blog-post-image

திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

Posted on 2025-05-14 02:58:05 by Dr. Sathish

திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

இம்முறையில் பித்தப்பை ஆனது வயிற்றைத் திறந்து அகற்றப்படுகிறது. பொதுவாக, பித்தப்பை கற்களுக்கு லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை  செய்யப்படுகிறது. என்றாலும் கூட சில சமயங்களில் லேப்ராஸ்கோபி முறையில் சிக்கல்கள் இருந்தால் வயிற்றை திறந்தே பித்தப்பை அகற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. திறந்த முறை பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு முக்கியமான தருணங்களாவன;

1)லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையில் சிக்கல்கள் ஏற்படுதல்

2)பித்தப்பை கல்லுடன் பித்தக்குழாயில் பெரிய கற்கள் சேர்ந்திருப்பது, பித்த குழாயில் பெரிய கற்கள் இருந்தால் சில சமயங்களில் ஆர் சி பி மூலம் அவைகளை அகற்ற முடியாவிட்டால் திறந்த முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

3)ஏற்கனவே வயிற்றின் மேற்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தால் உள்ளிருக்கும் குடல் ஒட்டுதலால் லேப்ராஸ்கோப்பி முறை சிரமமாக இருக்கலாம் .

4)நோயாளியின் பொதுநலம் மோசமாக இருந்தால், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை கடினமாக இருக்கலாம்.

5)ஏற்கனவே இரைப்பை சம்பந்தப்பட்ட வியாதிக்கு இரைப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் பித்தப்பை கல் உடன் பித்த குழாய் கற்கள் இருந்தால், இ ஆர் சி பி செய்வது சிரமம். இத்தருணங்களில், பித்த குழாய் கற்களுக்காக, திறந்து அறுவை சிகிச்சை செய்வதே சரியான ஒன்றாகும். பித்தக் குழாயில் கற்கள் இருக்கும் சமயத்தில் பித்தப்பை அகற்றப்படுவதோடு பித்த குழாய் கற்கள் அகற்றப்பட்டு டி டியூப் என்னும் குழாய் பொருத்தப்படுகிறது.

6) சில சமயங்களில், பித்த குழாய் ஆனது முன் சிறு குடலுடன் அல்லது சிறு குடலுடன் இணைக்கப்பட வேண்டுமென்றால் திறந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.

7)சில சமயங்களில் தேர்ச்சி பெற்ற லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்,  இல்லாத நேரத்தில் திறந்த அறுவை சிகிச்சை செய்தல் நன்று.

திறந்த பித்தப்பை அறுவை சிகிச்சை செய்முறை;

 பொதுவாக இந்த அறுவை சிகிச்சை முழு மயக்கத்தில் செய்யப்படுகிறது. சில சமயங்களில் நோயாளி முழு மயக்கத்திற்கு தகுதியில்லை என்றால் முதுகு தண்டுவட ஊசியின் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது. பொதுவாக, அறுவை சிகிச்சைக்கு முன் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள்  இரத்த குழாய் வழியாக செலுத்தப்படுகின்றன. அதற்குப்பின் வயிற்றுப் பகுதி கிருமிநாசினியால் சுத்தப்படுத்தப்பட்டு சுத்தமான துணிகள் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படும் பகுதி பாதுகாக்கப்படுகின்றன. பொதுவாக, வயிற்றின் வலது புறம் மேல்பகுதியில் குறுக்காக வயிறு திறக்கப்படுகின்றது, வயிறு திறக்கப்பட்ட பின் குறிப்பிட்ட உறுப்புகளை தள்ளிப் பிடிக்கும் கருவிகளால் கல்லீரல் மேற்புறமாகவும் இரைப்பை இடது பக்கமும், மலக்குடல் கீழ்புறமாகவும் தள்ளப்படுகின்றன. இத்தருணத்தில், பொதுவாக பித்தப்பையும் கேலோட்டின் முக்கோணத்தையும் கண்டறியலாம். சில சமயங்களில் குடலின் சில பகுதிகளோ அல்லது குடல் சார்ந்த கொழுப்பு பகுதிகளோ பித்தப்பையில் ஒட்டி இருந்தால் அதை முதலில் பிரித்தல் மிகவும் முக்கியமானதாகும். இதற்குப் பின் கேலோட்டின் முக்கோணம் கண்டறியப்பட்டு, பித்தப்பை தமனி மற்றும் பித்தப்பை குழாய் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும். இதில் மிக முக்கியமாக, பித்த குழாய்க்கு எந்த சேதமும் வராமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும். சில சமயங்களில் பித்தப்பை தொடர் அழற்சியால் கேலோட்டின் முக்கோணத்தை பார்ப்பதும் அதில் உள்ள உறுப்புகளை பிரிப்பதும் கடினமானதாக இருக்கலாம். இத்தருணத்தில், பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்தப்பையின் தலைப்பகுதியில் இருந்து தொடங்கப்பட்டு கேலோட்டின் முக்கோணத்தை நோக்கி செய்யப்படுகின்றது. இம்முறையில், அறுவை சிகிச்சையின் போது சிறு ரத்த கசிவு ஏற்பட்டு சில தடங்கல்கள் வந்தாலும் பித்தக்குழாய்க்கு எந்த பாதிப்பும் வருவதில்லை என்பதால் இம்முறையும் பரிந்துரைக்கப்படுகின்றது. பொதுவாக, கேலோட்டின் முக்கோணம் கண்டறியப்பட்டு அதில் உள்ள உறுப்புகளான பித்தப்பை குழாய் மற்றும் பித்தப்பை தமனி துண்டிக்கப்பட்டு பித்தப்பை கல்லீரலில் இருந்து பிரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றது. இதற்கு பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து இருந்தால் அவை நிறுத்தப்பட வேண்டும். பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது சிக்கல்கள் இருந்தாலோ அல்லது நுண்ணுயிரியின் தாக்கம் அதிகமாக இருந்தாலோ வடிகால் குழாய் பொருத்தப்பட வேண்டும். இதற்குப் பின் வயிறானது நிலையான தையல்களால் உட்பகுதி மூடப்பட்டு எடுக்கப்படும் தையலால் தோல் பகுதி மூடப்படுகின்றது.

