blog-post-image

லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சை- அறுவை சிகிச்சைக்கு பின் பராமரிப்பு

Posted on 2025-05-12 03:17:01 by Dr. Sathish

லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சை- அறுவை சிகிச்சைக்கு பின் பராமரிப்பு

லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எளிதான ஒன்றாகும். பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாளே வீட்டிற்கு திரும்புவார். சில சமயங்களில், வேறு வியாதிகள் இருந்தால் குறிப்பாக சர்க்கரை வியாதி மற்றும் இருதய வியாதி இருந்தால் ஒரு சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டி இருக்கும். நுரையீரல் வியாதி மற்றும் சிறுநீரக வியாதி இருந்தால் கூட அதையும் சரி செய்யப்பட்ட பின்னரை நோயாளி வீட்டிற்கு திரும்ப முடியும்.

சில சமயங்களில் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைக்கு பின் காய்ச்சல் வரலாம். இந்த காய்ச்சலுக்கு காரணம் ஏற்கனவே இருக்கும் நுண்ணுயிரின் தாக்கமாகவோ அல்லது பித்தக்குழாய் கற்களாகவோ இருக்கலாம். சில சமயங்களில் கணைய பாதிப்பு இருந்தால் கூட காய்ச்சல் வரலாம். இத்தருணத்தில், உயர்தர நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் சில நாட்களுக்கு தேவைப்படலாம். அறுவை சிகிச்சைக்குப் பின் பித்தப்பை அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கூட வரலாம். குறிப்பாக, பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு முன் இருந்த அதே வலி வருதல், புதிதாக மஞ்சள் காமாலை வருதல், வடிக்குழாய் வழியாக வயிற்று நீர் வடிதல், மற்றும் லேப்ராஸ்கோபி துவாரத்தில் ஏற்படும் நுண்ணுயிரியின் தாக்கம் குறிப்பிடத்தக்கவை,.

பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் அறுவை சிகிச்சைக்கு முன்னிருந்த அதே வழி வருவதற்கு முக்கியமான காரணம், அறுவை சிகிச்சையின் போது பித்தப்பையில் இருக்கும் கற்கள் நழுவி பித்த குழாயை அடைவதாகும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின் பழையது மாதிரியான விட்டு விட்டு வயிற்று வலியுடன் வாந்தியும் வரலாம். சில சமயங்களில் காய்ச்சல் கூட வரலாம். இத்தருணத்தில் கல்லீரலில் செயல்திறனை கண்டுபிடிக்கும் இரத்த பரிசோதனையும் எம் ஆர் சி பி என்னும் எம் ஆர் பரிசோதனையும் பித்தக்குழாய் கற்களை கண்டறிய உதவும். பித்தக்குழாய் கற்கள் கண்டறியப்பட்டால், ஆர் சி பி என்னும் எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் பித்தக்குழாய் கற்கள் அகற்றப்பட வேண்டும்.

பித்தப்பை அறுவை சிகிச்சைக்குப்பின் பித்த குழாயில் கற்கள் வர வாய்ப்பு 3 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.,

வடிக்குழாய் வழியாக நீர் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன அதில் முக்கியமானவை.,

1) தொடர் நுண்ணுயிரின் தாக்கத்தினால் ஏற்படும் நீர் வடிக்குழாய் வழியாக வரலாம்.

2) கல்லீரல் சுருக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சில சமயங்களில் சிறு ரத்த கசிவு வரலாம்.

3) கல்லீரல் சுருக்கத்தினால் உருவாகும் நீர் வடிக்குழாய் வழியாக வெளியேறலாம்.

4) சில சமயங்களில் வடிகுழாய் வழியாக பித்த நீர் வரலாம்.

வடிகுழாய் வழியாக பித்தநீர் வருவதற்கு சில முக்கியமான காரணங்களாக.,

 A)சில சமயம் பித்த குழாயின் அடிப்பகுதியில் கல் சிக்கிக்கொண்டால் பித்த குழாயில் பித்தத்தின் அழுத்தம் அதிகமாகும். இதன் எதிரொலியாக பித்தப்பை குழாயில் போடப்பட்டு இருக்கும் கிளிப் நழுவி அதிலிருந்து பித்த நீர் வெளியேறி வடிக்குழாய் வழியாக பித்தம் வருவதற்கு வாய்ப்புள்ளது.

B) சில சமயம் பித்த குழாய்களில் மாறுதல்கள் இருந்தால் அவை அறுவை சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டு அதிலிருந்து பித்த நீர் வெளியேறி வடிகுழாய் வழியாக வெளியே வரலாம்.

C) லஸ்கா எனப்படும் பித்த நீர் குழாய் ஆனது பித்தப்பையையும் கல்லீரலையும் நேரடியாக இணைக்கும் ஒன்றாகும். அறுவை சிகிச்சையின் போது இக்குழாய் பாதிக்கப்பட்டாலும், பித்த நீர் கசிந்து வடிக்குழாய் வழியாக பித்த நீர் வெளியே வரலாம். அறுவை சிகிச்சையின் போது இக்குழாய் கண்டறியப்பட்டால், அதை கிளிப் மூலம் அடைப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சில சமயங்களில், பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது பித்த குழாயில் பாதிப்பு ஏற்பட்டால் கூட பித்த குழாயிலிருந்து பித்த நீர் கசிந்து வடிக்குழாய் வழியாக வரலாம். பித்தப்பை கல்லின் பாதிப்பு நீண்ட நாட்களாக இருந்து பித்தப்பை தொடர் அழற்சி இருக்குமானால் சில சமயங்களில் பித்தப்பையை பிரிக்கும் போது பித்த குழாய் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

D) வடிக்குழாயில் சாதாரண நீர் வந்தாலோ அல்லது சிறு ரத்த கசிவு இருந்தாலோ தானாக சரியாக வாய்ப்புள்ளது. கல்லீரல் சுருக்கத்தால் வரும் நீரை மருந்து மூலம் சரிப்படுத்தலாம். ஆனால், பித்த குழாய் சம்பந்தப்பட்ட பித்தநீர் வடிக்குழாயில் வந்தால் அதற்கு முக்கியமான காரணம் என்ன என்பதை எம் ஆர் சி பி பரிசோதனையில் கண்டறியலாம். கல்லீரல் பகுதியில் வரும், பித்தகசிவு தானாக சரியாக வாய்ப்புள்ளது. பித்தப்பை குழாயில் இருந்தோ அல்லது பித்தக் குழாயில் இருந்தோ வரும் பித்தம் சிறிதளவு இருக்குமானால் அவை தானாக சரியாக வாய்ப்புள்ளது. ஆனால், பித்தக்கசிவு தொடர்ந்து இருக்குமானால் ஆர் சி பி என்னும் எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் பித்த குழாயில் ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது. இச்சிகிச்சைக்குப் பின் பித்த நீர் கசிவின் அளவு குறைவதற்கோ அல்லது நிற்பதற்கோ வாய்ப்புள்ளது. சில சமயங்களில் ஏதோ ஒரு காரணத்தினால் பித்தக்குழாய் அதிகமாக பாதிக்கப்பட்டால் பித்த குழாய் சுருக்கம் வர வாய்ப்புள்ளது இத்தருணத்தில் பித்த குழாய் மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.