blog-post-image

PTBD என்னும் கல்லீரல் வழியாக பொருத்தப்படும் பித்தக் குழாய் வடிக் குழாய்

Posted on 2025-05-20 21:01:55 by Dr. Sathish

PTBD என்னும் கல்லீரல் வழியாக பொருத்தப்படும் பித்தக் குழாய் வடிக் குழாய்

இது அரிதாக செய்யப்படும் ஒரு சிகிச்சை முறையாகும். பித்த குழாயில் கற்கள் இருந்து நுண்ணுயிரின் தாக்கம் ஏற்பட்டால் பொதுவாக    இ ஆர் சி பி சிகிச்சை முறையே உகந்த சிகிச்சை ஆகும். ஆனால் சில சமயங்களில் நோயாளியின் உடல்நிலை மிக மோசமாக இருந்து இ ஆர் சி பி சிகிச்சை முறை செய்ய முடியாவிட்டாலோ அல்லது இரைப்பையின் வாய்பகுதியில் ஏதோ ஒரு காரணங்களால் அடைப்பு ஏற்பட்டாலோ இந்த PTBD சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடனும் அல்லது தொடர் எக்ஸ்ரே கருவியின் மூலமாகவோ அல்லது சிடி ஸ்கேன் மூலமாகவோ செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் ஒரு நுண்ணிய குழாய் ஆனது வயிற்றின் வலது பக்கம் தோல் மற்றும் கல்லீரல் வழியாக பித்தக் குழாயில் சுத்தமாக செலுத்தப்படுகிறது. பொதுவாக ஒரு சிறு மயக்கம் கொடுத்து இந்த சிகிச்சையை செய்து முடிக்கலாம் .

தொடர் எக்ஸ்-ரே உதவியுடன் வயிற்றின் வலது பக்கம் மேற்பகுதியில் மரத்து  போகும் ஊசியின் உதவியுடன் ஒரு சிறு ஊசி தோல் மற்றும் கல்லீரல் வழியாக பித்த குழாய்க்குள்  செலுத்தப்படுகிறது. அந்த சிறு ஊசியின் உதவியுடன் நுண்ணிய குழாய் ஒன்று பித்தகுழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதற்குப் பின்னர் மாறுபடும் திரவம் செலுத்தப்பட்டு அந்த நுண்ணிய குழாய் பித்த குழாய்க்குள் இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படுகின்றது. இத்தருணத்தில் உள்ளிருக்கும் நுண்ணிய ஊசி அகற்றப்பட்டு அதற்கு பதிலாக வழிகாட்டு கம்பி செலுத்தப்பட்டு அது முன் சிறு குடலை அடையும்படி பல அசைவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வழிகாட்டு கம்பி முன் சிறு குடலை அடைந்ததா என்பதை தொடர் எக்ஸ்ரே மூலமாகவோ அல்லது சிடி ஸ்கேன் மூலமாகவோ உறுதி செய்யப்படுகிறது. இத்தருணத்தில் வழிகாட்டி கம்பி முன் சிறு குடலை அடைந்திருந்தால் அதற்கு வெளியில் இருக்கும் நுண்ணிய குழாய் அகற்றப்பட்டு வழிகாட்டு கம்பியின் உதவியுடன் வடி குழாய் பொருத்தப்படுகிறது. இந்த வடிக்குழாயின் ஒரு பகுதி முன் சிறு குடலிலும் மறு பகுதி வயிற்றின் வெளியிலும் இருப்பதால் நுண்ணுயிரியினால் பாதிக்கப்பட்ட பித்த நீர் குடல் வழியாகவோ அல்லது வெளியில் இருக்கும் குழாய் வழியாகவோ வெளியேற்றப்படுகிறது. எனவே இவ்வாறு செய்யப்படும் PTBD சிகிச்சை முறையால் பித்த குழாயில் இருக்கும் பாதிக்கப்பட்ட பித்த நீர் வெளியேற்றப்படுவதால் நோயாளியின் பொதுநலத்தில் விரைவில் முன்னேற்றத்தை காணலாம். குறிப்பாக நோயாளியின் பொது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அதற்குரிய சிகிச்சைக்கு உடல் தயாராகும் வரை இந்த வடிக்குழாய் நுண்ணுயிரின் தாக்கத்தை குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

இந்த சிகிச்சை முறை மேற்கொள்ள அனுபவம் வாய்ந்த கதிரியக்க நிபுணர் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிகிச்சை முறைக்கு பின் சில விளைவுகள் ஏற்படலாம்.  குறிப்பாக கல்லீரல் வழியாக ஊசி செலுத்தப்படுவதால் அந்த இடத்தில் இருந்து ரத்தக் கசிவு மற்றும் பித்த நீர் கசிவு ஏற்பட்டு அவை வயிற்றினுள் தேங்கி அதனால் கூட சில பின்விளைவுகள் வரலாம். எனவே இந்த சிகிச்சை முறையானது தேவைப்படும்போது அனுபவம் வாய்ந்த கதிரியக்க நிபுணர் இருந்தால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது. இந்த PTBD சிகிச்சை முறை செய்வதற்கு சில பிரச்சினைகள் இருக்கலாம். குறிப்பாக இரத்தம் உறையும் சக்தியில் மாறுதல், கல்லீரல் சுருக்கம், ஏற்கனவே கல்லீரலில் நீர் சேர்ந்து இருத்தல், மற்றும் விரிவடையாத பித்தக் குழாய்களினால் இந்த சிகிச்சை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படலாம்.