blog-post-image

லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்த குழாய் கல் அகற்றுதல் மற்றும் டி குழாய் வடிகால் பொருத்துதல்

Posted on 2025-05-20 16:59:09 by Dr. Sathish

லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்த குழாய் கல் அகற்றுதல்  மற்றும் டி குழாய் வடிகால் பொருத்துதல்

பித்தப்பை கல்லுடன் பித்தக்குழாய் கற்கள் இருந்தால் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்கள் இரண்டையும் லேப்ராஸ்கோபி மூலம் செய்து முடிக்க முயற்சிப்பார்கள். குறிப்பாக                எம் ஆர் சி பி பரிசோதனையில் ஒன்று அல்லது இரண்டு பித்த குழாய் கற்கள் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை முறை பயனுள்ளதாக அமையும். பித்த குழாயில் அதிக எண்ணிக்கையில் கற்கள் இருத்தல், கல்லீரலினுள் இருக்கும் பித்த குழாயில் கற்கள் இருத்தல் போன்ற தருணங்களில் இந்த அறுவை சிகிச்சையின் சாத்தியம் கொஞ்சம் குறைவு என்று சொல்லலாம். இருந்தாலும் கோலிடாக்கோஸ்கோப்பி என்னும் பித்த குழாய் உள்நோக்கி மூலம் பித்த குழாய் கற்கள் அனைத்தையும் அகற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக செய்யப்படும் லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை போலவே செய்யப்படுகின்றது. பொதுவாக 5 துவாரங்கள் போடப்படுகின்றன. கேலோட்டின் முக்கோணம் கண்டறியப்பட்டு பித்தப்பை தமனி மற்றும் பித்தப்பை குழாய் தனித்தனியாக பிரிக்கப்பட்டு துண்டிக்கப்படுகின்றன. பித்தக் குழாய் கண்டறியப்பட்டு இரண்டு தசைநார்கள் மூலம் பித்த குழாய் தூக்கப்பட்டு குறிப்பிட்ட ஊசி மூலம் பித்த குழாயில் இருக்கும் பித்தம் உறிஞ்சப்பட்டு அந்த குறிப்பிட்ட உறுப்பு  பித்த குழாய் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. உறுதிப்படுத்தப்பட்ட பித்த குழாயில் சுமார் 2 சென்டிமீட்டர் அளவிற்கு நேராக திறக்கப்பட்டு உள்ளே உள்ள கற்கள் அகற்றப்படுகின்றன. அறுவை சிகிச்சைக்கி முன் செய்யப்பட்ட எம் ஆர் சி பி பரிசோதனை பித்த  குழாயில் இருக்கும் கற்களின் எண்ணிக்கையை காட்டுவதால் அறுவை சிகிச்சையின் போது பித்த குழாய் கற்களை அகற்ற எம் ஆர் சி பி மிக உதவியானதாக இருக்கும். கற்கள் அகற்றப்பட்டதை உறுதிப்படுத்த தொடர் எக்ஸ்ரே பரிசோதனை அல்லது கோலிடாக்கோஸ்கோப்பி  மிக பயனுள்ளதாக இருக்கும். அனைத்து கற்களும் அகற்றப்பட்ட பின் டி  குழாய் என்னும் வடிக்குழாய் பித்தக் குழாயில் பொருத்தப்பட்டு பின்பித்த குழாய் தசைனார்களால் மூடப்படுகின்றது. பித்த குழாயில் பொருத்தப்பட்ட டி குழாய் தனித்துவாரம் வழியாக வெளியே கொண்டுவரப்படுகின்றது. இத்தருணத்தில் மூடப்பட்ட பித்தக் குழாயில் கசிவு இருக்கிறதா என்பதையும் உறுதி செய்யப்படுகின்றது. முடிவில், தனி துவாரம் வழியாக ஒரு வடிகால் குழாய் வயிற்றினுள் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை முடித்து வைக்கப்படுகின்றது. வயிற்றினில் வைக்கப்பட்டிருக்கும் வடிகுழாய் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின் அகற்றப்படுகின்றது. சுமார் ஆறு வாரங்களுக்கு பின் டி குழாய் கொலஞ்சியோகிராம் அல்லது  எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் பித்த குழாயில் கற்கள் எஞ்சி உள்ளனவா என்பதை கண்டறியப்பட்டு கற்கள் ஏதும் இல்லை என்றால் டி குழாய் அகற்றப்படுகின்றது. அகற்றப்பட்ட டி குழாய் துவாரத்தில் ஓரிரு நாட்கள் பித்தகசிவு இருந்து பின்பு தானாகவே நின்றுவிடும். இந்த அறுவை சிகிச்சை அனுபவம் வாய்ந்த லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்களால் மட்டுமே பண்ண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.