சரியாக செய்யப்பட்ட திறந்த அறுவை சிகிச்சையும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சையும் ஓரளவு ஒரே மாதிரியான முடிவை கொடுக்கின்றன. திறந்த அறுவை சிகிச்சையில் வலி அதிகமாக இருப்பின் முதுகுத்தண்டு ஊசி மூலம் வலி குறைக்கப்படுகின்றது. திறந்த அறுவை சிகிச்சைக்கு பின் ஆறு மாதத்திற்கு கடின எடை தூக்கும் வேலை செய்தல் கூடாது. அத்துடன், திறந்த அறுவை சிகிச்சையில் தழும்பு பெரிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையில் கூட கேலோட்டின் முக்கோணத்தில் அடர்ந்த ஒட்டுதல்கள் இருந்தால், அந்த தருணத்தில் அம்முக்கோணத்தில் உள்ள உறுப்புகளை பிரிப்பதே கடினமாகிவிடும். இத்தருணத்தில், பித்த குழாய்க்கும், பித்தப்பை குழாய்க்கும் உள்ள இடைவேளியை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால் பித்த குழாய்க்கு சேதம் ஏற்படாதவாறு பித்தப்பை குழாயின் அருகில் உள்ள பித்தப்பையின் ஒரு பகுதியை விட்டுவிட்டு பித்தப்பை அகற்றப்படுகின்றது.

இந்த அறுவை சிகிச்சை முறையில் கேலோட்டின் முக்கோணம் கண்டறியப்பட முடியாத போது முதலில் பித்தப்பை திறக்கப்பட்டு பித்தப்பை கற்களும் பித்த நீரும் வெளியேற்றப்படுகின்றது. அதற்குப்பின் பித்த பையின் வாய் பகுதி கண்டறியப்பட்டு அதுவரை பித்தப்பை அகற்றப்படுகின்றது. பித்தப்பை குழாயில் கற்கள் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட பின் பித்தப்பை வாய்ப்பகுதி தைக்கப்பட்டு மூடப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சை முறையை சப்டோட்டல் பித்தப்பை அகற்றும் முறை என அழைக்கப்படுகின்றது.

 இம்முறையில் பித்த குழாய்க்கு பாதிப்பு ஏற்படுவது இல்லை ஆனால் சில சமயம் மீதி இருக்கும் பித்தப்பையின் பகுதியிலோ அல்லது பித்தப்பை குழாயிலோ கற்கள் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த அறுவை சிகிச்சைக்கு பின் வலி ஏற்பட்டால் எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் எஞ்சியிருக்கும் பித்தப்பை அல்லது பித்தப்பை குழாயில் கற்கள் இருக்கிறதா என்பதை கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு கற்கள் இருந்தால் அதற்கான சிகிச்சையும் தேவைப்படலாம்.