blog-post-image

பித்தப்பை கற்கள் உடன் பித்த குழாய் கற்கள்

Posted on 2025-05-20 16:47:27 by Dr. Sathish

பித்தப்பை கற்கள் உடன் பித்த குழாய் கற்கள்

பித்தப்பை கற்கள் சில சமயங்களில் நழுவி பித்தக் குழாய்க்கு வருவதால் பித்த குழாயில் கற்கள் உருவாகின்றன. பித்தப்பை கல் அல்லது பித்தக் குழாய் கல்லில் முதல் வெளிப்பாடு வயிற்று வலியுடன் கூடிய வாந்தி ஆகும். பித்தக் குழாய் கற்களால் வலியுடன் மஞ்சள் காமாலை மற்றும் கணைய அழற்சி வரலாம். இத்தருணத்தில், சிகிச்சை முறை முதலில் பித்த குழாய் கல்லுக்கும் பின் பித்தப்பை கல்லுக்கும் செய்யப்படுகின்றன. பொதுவாக சிகிச்சை செயல் முறைகளாவன., முதலில் நோயாளிக்கு வலி எதிர்ப்பு மருந்துடன் நோய் எதிர்ப்பு மருந்துகளும் இரத்த குழாய் வழியாக செலுத்தப்படுகின்றன. தேவைப்பட்டால் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி கட்டுப்படுத்த தேவையான மருந்துகளும் செலுத்தப்பட்டு நோயாளியின் உடல்நிலை சீராக்கப்படுகின்றன. இதற்கு பின் கற்கள் பித்தப்பையில் மட்டும் உள்ளதா, அல்லது பித்தப்பையுடன் பித்த குழாயில் உள்ளதா என்பதை கண்டறிய சிறப்பு பரிசோதனைகளான எம் ஆர் சி பி மற்றும் கல்லீரல் செயல்திறன் இரத்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன .

இதற்குப் பின், நோயாளியின் பொதுநலம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளான நுரையீரல் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு, செய்யப்பட்ட எல்லாவித பரிசோதனைக்கு பின் எம்முறை சிகிச்சை என்பது முடிவு செய்யப்படுகின்றன. பொதுவாக, செய்யப்படும் சிகிச்சை முறைகளாவன,

01)  ஆர் சி பி உடன் லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

பித்தப்பை கல்லுடன் பித்தக்குழாய் கற்கள் இருந்தால் இரண்டிற்கும் சிகிச்சை செய்யப்பட வேண்டும். முதலில் பித்த குழாய் கற்களுக்கு                      இ ஆர் சி பி சிகிச்சை மூலம் பித்தக் குழாய் கற்கள் அகற்றப்படுகின்றன. பித்த குழாய் கற்கள் அகற்றப்படும் போது, ஸ்டென்ட்  என்னும் செயற்கைக் குழாய் ஒன்று பித்தக் குழாயில் பொருத்தப்படுகின்றது. இ ஆர் சி பி சிகிச்சை முறையால் சில சமயங்களில் இ ஆர் சி பி சம்பந்தப்பட்ட கணைய அழற்சி ஏற்படலாம். எனவே இ ஆர் சி பி சிகிச்சைக்கு பின் 24 இல் இருந்து 48 மணி நேரத்திற்கு பின் லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது. சில சமயங்களில் இ ஆர் சி பி சம்பந்தப்பட்ட கணைய அழற்சி ஏற்படும் தருணத்தில், லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை சற்று பின்னரே மேற்கொள்ளப்படப்படுகின்றன.         இ ஆர் சி பி மற்றும் லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு ஆறு வாரங்களுக்கு பின் மறு சீராய்வு எம் ஆர் சி பி செய்யப்படுகின்றது. இதில் பித்த குழாயில் கற்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின், பித்த குழாயில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட் என்ற குழாய் அகற்றப்படுகின்றது.

02)  ஆர் சி பி மற்றும் திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

பித்தப்பை மற்றும் பித்தப்பை குழாய் கற்களால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதலில் இ ஆர் சி பி சிகிச்சை மூலம் பித்த குழாய் கற்கள் அகற்றப்பட்டு ஸ்டென்ட் என்ற குழாயும் பித்த குழாயில் பொருத்தப்படுகின்றது. இதற்கு பின் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படும் போது லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையே முதன்மையானதாக கருதப்பட்டாலும் கூட, சில சமயங்களில் முடியாமல் போய்விடும். இத்தருணத்தில்., திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக வயிற்றில் மேல் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தால் அங்கே இருக்கும் குடல் ஒட்டுதல்களால் லேப்ரஸ்கோபி சிகிச்சை கடினமாக இருந்தால் திறந்த அறுவை சிகிச்சை முறையில் பித்தப்பை அகற்றப்படுகின்றது. மேலும், சில சமயங்களில் பித்த குழாயில் இருக்கும் கற்கள் பெரிதாக இருந்து. அவற்றை இ ஆர் சி பி மூலம் அகற்றப்பட முடியாவிட்டால் பித்த குழாயில் ஸ்டெண்ட் என்ற குழாய் மட்டும் பொருத்தப்படுகின்றது. பின்னர் திறந்த அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்பட்டு பித்த குழாயை திறந்து பித்த குழாய் கற்களும் அகற்றப்படுகின்றன. பொதுவாக, பித்த குழாய் திறக்கப்பட்டால் அந்த இடத்தை மூடும்போது டி டியூப் என்னும் வடி குழாய் உதவியுடனே மூடப்பட வேண்டும். ஆனால்   இ ஆர் சி பி சிகிச்சையின் போது ஸ்டெண்ட் பொருத்தப்படுவதால், திறந்த அறுவை சிகிச்சை செய்யும்போது திறக்கப்பட்ட பித்தக் குழாயை மூடும்போது டி டியூப் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

03) லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அகற்றுதல் பித்த குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் டி டியூப் வடிகால் பொருத்துதல்

பொதுவாக பித்தப்பை கல்லுடன் ஒரு சில பெரிய பித்தக் குழாய் கற்கள் இருந்தால் இரண்டுமே லேப்ராஸ்கோபிக் முறை மூலம் செய்யப்படுகின்றது. இ ஆர் சி பி சிகிச்சை முறை இல்லாமல் இருந்தாலோ அல்லது பித்த குழாயில் பெரிய கற்கள் இருந்தாலோ  இந்த லேப்ராஸ்கோபி அணுகுமுறை மேற்கொள்ளப்படுகின்றது. இம்முறை அறுவை சிகிச்சைக்கு முன் பித்த குழாயில் இருக்கும் கற்களின் எண்ணிக்கை மற்றும் தன்மை கண்டறியப்படுகிறது. குறிப்பாக பித்த குழாயின் கீழ் பகுதியில் நிறைய சிறு சிறு கற்கள் இருந்தால் அவற்றை அகற்றுவதில் லேப்ராஸ்கோபிக் சிகிச்சை முறை சில சிக்கல்களை உருவாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறுவை சிகிச்சை முறையில் முதலில் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பித்தப்பை குழாய் மற்றும் பித்த குழாய் இணையும் இடத்தை உறுதிப்படுத்தப்படுகின்றன. இதற்குப்பின் பித்தக் குழாயின் இரு பக்கமும் இரண்டு தையல்கள் போடப்பட்டு சுமார் 2 சென்டிமீட்டர் அளவுக்கு பித்த குழாய் நேராக திறக்கப்படுகின்றது. அதற்குப்பின் பல கருவிகளின் உதவியோடு பித்தக் குழாயில் இருக்கும் கற்கள் அகற்றப்படுகின்றன. அனைத்து கற்களும் அகற்றப்பட்டனவா என்பதை கொலஞ்சியோ கிராம் அல்லது கொலஞ்சியோ ஸ்கோப்பி பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. அனைத்து கற்களும் அகற்றப்பட்டால் டி டியூப் என்ற குழாயை பித்தக்குழாயினுள் பொருத்தி திறக்கப்பட்ட பித்தக் குழாய் மூடப்படுகின்றது. இந்த டி டியூப் தனி துவாரம் வழியாக வயிற்றின் வெளியே கொண்டு வரப்படுகின்றது. அகற்றப்பட்ட பித்தப்பையும் பித்த குழாய் கற்களும் உள்பை மூலம் வெளியே எடுக்கப்படுகின்றன. முடிவில் வடிகால் ஒன்று பொருத்தப்படும் போது அறுவை சிகிச்சை நிறைவு பெறுகின்றது. ஆறு வாரங்களுக்கு பின் மறுசீராய்வு எம் ஆர் சி பி பரிசோதனை செய்யப்பட்டு பித்தக் குழாய் கற்கள் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட பின் டி டியூப் அகற்றப்படுகின்றது.

04) திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்த குழாய் கல் அகற்றுதல் மற்றும் பித்தக்குழாய் டி குழாய் வடிகால்.

