blog-post-image

லேப்ராஸ்கோப்பிக் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் அதே வலி வருதல்

Posted on 2025-05-20 16:37:35 by Dr. Sathish

லேப்ராஸ்கோப்பிக் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் அதே வலி வருதல்

பித்தப்பை கல்லின் முக்கியமான வெளிப்பாடு வயிற்றுவலி ஆகும். இந்த வயிற்று வலிக்கு பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையே முக்கியமான சிகிச்சை ஆகும். சில சமயங்களில், அறுவை சிகிச்சைக்கு பின் கூட வயிற்று வலி வரலாம். அதற்கு முக்கியமான காரணங்களாவன.,

1)பித்தப்பை குழாயில் கல் தேங்கி இருத்தல்

2)எஞ்சிய பித்தக் குழாய் கற்கள்

3)அறுவை சிகிச்சைக்கு பின் கண்டறியப்படும் பித்தக்குழாய் கற்கள்

4)சப்போட்டல் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் மீதி இருக்கும் பித்தப்பையில் கல் உருவாதல்

1) பித்தப்பை குழாயில் கல் தேங்கி இருத்தல் 

பொதுவாக பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது பித்தப்பையும் பித்தப்பை குழாயின் பெரும்பாலான பகுதியும் அகற்றப்படுகின்றன. சில சமயம் பித்தப்பை குழாய் முழுவதுமாக அகற்றப்பட முடியாவிட்டால் மீதி இருக்கும் பித்தப்பை குழாயில் கல் தேங்கிருக்க வாய்ப்புள்ளது. இந்த பித்தப்பைகுழாய்  கல் உணவுக்கு பின் பித்தப்பை கல் வலி போன்றே வலியை உருவாக்குகின்றது. எனவே, அறுவை சிகிச்சையின் போது பித்தப்பை குழாயில் கல் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யும்போது பித்தப்பையில் ஏற்படும் அசைவுகளால் பித்தப்பையில் உள்ள கற்கள் பித்தப்பை குழாய்க்குள் சென்று தேங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. மற்றும் பித்தப்பை தொடர் அழற்சியால் கேலோட்டின் முக்கோணம் அறுவை சிகிச்சையின் போது சரியாக கண்டறியப்பட முடியாவிட்டால் பித்தப்பை குழாயின் ஒரு பகுதி விடுபட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு விடுபட்ட பித்தப்பை குழாயில் கற்கள் தேங்கி இருந்தால் பித்தப்பை கற்கள் போன்ற வலி உருவாகின்றது. அறுவை சிகிச்சையின் போது பித்தப்பை குழாயில் உள்ள கற்கள் கண்டறியப்படாமல் இருந்தால் அதுவும் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின் வலிக்கு காரணமாகின்றன. பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது மீதி இருக்கும் பித்தப்பை குழாயின் நீளம் 5 மில்லி மீட்டருக்கு குறைவாகவே இருக்க வேண்டும் மீதி இருக்கும் பித்தப்பை குழாயின் நீளம் 5 மில்லி மீட்டருக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது பித்தப்பையின் ஒரு பகுதி மீதி இருந்தாலோ அதில் புதிதாக கல் உருவாகி அறுவை சிகிச்சைக்கு பின்னும் பழைய வலி உருவாகலாம்.

இதில் குறிப்பாக அறுவை சிகிச்சைக்கு பின் வலி வந்தால் இரத்த கல்லீரல் செயல்திறன் பரிசோதனையில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை ஆனால் எம் ஆர் சி பி பரிசோதனை எஞ்சி இருக்கும் பித்தப்பை குழாய் கல்லையும் பித்தப்பை குழாயையும் கண்டுபிடித்து விடுகின்றன. வலி தொடர்ந்து இருக்குமானால் எஞ்சி இருக்கும் பித்தப்பை குழாயையும் கல்லையும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது திறந்த அறுவை சிகிச்சை மூலமாகவோ அகற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

2)எஞ்சிய பித்துக்குழாய் கற்கள்

பொதுவாக பித்தப்பை கல்லால் வயிற்று வலி வரும்போது வயிற்றிற்கு செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பித்தப்பை கல்லை கண்டுபிடித்து விடுகின்றது. சில சமயங்களில் இத்துடன், பித்தக் குழாயில் கூட கற்கள் இருக்கலாம். கல்லீரல் செயல்திறன் இரத்த பரிசோதனையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கலாம். இத்தருணத்தில்., லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு பின், அறுவை சிகிச்சைக்கு முன் இருந்த அதே வலி வர வாய்ப்பு உள்ளது.

எம் ஆர் சி பி பரிசோதனையின் மூலம் இதை உறுதிப்படுத்தலாம். இதற்கு சிகிச்சை முறை  இ ஆர் சி பி சிகிச்சை மூலம் பித்த குழாய் கற்கள் அகற்றப்பட வேண்டும்.

3)அறுவை சிகிச்சைக்குப் பின் கண்டறியப்படும் பித்க்குழாய் கற்கள்

பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது பித்தப்பையில் ஏற்படும் அசைவுகளால், பித்தப்பையில் உள்ள கல் பித்தக் குழாய்க்குள் நழுவ வாய்ப்புள்ளது. இவ்வாறு நழுவிய கற்களால் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப்பின் அதே மாதிரியான வயிற்று வலி வரலாம். கல்லீரல் செயல்திறன் ரத்தப் பரிசோதனை மற்றும் எம் ஆர் சி பி பரிசோதனைகள் இதை கண்டறிய உதவும். இ ஆர் சி பி சிகிச்சை மூலம் இந்த பித்தக்குழாய் கற்கள் அகற்றப்பட வேண்டும்.

4)சப்டோட்டல் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் எஞ்சியிருக்கும் பித்தப்பையில் கல் உருவாதல்

பொதுவாக பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது முழு பித்தப்பையையும் பெரும்பாலான பித்தப்பை குழாயும் அகற்றப்பட வேண்டும். சில சமயங்களில் பித்தப்பை அழற்சி மிக அதிகமாக இருந்தாலோ அல்லது பித்தக் குழாயின் அமைப்புகளில் மாறுதல்கள் இருந்தாலோ பித்தப்பை குழாய் பித்தக் குழாயில் இணையும் இடத்தை கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்படலாம். இத்தருணத்தில், சில சமயங்களில் பித்தப்பை குழாயோ அல்லது பித்தப்பையின் ஒரு சிறு பகுதியோ அகற்றப்படாமல் விடுபடலாம். இவ்வாறு அகற்றப்படாமல் விடுபட்ட பித்தப்பை குழாயில் கற்கள் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. அல்லது நாளடைவில், புது கற்கள் கூட உருவாக வாய்ப்பு உள்ளது.  இத்தருணங்களில், பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு முன் இருந்த மாதிரியான வலி வரலாம். இதை கண்டுபிடிப்பதற்கு எம்ஆர்சிபி பரிசோதனை மிகவும் உதவியாக இருக்கும். தொடர் வலி இருக்கும் நேரத்தில் மீதி இருக்கும் பித்தப்பை குழாயை லேப்ராஸ்கோப்பி மூலமாகவோ அல்லது திறந்த அறுவை சிகிச்சை மூலமாகவோ அகற்றப்பட வேண்டும்.