லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில் இருந்து திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை
பொதுவாக பித்தப்பை கற்களுக்கு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையே சிறந்ததாகும். லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவதற்கு பல முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக., நோயின் தாக்கம் குறைவாக இருந்தால் லேப்ராஸ்கோபி பித்தப்பை அறுவை சிகிச்சை சுலபமாக முடிந்து விடும். சில சமயங்களில் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் குறிப்பாக திடீர் பித்தப்பை அழற்சி பித்தப்பையில் சீதம் தேங்குதல், பித்தப்பை வெடித்தல், பித்தப்பை அழுகுதல், மற்றும் தொடர் திடீர் பித்தப்பை அழற்சிகளால் பித்தப்பை அறுவை சிகிச்சை கடினம் ஆகின்றது. இத்துடன், கல்லீரலில் சுருக்கம் இருக்கும்போது பித்தப்பை அறுவை சிகிச்சை மேலும் கடினம் ஆகலாம். இத்தருணங்களில்., கெலோட்டின் முக்கோணத்தை கண்டுபிடிப்பதும் முக்கோணத்தில் உள்ள உறுப்புகளை பிரிப்பதும் கடினமாக இருக்கலாம் அவ்வாறு இருப்பின் குறிப்பாக லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை சிக்கல்களை உருவாக்கலாம் என சந்தேகப்பட்டால்., லேப்ராஸ்கோப்பி முறையை கைவிட்டு திறந்த அறுவை சிகிச்சை செய்வது சிறந்ததாகும்.
சில சமயங்களில் பித்தக்குழாயின் அமைப்புகளில் பிறவியிலேயே சில மாறுதல்கள் இருக்கலாம். அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும். எம் ஆர் சி பி பரிசோதனையின் மூலம் இவைகள் கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சையின் போது கவனமாக கையாள்வது மிகவும் முக்கியமாகும். அறுவை சிகிச்சைக்கு முன் எம் ஆர் சி பி செய்யப்படாவிட்டால், அறுவை சிகிச்சையின் போது பித்த குழாய்களில் ஏதாவது மாறுதல்கள் இருப்பதாக சந்தேகப்பட்டால் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையை கைவிட்டு திறந்த அறுவை சிகிச்சை மேற்கொள்வது நல்லதாகும். லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நல்லதா? அல்லது சிறந்த அறுவை சிகிச்சை நல்லதா? என்பதை விட பாதிப்பற்ற அறுவை சிகிச்சையே சிறந்தது என்பது முக்கியமானது..!
சில சமயங்களில் பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பித்த குழாயில் கற்கள் ஏற்பட்டு பித்த குழாய் அடைப்பு ஏற்படுவதால் மஞ்சள் காமாலை வரலாம் சில சமயங்களில் கணைய அழற்சி கூட சேர்ந்து இருக்கலாம். இத்தருணங்களில் பித்தப்பை அறுவை சிகிச்சை கடினமாக இருக்கலாம். ஏனெனில், தொடர் அழற்சியால் கேலோட்டின் முக்கோணத்தில், உள்ள உறுப்புகளை தனித்தனியாக கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கலாம். அவ்வாறு, இருப்பின் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை சிக்கலாக இருந்தால் திறந்த அறுவை சிகிச்சை முறையில் பித்தப்பை அகற்றுவது நல்லது..
லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை
லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை என்பது பல உயர்தர கருவிகளை ஒன்றிணைத்து செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும். குறிப்பாக கேமரா ஒளிவூட்டும் கருவி, வயிற்று அழுத்தத்தை பெருக்க, காற்றை உள்ளே அனுப்பும் கருவி மற்றும், ஐசிஜி வசதிகள் குறிப்பிடத்தக்கவை. இதில் ஏதாவது, குறிப்பிட்ட கருவிகள் செயல்படாமல் இருந்தால் லேப்ராஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்வது கடினமாகிவிடும். இத்தருணங்களில், லேப்ராஸ்கோபிக்கு மாற்றாக திறந்த அறுவை சிகிச்சை செய்தல் நன்று.
லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையின் போது, அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்க மருத்துவரோடு உடன் இருக்கும் நபர்களுக்கும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை பற்றிய நுணுக்கம் தெரிந்து இருத்தல் மிக முக்கியமானது. லேப்ராஸ்கோபி என்பது, பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். பொதுவாக அறுவை சிகிச்சையின் போது எந்த வகை அறுவை சிகிச்சை என்பதை விட எவ்வளவு பாதுகாப்பாக செய்யப்படுகிறது என்பதே முக்கியமானதாகும். எனவே, லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையின் போது ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக அதை திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற்றி பாதுகாப்பான அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையின் போது, திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற்ற வேண்டுமா? என்பதை அறுவை சிகிச்சையின் போது மட்டுமே முடிவு செய்யப்படும். எனவே, லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் இருந்து திறந்த அறுவை சிகிச்சை எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையின் போது பித்த குழாய் மற்றும் பித்தப்பை குழாய்களை கண்டறிவதில் சிரமம் இருந்தால் திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற்றப்பட வேண்டும். லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் இருந்து திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற்றப்படுதலை லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தோல்வி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது பொதுவாக லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையின் போது திறந்த அறுவை சிகிச்சைக்கும் ஒப்புதல் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.