் குழி:
ருவியர் குழி என்பது வலது புற கல்லீரலில் இருக்கும் ஒரு குழி ஆகும். இந்தக் குழி ஆனது பித்தப்பையின் கழுத்து பகுதியும் பித்தக்குழாயையும் இணையும் இடத்தை குறிக்கின்றது. இது ஒரு குழியாகவோ அல்லது தழும்பு போன்றோ தெரியலாம். அறுவை சிகிச்சையின் தொடக்கத்தில் இக்குழியை அடையாளம் கண்டு அறுவை சிகிச்சை தொடருமானால், அறுவை சிகிச்சையால் ஏற்படும் பித்தக்குழாய் பாதிப்புகளை தவிர்க்கலாம். பித்தப்பையின் உடற்பகுதியில் இந்த குழியின் மேல் பகுதியிலும், பித்தபை குழாய் பித்தக் குழாயுடன் இணையும் இடம் இக்குழியின் கீழ் பகுதியிலும் இருப்பதால் அறுவை சிகிச்சையின் போது இக்குழிக்கு கீழ் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழியானது 90% நோயாளிகளிடம் மட்டுமே காணப்படும் என்பதும், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் தெளிவாக தெரியும் என்பதும் முக்கியமான விஷயம் ஆகும்.
லுன்ட் என்னும் நிணநீர் கட்டி
லுன்ட் எனப்படும் நிணநீர் கட்டியானது கேலோட்டின் முக்கோணத்தில் இருக்கும் ஒன்றாகும். இந்த நிணநீர் கட்டி நுண்ணுயிரின் தாக்கம், தொடர் அழற்சி மற்றும் பித்தப்பையில் ஏற்படும் புற்று வியாதியின் போது பெரிதாகின்றது. பித்தப்பையில் தொடர் அழற்சி இருக்கும்போது சில சமயங்களில் கேலோட்டின் முக்கோணம் இறுகி பித்தப்பை குழாய் மற்றும் பித்தப்பை தமனிகளை கண்டுபிடிப்பதை சிரமமாகிவிடும். இத்தருணத்தில் லுன்ட் ரணகட்டி கண்டறியப்பட்டால் அது இருக்கும் இடம் கேலோட்டின் முக்கோணம் என்பதை தெரிந்து அறுவை சிகிச்சையை தொடரலாம். இவ்வாறாக லுன்ட் ரணகட்டியை கண்டுபிடிப்பதால் பித்தப்பை தமனியை கண்டுபிடிப்பதும் சுலபமாகின்றது. எனவே லுன்ட் ரணகட்டி பாதுகாப்பான லேப்ரோஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு உதவியாக இருக்கின்றது.
ஸ்ராஸ் பெர்கின் பாதுகாப்பு ஜன்னல்
பொதுவாக லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சை பித்தப்பையின் கழுத்துப் பகுதிக்கும் உடல் பகுதிக்கும் இடையில் உள்ள பகுதியில் தொடங்கப்படுகின்றது. இவ்வாறு தொடங்கப்பட்ட அறுவை சிகிச்சை பித்தப்பையின் உடல் பகுதியில் கேலோட்டின் முக்கோணத்திற்குள் தொடங்குகின்றது. இத்தருணத்தில், இந்த இடங்களில் வேறு ஏதும் அபூர்வமான பித்த நாளங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சில சமயங்களில் அபூர்வமாக உருவாகும், கல்லீரல் தமனி கூட இந்த இடத்தின் குறுக்கே வரலாம். பித்தப்பையை கல்லில் இருந்து பிரிக்கும் போது பித்தப்பையின் உடற்பகுதிக்கும், கல்லீரலுக்கும் இடையே எந்த அபூர்வமான உறுப்புக்களும் இல்லை என்பதையே ஸ்ராஸ் பெர்கின் பாதுகாப்பு ஜன்னல் என்று அழைக்கின்றோம்.