பித்தப்பையிலும் பித்த குழாயிலும் கற்கள் இருந்து லேப்ராஸ்கோப்பி முறையில் அறுவை சிகிச்சை பண்ண முடியாவிட்டால் குறிப்பாக பெரிய பித்த குழாய் கல் ஏற்கனவே இரைப்பை அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்முறை உதவியாக இருக்கும். இந்த அறுவை சிகிச்சையின் போது சில சமயம் பொது மயக்கம் முடியாவிட்டால், தண்டுவடத்தில் போடப்படும் ஊசி மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. மயக்க மருந்திற்கு  பின் அறுவை சிகிச்சை செய்யப்படும் இடம் சுத்தப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. பின்னர் வயிற்றின் வலது பக்கம் குறுக்காக வயிறு திறக்கப்பட்டு முதலில் பித்தப்பை அகற்றப்படுகின்றது. அதற்குப்பின், பித்த குழாய் கண்டறியப்பட்டு இரண்டு பக்கமும் இரண்டு தையல்கள் போடப்பட்டு, பித்தக் குழாயின் முன் பகுதி தூக்கப்பட்டு பித்த குழாய் ஆனது இரண்டிலிருந்து மூன்று சென்டிமீட்டர் அளவுக்கு நேராக திறக்கப்படுகின்றது. இதற்குப் பின் திறக்கப்பட்ட பித்த குழாயில் உள்ள கற்கள் அனைத்தும் அகற்றப்படுகின்றது. அனைத்து கற்களும் அகற்றப்பட்டனவா என்பதை கொலஞ்சியோகிராம் என்னும் உள்நோக்கி மூலமாக  உறுதி செய்யப்படுகின்றது. கோலிடக்கோ ஸ்கோப்  என்பது பித்தக்குழாய் கற்கள் அகற்றப்பட்டதை உறுதி செய்யும் இன்னொரு முறை ஆகும்.  இதற்குப் பின் டி வடிவிலான வடிகால் குழாய் பித்தக் குழாயினுள்  பொருத்தி பித்த குழாய் மூடப்படுகின்றது. டி குழாய் வயிற்றின் வெளியே கொண்டுவரப்பட்டு வெளியே வராத அளவிற்கு தையல் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. வயிற்றினில் வடிகால் குழாய் பொருத்தப்பட்டு திறந்த வயிறு மூடப்படுகின்றது. சில நாட்களில் நோயாளி வீட்டிற்கு திரும்பலாம். பொதுவாக ஆறு வாரங்களுக்கு பின், எம் ஆர் சி பி பரிசோதனை செய்யப்பட்டு பித்தக் குழாயில் கற்கள் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட பின் டி குழாய் அகற்றப்படுகின்றது.

05) திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்த குழாய் கல் அகற்றுதல் மற்றும் பித்தக் குழாய் முன் சிறு குடல் இணைத்தல்

இந்த அறுவை சிகிச்சை பித்த குழாயில் அதிக கற்கள் இருத்தல், பெரிய கற்கள் இருத்தல், மிக விரிந்த பித்த குழாய் மற்றும் பித்தக்குழாய் கற்கள் திரும்பி வரலாம். என்ற சந்தேகம் இருந்தால் பரிந்துரைக்கப்படுகின்றது. இதில் வயிற்றின் மேல் பக்கம் குறுக்காக வயிறு திறக்கப்பட்டு  பித்தப்பை அகற்றப்படுகின்றது. பித்தக் குழாய் இரண்டு சென்டி மீட்டர் நேராக திறக்கப்பட்டு பித்த குழாய் கற்களும் அகற்றப்படுகின்றது. பித்தக்குழாய் கற்கள் அகற்றப்பட்டது உறுதி செய்யப்படுகின்றது. இதற்குப் பின், பித்தக் குழாயின் அருகில் உள்ள முன் சிறு குடலில் 2 சென்டிமீட்டர் அளவுக்கு குறுக்காக திறக்கப்படுகின்றது. இதற்கு பின் நேராக திறக்கப்பட்ட பித்தக் குழாயும் குறுக்காக திறக்கப்பட்ட முன் சிறுகுடலும் தையல்களால் இணைக்கப்படுகின்றது. இம்முறையில் கல்லீரலில் உருவாகும் பித்த நீர் பித்த குழாய் வழியாக முன் சிறுகுடலை நேரடியாக அடையும். இதனால் எதிர்காலத்தில் பித்த குழாயில் கற்கள் வருமானால் கூட பித்த குழாயில் தேங்காமல் முன் சிறு குடலை அடையும்.

06) திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்தக்குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்தக் குழாய் முன் சிறு குடல் இணைத்தல்

இந்த அறுவை சிகிச்சை பித்தப்பை கல்லால் உருவாகும் மிரிசி சின்ரோம் என்ற பிரச்சனைக்காக செய்யப்படுகின்றது. மிரிசி சின்ரோமில் பித்தப்பைக்கும் பித்தக் குழாய்க்கும் ஒரு இணைவு இருக்கும். எனவே, பித்தப்பை அகற்றப்பட்ட பின் பித்த குழாயில் ஒரு துவாரம் இருக்கலாம். இந்த துவாரம் சிறிதாக இருந்தால் டி குழாய் பொருத்தி டி குழாய் உதவியுடன் துவாரம் மூடப்படுகின்றது. ஆனால் துவாரம் பெரிதாக இருந்தால் சிறு குடலில் முற்பகுதியில், ஒரு பகுதி பித்த குழாயுடன் இணைக்கப்படுகின்றது. இந்த அறுவை சிகிச்சையே ரூ என் ஒய் ஹெப்பாட்டிக்கோ ஜெஜீனாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றது. ஏற்கனவே, பாதிக்கப்பட்ட பித்த குழாயில் சிறு குடல் இணைக்கப்படுவதால் எதிர்காலத்தில் பித்த குழாயில் சுருக்கம் உருவாவதை தவிர்க்கலாம்.