பித்தப்பை கற்களால் ஏற்படும் சிக்கல்களுக்கு செய்யப்படும் அவசர வடிகால் சிகிச்சைகள்
பித்தப்பை கற்கள் மற்றும் பித்த குழாய் கற்களுடன் நுண்ணுயிரின் தாக்கத்தால் உள்ளுறுப்புகள் பாதித்தல், பித்தப்பை மற்றும் பித்த குழாய்களில் கற்கள் ஏற்பட்டால், அதில் நுண்ணுயிரிகளின் தாக்கம் ஏற்பட்டு அவை மற்ற உறுப்புகளையும் பாதிக்க காரணமாகின்றன. இத்தருணத்தில் நோயாளியின் பொது உடல் நிலை மோசமாக வாய்ப்புள்ளதால் சிகிச்சை மேற்கொள்வது கடினமான ஒன்றாகும். இத்தருணத்தில் நோயாளியின் பொது உடல் நிலையில் கவனம் கொண்டு அதை சரிப்படுத்தப்பட்ட பின்னரே பித்தப்பை அல்லது பித்த குழாயில் இருக்கும் கற்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும். இத்தருணங்களில் நோயாளியின் ஒரு உறுப்போ அல்லது பல உறுப்புகளோ பாதிக்கப்படலாம். குறிப்பாக சிறுநீரக பாதிப்பின் போது சிறுநீர் உற்பத்தி குறைவதோடு ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியாடினின் அளவு அதிகமாகின்றது. நுரையீரல் பாதிக்கப்பட்டால் மூச்சுத்திணறல் ஏற்படுவதோடு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இது போன்ற தருணங்களில் முதலில் உயர் தர நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் செலுத்தப்படுகின்றன.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் டயாலிசிஸ் என்ற சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது. நுரையீரல் பாதிக்கப்பட்டால் தேவைப்படும் போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. ரத்தம் உறையும் சக்தியில் மாறுபாடு ஏற்பட்டால் அதற்காக ரத்தம் சம்பந்தப்பட்ட மாற்றுப் பொருட்கள் குறிப்பாக பிளாஸ்மா மற்றும் பிளேட்லெட்ஸ் போன்றவை செலுத்தப்படுகின்றன. இத்துடன் மற்ற உறுப்புக்களின் பாதிப்புக்கு காரணமாக இருக்கும் பித்தப்பை அல்லது பித்த குழாயில் இருக்கும் நுண்ணுயிரினால் பாதிக்கப்பட்ட பித்த நீர் வடிகால் சிகிச்சை முறையில் வெளியேற்றப்படுகிறது. பொதுவாக தொடர் எக்ஸ்ரே கருவிகளின் மூலம் இந்த வடிகால் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
குறிப்பாக பித்த குழாய் கற்கள் பாதிப்பு என்றால் இ ஆர் சி பி செயல்முறை மூலம் வடிகால் பொருத்தப்படுகின்றது. சில சமயங்களில் இ ஆர் சி பி செயல்முறைக்கு சிக்கல்கள் இருந்தால் PTBD என்னும் கல்லீரல் வழியாக செய்யப்படும் வடிக்கால் முறை பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் பித்தப்பையில் ஏற்படும் நுண்ணுயிரின் தாக்கத்தை பெர்குடேனியஸ் கோலிசிஸ்டாஸ்டமி என்னும் வடிக்கால் சிகிச்சை மூலம் பித்தப்பையில் இருக்கும் பாதிக்கப்பட்ட பித்த நீர் வெளியேற்றப்படுகிறது.