பித்தப்பை கொடி அசைவு
இது பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது நம்மால் பார்க்கப்படும் ஒருவித அசைவாகும். லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது பித்தப்பையின் கழுத்துப் பகுதியை பிடித்திருக்கும் கருவி பித்தப்பையை வலது பக்கமும் இடது பக்கமும் அசைத்து கேலோட்டின் முக்கோணத்தில் உள்ள உறுப்புக்களை பிரிக்க உதவுகின்றது. இந்த அசைவு பார்ப்பதற்கு கொடி அசைவு போல் உள்ளதால் இதை பித்தப்பை கொடி அசைவு என்று அழைப்பதோடு, கேலோட்டின் முக்கோணத்தில் உள்ள உறுப்புகளை பிரித்து பாதுகாப்பான அறுவை சிகிச்சைக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
யானை தும்பிக்கை வடிவம்
லேப்ரோஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது பித்தப்பையின் உடற்பகுதி கல்லீரலில் இருந்து பிரிக்கப்படுகின்றது. இவ்வாறு பிரிக்கப்படுவது கேலோட்டின் முக்கோணத்தை அடைந்து பித்தப்பை குழாய் பித்தக் குழாயை அடையும் வரை தொடர்கின்றது. இவ்வாறு பிரிக்கப்பட்ட பித்தப்பை பார்ப்பதற்கு யானையின் தும்பிக்கை போல் தெரியும். எனவே, பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது யானையின் தும்பிக்கை வடிவம் தெரிந்தால் பித்தப்பை அறுவை சிகிச்சை சரியாக நடக்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
பித்தப்பை பகுதியில் பல வேறுபாடுகள் இருக்கலாம். பொதுவாக பித்தப்பை தமனி வலது கல்லீரல் தமனியில் இருந்து உருவாகி கேலோட்டின் முக்கோணம் வழியாக பித்தப்பையை அடையும் சில சமயங்களில் இது ஒரே தமனியாக இல்லாமல் பல சிறு தமனிகளாக உருவாகி பித்தப்பையை அடையலாம் பொதுவாக வலது கல்லீரல் தமனி கேலோட்டின் முக்கோணத்தில் இருந்து தள்ளியே இருக்கும். சில சமயங்களில் இந்த வலது கல்லீரல் தமனி கேலோட்டின் முக்கோணத்திற்கு வந்து பித்தப்பையுடன் நெருங்கி இருக்கும். இதை மொயினி ஹான் கூம்பு என்று அழைக்கிறோம் இதன் முக்கியத்துவம் என்னவென்றால் கேலோட்டின் முக்கோணத்தில் உறுப்புகளை பிரிக்கும் போது மொயினி ஹான் கூம்பு இருந்தால், அதை சேதப்படுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியமானதாகும். இது சேதப்படுத்தப்படும் ஆனால் வலது கல்லீரல் தமனி பாதிக்கப்படும் என்பதால் வலது கல்லீரலுக்கு செல்லும் இரத்தஓட்டமும் பாதிக்கப்படும். என்பது குறிப்பிடத்தக்கது.
பித்தப்பை குழாய் பொதுவாக வலது மற்றும் இடது பித்த குழாய் இணையும் இடத்திற்கும் இரண்டு சென்டிமீட்டர் கீழ் போய் இணைகிறது. இந்த இணைவு பொதுவாக பித்த குழாயின் வலது பக்கம் நடக்கும் சில சமயம் இந்த இணைவு பித்தக் குழாயின் இடது பக்கமோ முன்பகுதியிலோ நடக்கலாம். சில சமயம் பித்தப்பை குழாய் வலது பித்த குழாயுடன் கூட இணையலாம். இவ்வாறான மாறுதல்கள் எம் ஆர் சி பி மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றாலும் கூட சில சமயங்களில் எம் ஆர் சி பி பரிசோதனையில் தெரியாமல் இருக்கலாம். எனவே கவனமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையே மிக முக்கியமானது.
பித்தப்பை குழாய் கேலோட்டின் முக்கோணத்தில் பிரிக்கப்பட்டு பின்பு கிளிப் போடப்படுகின்றது. கிளிப் போடப்பட்ட பின் பித்தப்பை குழாய் துண்டிக்கப்படுகிறது. பின்பு பித்தப்பை ஆனது கல்லீரலில் இருந்து பிரிக்கப்படுகின்றது. சில சமயங்களில் சிறுசிறு பித்தக் குழாய்கள் கல்லீரலில் இருந்து பித்தப்பையை அடையலாம் .இக்குழாய்களுக்கு லஸ்கா குழாய்கள் என்று பெயர். இதன் முக்கியத்துவம் என்னவென்றால் இக்குழாய்கள் அறுவை சிகிச்சையின் போது கண்டறியப்பட்டால், அவைகளுக்கு தனித்தனியாக கிளிப் போட வேண்டும். ஒருவேளை போடப்படாவிட்டால் அச்சிறு பித்த குழாய்களில் இருந்து பித்தம் வெளிவந்து அறுவை சிகிச்சைக்கு பின் சில பாதிப்புகளை உருவாக்கலாம்., இதே மாதிரி ஒன்றுக்கு மேல் இருக்கும் பித்தப்பை சம்பந்தப்பட்ட இரத்தக் குழாய்களையும் சரியாக கண்டறிந்து முறையாக துண்டிக்கப்பட வேண்டும். இல்லையெனில், தேவையற்ற ரத்தக்கசிவு உருவாகலாம்.
