இ ஆர் சி பி மற்றும் திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை
பித்தப்பை கல்லுடன் பித்த குழாயில் கற்கள் இருந்தால் பொதுவாக இ ஆர் சி பி சிகிச்சையுடன் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் நுரையீரல் வியாதி அல்லது இருதய வியாதி இருக்கும் பட்சத்தில் பொது மயக்கம் கொடுப்பது சிக்கலாக இருந்தால், பித்தக்குழாய் கல்லுக்கு இ ஆர் சி பி சிகிச்சை முறையும் பித்தப்பை கல்லுக்கு திறந்த அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது. பித்த குழாய் கல்லினால் நுண்ணுயிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது இ ஆர் சி பி சிகிச்சை மூலம் பித்தக்குழாய் கற்கள் அகற்றப்படுவதால், நோயாளியின் பொது நலனில் முன்னேற்றம் ஏற்படுகிறது. இத்தருணத்தில், பித்தப்பை அழற்சி மோசமாக இருக்கும் நேரத்தில் குறிப்பாக பித்தப்பையில் ஓட்டை அல்லது பித்தப்பையை சுற்றி சீதம் உருவாகும் போது திறந்த அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையும் கல்லும் அகற்றப்படுகிறது. இத்தருணத்தில் கூட இ ஆர் சி பி சிகிச்சை முக்கியமானதாக கருதப்படுகின்றன. குறிப்பாக பித்த குழாய் கற்கள் அகற்றப்பட்டு பித்த குழாய் வடிகுழாய் பொருத்துவதன் மூலம் பித்த குழாயில் உள்ள நுண்ணுயிரியின் தாக்கம் வெகுவாக குறைகின்றது. இ ஆர் சி பி சிகிச்சை முறையில் பித்த குழாய் கற்கள் அகற்ற பித்த குழாய் திறக்கப்பட வேண்டியது இல்லை. இதனால் பித்த குழாயை திறப்பதினால் வரும் பின் விளைவுகளான பித்தக்கசிவு, பித்த குழாய் சுருக்கம் மற்றும் நீண்ட நாள் டி குழாய் பொருத்துவதை தவிர்க்கலாம். மேலும் இ ஆர் சி டி சிகிச்சை முறையின் போது பொருத்தப்படும் பித்த குழாய் வடிக் குழாய் பித்த குழாய்க்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கின்றது.
திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பொது மயக்கத்திலோ அல்லது தண்டுவட ஊசியின் மூலமாகவோ செய்யப்படுகின்றது. மயக்கத்திற்கு பின் அறுவை சிகிச்சை செய்யப்படும் இடம் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. வயிற்றின் வலது பக்கம் மேற்பகுதியில் குறுக்காக வயிறு திறக்கப்படுகின்றது. வயிறு திறக்கப்பட்ட பின் கல்லீரலில் மேல் பக்கமாகவும், மலக்குடல் கீழ்ப்பக்கமாகவும், முன் சிறு குடல் இடது பக்கமாகவும், குறிப்பிட்ட கருவிகளால் தள்ளப்படுவதால் பித்தப்பையும், கேலோட்டின் முக்கோணமும் பார்வைக்கு வருகின்றது. இத்தருணத்தில்., பித்தப்பையின் பாகங்களும், பித்த குழாயும் கண்டறிந்து கேலோட்டின் முக்கோணத்தில், அறுவை சிகிச்சை துவங்குகின்றது. இத்தருணத்தில் பித்தப்பை தமனியும் பித்தப்பை குழாயும் தனித்தனியாக பிரித்து தசைநார்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது. இத்தருணத்தில் பித்தப்பை தமனியும் பித்தப்பை குழாயும் துண்டிக்கப்பட்டு பித்தப்பை ஆனது கல்லீரலில் இருந்து பிரிக்கப்படுகின்றது. பித்தப்பையை கல்லீரலில் இருந்து பிரிப்பதற்கு டை தரமி என்ற கருவி மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது.
