blog-post-image

எண்டோஸ்கோபி பித்தக்குழாய் கல் அகற்றுதல் (இ ஆர் சி பி) மற்றும் லேப்ராஸ்கோப்பி பித்தப்பை அகற்றுதல்

Posted on 2025-05-20 16:51:45 by Dr. Sathish

எண்டோஸ்கோபி பித்தக்குழாய் கல் அகற்றுதல் ( ஆர் சி பி) மற்றும் லேப்ராஸ்கோப்பி பித்தப்பை அகற்றுதல்

பித்தப்பை கல் மற்றும் பித்தக் குழாய் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்முறை பரிந்துரைக்கப்படுகின்றது. பொதுவாக 90% நோயாளிகள் இந்த இரண்டு முறைகளின் வழியாகவே சிகிச்சை நிறைவு பெறுகிறது. பித்தப்பை கற்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையின் மூலமாகவும் பித்த குழாய் கற்கள் கல்லீரல் இரத்த செயல்திறன் பரிசோதனை மற்றும் எம் ஆர் சி பி பரிசோதனை மூலமும் உறுதிப்படுத்தப்படுகின்றது.        இப்பரிசோதனைகளுக்குப் பின் கற்கள் பித்தப்பையில் மட்டும் உள்ளதா, அல்லது பித்தப்பையுடன் பித்த குழாயில் உள்ளதா, என்பது உறுதி செய்யப்படுகின்றது. பித்தப்பை கற்கள் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையையும் பித்தப்பை கல்லும் அகற்றப்படுகின்றன. ஆனால், பித்த குழாய் கற்களுக்கு இ ஆர் சி பி என்னும் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பித்த குழாய் கற்கள் அகற்றப்பட்ட பின்னரே பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.

பித்தப்பை கல் உடன் பித்தக்குழாய் கற்கள் இருந்தால் நோயாளிக்கு அத்துடன் மஞ்சள் காமாலை இருக்கிறதா, அல்லது வயிற்றுவலி, காய்ச்சல் இருக்கிறதா என்பது கண்டறிந்து அதற்கு தேவையான மருந்துகள் குறிப்பாக வலி நிவாரணியோடு, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளும் செலுத்தப்பட வேண்டியது முக்கியம். இத்துடன், நோயாளிக்கு இருக்கும் வேறு வியாதிகள் குறிப்பாக இருதய நோய், நுரையீரல் நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், மற்றும் வேறு நோய்கள் இருந்தால் அதற்கான உரிய சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துடன் எச் ஐ வி, எச் பி வி மற்றும் எச் சி வி வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறியப்பட வேண்டும். அனைத்து பரிசோதனைக்கு பின் எந்த வகையான சிகிச்சை முறைகள் தேவைப்படுகிறது என்பது நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக, பித்த குழாய் கற்களின் எண்ணிக்கை கல்லின் அளவு, பித்தக் குழாயின் அளவு மஞ்சள் காமாலை கணைய அழற்சி போன்றவைகள் சிகிச்சை முறையை நிர்ணயிக்கும்.

பித்தப்பை கல்லுடன் பித்த குழாய் கற்கள் இருப்பின் அதற்கான சிகிச்சை முறை இ ஆர் சி பி என்னும் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறை ஆகும் . இ ஆர் சி  பி சிகிச்சையின் போது பொருத்தப்படும் பித்தக்குழாய் வடிக் குழாய் சுமார் ஆறு வாரங்களுக்கு பின் எண்டோஸ்கோபிக் மூலம் அகற்றப்படுகின்றது. ஆனால் பித்த குழாய் கல்லுடன் நுண்ணுயிரியின் தாக்கம் அதிகமாக இருந்தால் நுண்ணுயிரி எதிர்ப்பான் மூலம் சிகிச்சை தொடங்கப்படுகின்றது. ஆனால் சில சமயங்களில் நுண்ணுயிரின் தாக்கம் மிக அதிகமாக இருந்தால் பித்த குழாயில் சீழ் உருவாகி இருக்க வாய்ப்பு இருக்கின்றது. இத்தருணங்களில் சாதாரண பித்தக் குழாய் கற்கள் அகற்றுதல் சிரமமாக  இருந்தால் பித்தக்குழாயில் வடிக்குழாய் பொருத்தப்பட்டு நுண்ணுயிரியின் தாக்கம் குறைக்கப்படுகின்றது. அதற்குப்பின்., நோயாளியின் உடல்நிலை சீரடைந்த பின் மற்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளியின் உடல்நிலை ஓரளவு சீரான பின் இ ஆர் சி பி சிகிச்சை முறையில் பித்த குழாய் கற்கள் அகற்றுதலும் லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் பித்த குழாயில் இருக்கும் கல் மிகப்பெரியதாக இருந்தாலோ அல்லது வயிற்றின் மேல் பகுதியில் வேறு ஏதாவது அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலோ மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் முடியாமல் போனால், திறந்த அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையும் கற்களும் அகற்றப்பட்டு பித்த குழாய் திறந்து பித்தக்குழாய் கற்கள் அகற்றப்படுவதோடு, டி குழாயும் பொருத்தப்படுகின்றது. பித்தப்பை கற்களோடு பித்த குழாய் முழுக்க கற்கள் இருந்து, அத்துடன் பித்த குழாயும் விரிவடைந்து இருந்தால் திறந்த அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்பட்டு பித்தக்குழாய் கற்களும் அகற்றப்படுவதோடு பித்த குழாயும் முன் சிறு குடலும் இணைக்கப்படுகின்றன. சில சமயங்களில் பித்தப்பைக்கும் பித்தக் குழாய்க்கும் அபூர்வ இணைப்புகள் இருக்குமானால் பித்தப்பை அகற்றப்பட்டு அபூர்வ இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. அத்துடன், சில சமயங்களில் பித்தக் குழாய் சிறு குடலுடன்  இணைக்கப்படுகின்றது. எந்த வகை அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் அறுவை சிகிச்சைக்கு பின் வயிற்று வலி வந்தால்., எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் பித்த குழாயில் கற்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறிந்து அதன்படி சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.