பித்தப்பை கல்லீரலில் இருந்து பிரிந்தபின் வயிற்றின் மேற்பகுதியில் இருக்கும் 10 மில்லி மீட்டர் ட்ரோக்கார் வழியாக வெளியே எடுக்கப்படுகின்றது. சில சமயங்களில் பித்தப்பை அழற்சி அதிகமாக இருந்தால் வயிற்றினுள் பை ஒன்றை செலுத்தி பையின் வழியாக பித்தப்பையை எடுப்பதால் நுண்ணுயிரியின் தாக்கத்தை குறைக்க முடியும். பித்தப்பையை எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோக்கார் அளவு 10 மில்லி மீட்டர் என்பதால் அதற்காக உருவாக்கப்பட்ட கீறலின் அளவு 10 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் சில சமயங்களில் கல்லின் அளவு பெரிதாக இருந்தாலோ அல்லது கடும் அழற்சியால் பித்தப்பையின் அளவு பெரிதாக இருந்தாலும் அதை 10 மில்லி மீட்டர் கீறல் வழியாக எடுக்க முடியாமல் இருக்கலாம் இத்தருணத்தில், கீறலின் அளவு அதிகப்படுத்தப்பட வேண்டியிருக்கும். பித்தப்பை வெளியே எடுக்கப்பட்ட பின் மீண்டும் பித்தப்பை இருந்த இடத்தையும் அதை சுற்றி இடத்தையும் பார்ப்பது நல்லது. ஏனெனில் திடீர் ரத்த கசிவு அல்லது பித்தநீர் கசிவு இருந்தால் அதை அங்கேயே சரி படுத்த வேண்டும். சில சமயம் பித்தப்பையின் உள்ளேயோ அல்லது வெளியிலோ சீதம் இருந்தால் சீதத்தின் ஒரு பகுதி வயிற்றில் மிஞ்சாமல் இருக்க பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடங்களை சுத்தமான நீரால் சுத்தப்படுத்தப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். இதற்குப் பின் வயிற்றினுள் வடிகால் குழாய் வைக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
வயிற்றினுள் சீதம் இருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட கல்லீரல் உள்ளவர்களுக்கு சிறு ரத்தக்கசிவு இருந்தாலோ வயிற்றினுள் வடிகால் குழாய் வைக்கப்பட வேண்டும். இந்த வடிகால் குழாய் பொதுவாக 48 மணி நேரத்திற்கு பின் எடுக்கப்படும். வடிக்கால் குழாய் வைத்தபின் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் இத்துடன் அறுவை சிகிச்சை முடிக்கப்படும் இதற்கு பின் 10 மில்லி மீட்டர் அளவுள்ள கீரல்களை இரண்டு அடுக்காகவும் 5 மில்லி மீட்டர் உள்ள கீறலை ஒரு அடுக்காகவும் தையலால் மூடப்படும்.
லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளியின் மீட்பு வேகமாக இருக்கும். அறுவை சிகிச்சையின் ஆறு மணி நேரத்திற்கு பின் நீர் உணவு அருந்தலாம். அடுத்த நாள், மென்மையான திட உணவை அருந்தலாம். பொதுவாக 24 மணி நேரத்திற்கு பின் நோயாளி வீட்டிற்கே திரும்பலாம். ஒருவேளை வடிகால் குழாய் பொருத்தப்பட்டிருந்தால் அதில் வடியும் திரவம் இரத்தம் அல்லது பித்த நீர் இல்லாமல் இருந்தால் அதை 48 மணி நேரத்தில் அகற்றி விடலாம். வடிநீர் குழாய் வைக்கப்பட்டிருந்தால் பொதுவாக அதை அகற்றிய பின்பே நோயாளி வீட்டிற்கு அனுப்பப்படுவார்.
லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சை- சிரமமான தருணங்கள்
1) கல்லீரல் சுருக்கம் என்னும் தொடர் கல்லீரல் அழற்சி
2) கல்லீரல் ரத்தக்குழாயில் அதிக அழுத்தம்
3) இரத்தம் உறைதலில் மாற்றம்
4) தொடர் நுரையீரல் அழற்சி
5) இருதய செயலிழப்பு
மேற்கூறிய பிரச்சனைகளுடன் பித்தப்பையில் கற்கள் இருந்தால் பொதுவாக, அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை. ஆனால், சில சமயங்களில் அதிக வலி ஏற்பட்டாலோ மஞ்சள் காமாலை ஏற்பட்டாலோ அல்லது நுண்ணுயிரின் தாக்கம் அதிகமாக இருந்தாலோ அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இத்தருணத்தில், அறுவை சிகிச்சையின் போது அல்லது அறுவை சிகிச்சைக்குப் பின்பு பல சிக்கல்கள் வரலாம். குறிப்பாக இரத்த கசிவு மற்றும் இதய செயலிழப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.