லேப்ராஸ்கோபி சப்டோட்டல் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை
பொதுவாக பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையில் மொத்த பித்தப்பையோடு பித்தப்பை குழாயின் ஒரு பகுதியும் அகற்றப்படுகின்றது. பித்தப்பை அகற்றப்பட்ட பின் மீதி இருக்கும் பித்தப்பை குழாயின் அளவு 5 மில்லி மீட்டருக்கு குறைவாகவே இருக்க வேண்டும். ஆனால், சில சமயங்களில் தொடர்அழற்சியாலும் பித்த குழாயில் உள்ள அமைப்புகளின் மாறுதல்களாலும் பித்தப்பையை முழுமையாக அகற்றப்பட முடியாமல் போகலாம். லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது பித்தப்பை முழுமையாக அகற்றப்பட முடியாவிட்டால் பித்தப்பையின் ஒரு சிறு பகுதியும், பித்தப்பை குழாயும் விடப்பட்டு பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை முடிக்கப்படுகிறது. இதையே லேப்ராஸ்கோப்பி சப்டோட்டல் பித்தப்பை அறுவை சிகிச்சை என்கிறோம். கேலோட்டின் முக்கோண பகுதியில் அதிக அழற்சி இருப்பது, அதிகமாக ஒட்டி இருப்பது மற்றும் பித்த குழாய் அமைப்புகளில் மாறுதல்கள் இருப்பது,மற்றும் நோயாளியின் பொதுநலம் மோசமாக இருத்தல், போன்றவை சப்டோட்டல் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு முக்கியமான காரணங்களாகும்.
இந்த அறுவை சிகிச்சையும் முழு மயக்கத்தில் செய்யப்படுகின்றன. சாதாரண பித்தப்பை அறுவை சிகிச்சை போன்றே இந்த அறுவை சிகிச்சையும் துவங்கப்படுகின்றது. அறுவை சிகிச்சையின் போது கேலோட்டின் முக்கோணத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தாலோ அல்லது முழுமையாக பித்தப்பை அகற்றுவதில் சிக்கல் இருந்தாலோ சப்டோட்டல் பித்தப்பை அகற்றும் முறை மேற்கொள்ளப்படுகின்றது. இம்முறையில், பித்தப்பை திறக்கப்பட்டு பித்தநீர் அகற்றப்படுகின்றது. அதற்கு பின் வயிற்றினுள் உள் பை ஒன்று செலுத்தப்பட்டு, அப்பையினுள் கற்கள் சேகரிக்கப்படுகின்றன. குறிப்பாக, அறுவை சிகிச்சைக்கு பின் எந்த கற்களும் வயிற்றினுள் தேங்கக் கூடாது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். பித்தப்பையினுள் உள்ள கற்கள் அகற்றப்பட்ட பின் பித்தப்பையின் வாய்பகுதியை கண்டறிந்து அது வரையிலான பித்தப்பை அகற்றப்பட வேண்டும். இம்முறையில் பித்தப்பை குழாய் பிரிக்கப்படாததால் பித்தப்பையின் வாய் பகுதியை தையல்கள் மூலமே மூடப்படுகின்றன. இதற்குப் பின் பித்தப்பையும் பித்தப்பை கற்களும் உள் பை வழியாக வெளியே கொண்டு வரப்படுகின்றது. இதற்குப் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதி சுத்தமான நீரால் கழுவப்பட்டு அனைத்து அசுத்தங்களும் அகற்றப்படுகின்றன. அறுவை சிகிச்சையின் முடிவில் வடிகுழாய் ஒன்று பொருத்தப்பட்டு வயிற்றில் உள்ள துவாரங்கள் மூடப்படுகின்றன.
இந்த அறுவை சிகிச்சையின் பின் விளைவாக சில சமயங்களில் பித்தப்பை குழாய் பகுதியில் இருந்து பித்த நீர் வெளியேறலாம். இந்த பித்தப்பை குழாய் பகுதி அதிகமாக பாதிப்படைந்திருந்தாலோ அல்லது பித்தக் குழாயில் கற்கள் இருந்தாலோ இவ்வாறு பித்தகசிவு ஏற்படலாம். இவ்வாறு பித்தகசிவு ஏற்பட்டால் சில சமயங்களில் தானாகவே நின்றுவிடும். பித்தகசிவு அதிகமாக இருந்தால் எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் பித்தகசிவு ஏற்படும் இடம் உறுதி செய்யப்பட்டு இ ஆர் சி பி மூலம் பித்தக் குழாயில் வடிகுழாய் பொருத்துவதால் பித்தக்கசிவு குறைய வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் பித்தகசிவு ஏற்பட்டால் கூட பித்த குழாய்க்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை என்பது இம்முறை அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் ஆகும்.