blog-post-image

லேப்ராஸ்கோபிக் அகன்ற பித்தப்பை அறுவை சிகிச்சை

Posted on 2025-05-20 16:46:30 by Dr. Sathish

லேப்ராஸ்கோபிக் அகன்ற பித்தப்பை அறுவை சிகிச்சை

பித்தப்பை கல்லுக்காக பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் போது பித்தப்பையில் உள்ளிருக்கும் கற்கள் மட்டுமே அகற்றப்படுகின்றன. ஆனால் பித்தப்பை புற்று வியாதியின் போது செய்யப்படும் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையில் பித்தப்பையில் உள்ள புற்றுக்கட்டியுடன் பித்தப்பையை சுற்றி இருக்கும் கல்லீரலின் ஒரு சிறு பகுதி குறிப்பாக ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு சேர்த்து அகற்றப்படுகின்றது. இதை லேப்ராஸ்கோபி அகன்ற பித்தப்பை அறுவை சிகிச்சை என்கிறோம். பித்தப்பை கல்லால் பாதிக்கப்பட்டவர்க்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் போது பித்தப்பை கல் உடன் பித்தப்பையினுள் சதை வளர்ச்சி இருப்பது கண்டறிய படலாம். இச்சதை வளர்ச்சியை எம் ஆர் சி பி மற்றும் சிடி பரிசோதனையில் உறுதிப்படுத்தலாம். பி இ டி என்னும் சிறப்பு பரிசோதனை மூலம் இது புற்று வியாதியா இல்லையா என்பதை கண்டறியலாம். பித்தப்பை புற்று வியாதியாக இருக்கும் தருணத்தில், அதற்கான சிகிச்சை முறை அகன்ற பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை முறையாகும்.

பொதுவாக இந்த லேப்ராஸ்கோபிக் அகன்ற பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை முழு மயக்கத்தில் செய்யப்படுகின்றது. முழு மயக்கம் கொடுப்பதற்கு தேவையான பரிசோதனைகளுடன் இரத்த கல்லீரல் செயல்திறன் பரிசோதனையும் செய்யப்பட வேண்டும். நோயாளிக்கு வேறு வியாதிகள் குறிப்பாக சர்க்கரை வியாதி, இருதய வியாதி, அல்லது நுரையீரல் வியாதி இருப்பின் சம்பந்தப்பட்ட நிபுணர்களின் பரிந்துரைகள் கேட்டறிதல் வேண்டும். இதற்குப் பின் மயக்குனரின் ஆய்விற்கு பின் நோயாளி லேப்ராஸ்கோபி அகன்ற பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர்.

 ஐ சி ஜி என்னும் சிறப்பு வசதி இருப்பின் ஐசிஜி மருந்தானது அறுவை சிகிச்சைக்கு 45 நிமிடத்திற்கு முன் செலுத்தப்பட வேண்டும். இந்த ஐசிஜி சிறப்பு வசதி பித்த குழாய் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானதாகும். லேப்ராஸ்கோபி அகன்ற பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை சாதாரணமாக செய்யப்படும் லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை மாதிரியே முழு மயக்கத்தில் செய்யப்படுகின்றன. லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையுடன் கீழே குறிப்பிடப்படும் செயல்முறைகள் சேர்க்கப்படுகின்றன.,

  1. லேப்ராஸ்கோபிக் அகன்ற பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையில் கேலோட்டின் முக்கோணத்தில் உள்ள நிணநீர் கட்டிகள் அகற்றப்பட வேண்டும்.
  2. பித்தப்பையை சுற்றி இருக்கும் கல்லீரல் சுமார் ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு அகற்றப்பட வேண்டும்.
  3. பித்தப்பை குழாய் முழுமையாக அகற்றப்பட வேண்டும்
  4. பித்தக்குழாய் சுற்றி இருக்கும் நிணநீர் நாளங்களும்முழுமையாக அகற்றப்பட வேண்டும்
  5. அறுவை சிகிச்சையின் போது பித்தப்பையில் ஓட்டை விழாமல் பாதுகாக்கப்பட்டால் கேன்சர் செல்கள் சிதறுவதை தடுக்கலாம்.
  6. பித்தப்பை அகற்றப்பட்ட பின் பித்தப்பையை உள்பையினுள் வைத்து எடுப்பதின் மூலம் கேன்சர் செல்கள் பரவுவதை ஓரளவு தடுக்க முடியும்.

லேப்ராஸ்கோபிக் அகன்ற பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு ஹார்மோனிக் ஸ்கேல்ப்ல் என்ற சிறப்பு கருவியும், பைபோலார் என்ற டைதரமியும் மிக உதவியாக இருக்கும். அகற்றப்பட்ட பித்தப்பையும் பித்தப்பை கட்டியும் சதை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு புற்று வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்யப்படுகின்றது.