இந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்தப்பையின் தலைப்பகுதியில் ஆரம்பித்து கேலோட்டின் முக்கோணத்தை நோக்கி தொடர்வது மாற்றுமுறை அறுவை சிகிச்சை ஆகும். தொடர் பித்தப்பை அழற்சியால் கேலோட்டின் முக்கோணத்தில் பல உறுப்புகளில் ஒட்டல்கள் ஏற்பட்டால், கேலோட்டின் முக்கோணத்தை பார்ப்பதில் சிரமம் ஏற்படும் நேரத்தில் இம்முறை கையாளப்படுகின்றது. இம்முறையில், பித்தக் குழாய்க்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு. ஆனால் அறுவை சிகிச்சையின் போது கல்லீரலில் இருந்து இரத்த கசிவு அதிகமாக இருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த முறையில் பித்தப்பை அகற்றப்பட்டாலும் பித்தப்பை அகற்றப்பட்ட பின் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து இரத்த கசிவு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அறுவை சிகிச்சை முடிவுக்கு வருகிறது. அறுவை சிகிச்சையின் போது இரத்த கசிவை குறைக்க டைதரமி மற்றும் ஹார்மோனிக் ஸ்கேல்பல் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அறுவை சிகிச்சைக்குப் பின் வேறு எந்த பிரச்சனையும் இல்லாவிட்டால் வயிற்றில் வடிகால் குழாய் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ரத்த கசிவு இருந்தாலும் அல்லது நுண்ணுயிரியின் தாக்கம் அதிகமாக இருக்கும் தருணங்களில் வயிற்றினில் வடிகால் குழாய் ஒன்று பொருத்தப்படுகின்றது. இந்த வடிக்கால் குழாய் வயிற்றினுள் அசுத்த நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்வதால் அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் நுண்ணுயிரின் தாக்கத்தின் வீரியம் குறைவாகவே இருக்கும். சரியாக செய்யப்படும் திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையும் நல்ல முடிவையே கொடுக்கின்றன. சில சமயங்களில் அறுவை சிகிச்சைக்கு பின் இருக்கும் வலியின் அளவு லேப்ராஸ்கோபிக் சிகிச்சை முறையின் வலியை விட சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் தற்போதைய முதுகு வழி செலுத்தப்படும் வலி மருந்துகளால் வலியின் வீரியம் மிக குறைவாகவே இருக்கும்.
திறந்த முறை பித்தப்பை அகற்றும்அறுவை சிகிச்சையில் கூட சில சமயங்களில் சிக்கல்கள் இருக்கலாம். குறிப்பாக தொடர் பித்தப்பை அழற்சியால் கேலோட்டின் முக்கோணத்தை பார்ப்பதே சிரமம் இருக்கலாம். கேலோட்டின் முக்கோணத்தில் பல உறுப்புகள் ஒட்டி இருக்கலாம். மேலும் பித்த குழாய், பித்தப்பை குழாய் மற்றும் பித்தப்பை தமனி போன்ற உறுப்புகளை தனித்தனியாக கண்டறிவதில் கூட சிரமமாக இருக்கலாம். இத்தருணத்தில்., பித்தக் குழாய்க்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் கவனித்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். கேலோட்டின் முக்கோணம் கண்டறிவதில் சிக்கல் இருந்தால் பித்தப்பையின் நடுப்பகுதியில் திறக்கப்பட்டு பித்தப்பை கற்களும் உள்ளிருக்கும் பித்த நீரும் வெளியேற்றப்படுகின்றது. இத்தருணத்தில்., கேலோட்டின் முக்கோணத்தை அடைவதில் சிக்கல்கள் இருந்தால் பித்தப்பையின் பெரும் பகுதி அகற்றப்பட்டு கேலோட்டின் முக்கோணத்தை ஒட்டிய பகுதி விடுவிக்கப்படுகிறது. இந்த விடுவிக்கப்பட்ட பித்தப்பையில் எஞ்சிய பகுதி தசைநார்களால் தைக்கப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட அறுவை சிகிச்சையில் பித்தப்பை குழாயும் பித்தப்பையின் ஒரு பகுதியும் கேலோட்டின் முக்கோணத்தின் உடனே விடுவிக்கப்படுகின்றன. இம்முறையே சப்டோட்டல் பித்தப்பை அகற்று அறுவை சிகிச்சை என்று அழைக்கப்படுகின்றது. இந்த அறுவை சிகிச்சையில் பித்த குழாய்க்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால் சில சமயம் எஞ்சி இருக்கும் பித்தப்பை அல்லது பித்தப்பை குழாயில் கல் உருவாவதற்கும் பித்தப்பை கல் சம்பந்தமான வலி வருவதற்கும் வாய்ப்புள்ளது. ஒருவேளை பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் அதே மாதிரியான வயிற்று வலி வந்தால் அதற்கு காரணம் என்ன என்பதை எம் ஆர் சி பி பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். ஒரு வேளை எஞ்சிய பித்தப்பை அல்லது பித்தப்பை குழாயில் கற்கள் இருந்தால் அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.