blog-post-image

திறந்த அகல பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

Posted on 2025-05-20 20:45:20 by Dr. Sathish

திறந்த அகல பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை

அகல பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பித்தப்பை புற்று வியாதிக்காக செய்யப்படுகிறது. பித்தப்பை புற்று வியாதியும், பித்தப்பை கற்களும் பொதுவாக சேர்ந்தே இருக்கும். வயிற்று வலிக்காக வயிற்று ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது பித்தப்பை கல் உடன் பித்தப்பையில் சதை வளர்ச்சி சந்தேகப்பட்டால் புற்று வியாதியாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தருணங்களில், பி இ டி என்னும் சிறப்பு சி டி பரிசோதனை மூலம் புற்று வியாதி உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும். பித்தப்பையில் புற்று வியாதி இருந்தால் புற்று வியாதி பித்தப்பையினுள்  இருக்கிறதா? அல்லது வெளியில் பரவி உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பித்தப்பை புற்று வியாதியுடன் மஞ்சள் காமாலை இருந்தால் புற்று வியாதி பித்தக் குழாயை தாக்கி இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தருணத்தில் பித்தக் குழாயின் தாக்கத்தை    எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

பித்தப்பை புற்று வியாதி மற்ற இடங்களுக்கு பரவாத நேரத்தில் அகல பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை உகந்த அறுவை சிகிச்சையாக கருதப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையை லேப்ராஸ்கோபி மூலம் செய்வதற்கு சில சிக்கல்கள் உள்ளன, அவையாவன;

  1. உயர்தர லேப்ராஸ்கோபி கருவி தேவைப்படுதல்.
  2. ரத்தக்கசிவை கட்டுப்படுத்த ஹார்மோனிக் ஸ்கேல்பில் மற்றும் உயர்தர டைதரமி தேவைப்படுதல்.
  3. நோயாளியின் இருதயம் மற்றும் நுரையீரல் சீராக இருத்தல் .
  4. அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் இருத்தல்.

மேலே கூறப்பட்ட வசதிகள் இல்லாவிட்டால் திறந்த அகல அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் நன்று. அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு கல்லீரல் செயல் திறன் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்குப் பின் மயக்குனரின் ஒப்புதல் பெறப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பொதுவாக இந்த அறுவை சிகிச்சை பொது மயக்கத்துடன் தண்டுவட மருந்து செலுத்தி மேற்கொள்ளப்படுகிறது. மயக்கத்திற்கு பின் அறுவை சிகிச்சை செய்யப்படும் இடம் சுத்தப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. வயிற்றின் வலது பக்கம் மேற்புறம் குறுக்காக திறக்கப்படுகிறது.  பின் பித்தப்பையும் அது சார்ந்த பகுதிகளும் கண்டறியப்பட்டு, அகல பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை தொடங்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் பித்தப்பையுடன் பித்தப்பை கட்டியை அகற்றுவதோடு கீழே குறிப்பிடும் சில நுணுக்கமான அறுவை சிகிச்சையும் கருத்தில் கொள்ளப்படுகிறது. அவையாவன

  • கேலோட்டின் முக்கோணத்தில் இருக்கும் நிணநீர் கட்டி அகற்றப்பட வேண்டும்.
  • பித்தக் குழாயை ஒட்டி இருக்கும் அனைத்து சதைகளையும் அகற்றுவதால் நிணநீர் குழாயும் அகற்றப்படும்.
  • மொத்த பித்தப்பை குழாயும் அகற்றப்பட வேண்டும் .
  • பித்தப்பை சுற்றி இருக்கும் கல்லீரல் ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு அகற்றப்பட வேண்டும்.
  • அறுவை சிகிச்சை நடக்கும் போது பித்தப்பை ஓட்டை விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .

மேலே சொல்லப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புற்று வியாதி செல்கள் முழுமையாக அகற்றுவதையும் வேறு எங்கும் பரவாமல் இருப்பதையும் உறுதி செய்யலாம்.

இந்த அறுவை சிகிச்சைக்கு ஹார்மோனிக் ஸ்கேல்பில் என்ற கருவியையும் டைதரமி என்ற கருவியையும் பயன்படுத்துவதால் குறைந்த ரத்த கசிவில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கலாம். பித்தப்பையில் கட்டி உள்ளதா இல்லையா என்பதை தசை பரிசோதனை  மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும். பித்தப்பை புற்று வியாதியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அகல பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய முடிவதில்லை குறிப்பாக .,

1) பித்தப்பை புற்று வியாதியுடன் மஞ்சள் காமாலை இருத்தல்

2) பித்தப்பை புற்று வியாதி முன் சிறு குடலை பாதித்தல்

3) பித்தப்பை புற்று வியாதி மலக்குடலை பாதித்தல்

4) பித்தப்பை புற்று வியாதி கல்லீரலுக்கு பரவியிருத்தல்

5) பித்தப்பை புற்று வியாதியுடன் கல்லீரல் சுருக்கம் இருத்தல்

இத்தருணங்களில் அகல பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை முடியாமல் போனால் கூட, சில சமயங்களில்  முன் சிறு குடலோ அல்லது மலக்குடலோ ஒரு சிறு அளவு பாதிக்கப்பட்டு இருந்தால் அதையும் சேர்த்து அகற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.