
திடீர் பித்தப்பை கற்கள் சம்மந்தப்பட்ட கணைய அழற்சி
திடீர் பித்தப்பை கற்கள் சம்மந்தப்பட்ட கணைய அழற்சி என்பது பித்தப்பை கல்லால் ஏற்படும் ஒரு சிக்கலாகும். பித்தப்பையில் இருக்கும் கல் பித்தகுழாய்க்குள் நகரும் போது வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை வரலாம். இதன் தொடர்ச்சியாக பித்த குழாய் கற்கள் அதன் கீழ் பகுதியில் உள்ள ஆம்புலா என்னும் பகுதியை அடைக்குமானால் இதன் விளைவாக கணைய குழாயும் அடைபட்டு திடீர் கணைய அழற்சி உருவாகின்றது. பித்தக் குழாய் கற்கள் கணைய குழாயை அடைக்கும் போது கணைய குழாயினுள் உள்ள அழுத்தம் அதிகமாகிறது. இதன் விளைவாக கணைய குழாயில் உள்ள கணைய நீர் கணைய தசை பகுதியை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தி கணைய சதைப்பகுதி பாதிப்பிற்கு காரணமாகின்றன. இந்த பாதிப்பை திடீர் கணைய அழற்சி என்கிறோம்.
திடீர் கணைய அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வயிற்று வலியுடன் வாந்தியும் இருக்கும். வயிற்று வலி வயிற்றின் மேல் பகுதியில் இருப்பதோடு முதுகிற்கும் பரவும். மற்றும் வயிற்றுப் பெருக்கமும், வாந்தியும் இருக்கக் கூடும். கணைய பாதிப்பின் வீரியம் அதிகமாக இருந்தால் அதனால் மற்ற உறுப்புகள் கூட பாதிக்கலாம். குறிப்பாக சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படலாம். இதனால் சிறுநீர் உற்பத்தி குறைவதோடு ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியாட்டினின் அளவு அதிகரிக்கலாம். அத்துடன், மூச்சு திணறலோடு இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையலாம். குறிப்பிட்ட நோயாளிக்கு ஏற்படும் திடீர் வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்று பெருக்கம் கணைய பாதிப்பு இருக்கிறதா என்பதை யூகிக்க வைக்கிறது. பித்தப்பையில் இருக்கும் கற்கள் பித்த குழாய்க்கு நகரும் விகிதம் குழந்தை பிறப்பிற்கும் பின் அதிகமாக இருப்பதால் குழந்தை பிறந்த பெண்ணுக்கு அதிக வயிற்று வலி வந்தால் பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட திடீர் கணைய அழற்சி இருக்கின்றனவா என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
திடீர் கணைய அழற்சியை கண்டுபிடிப்பதற்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரத்த செயல் திறன் பரிசோதனை மற்றும் ரத்தத்தில் உள்ள அமைலேஸ் லைபேஸ் போன்ற பரிசோதனைகள் முக்கியமாக அமைகின்றது. அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் பித்தப்பை கற்கள் கண்டறியப்பட்டு ரத்தத்தில் அமைலேஸ் மற்றும் லைபேஸ் உடன் பிலிருபின் அளவு அதிகமாக இருந்தால் பித்தப்பை சம்பந்தப்பட்ட கணைய அழற்சி என்பதை ஓரளவு உறுதிப்படுத்த முடியும். பித்தப்பையில் இருந்து நகரும் பித்தப்பை கற்கள் பித்த குழாயை அடைந்து பின் பித்த குழாயின் கீழ் பகுதியான ஆம்பூலா என்னும் இடம் வழியாக முன் சிறுகுடலை அடைகின்றன. இத்தருணத்தில் ஆம்பூலா பகுதியில் தேங்கியிருக்கும் பித்த குழாய் கற்கள் கணைய அழற்சி உருவாக காரணமாக இருப்பதால் பித்த குழாய் கற்கள் கணைய அழற்சிக்கு காரணமா என்பதை எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த முடியும். கணைய பாதிப்பின் வீரியத்தை கண்டறிய ரத்தக்குழாயில் மாறுபடும் திரவம் செலுத்தி செய்யப்படும் சி டி பரிசோதனை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்பரிசோதனையில் செலுத்தப்படும் மாறுபடும் திரவம் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட கணைய சதையை அடைவதில்லை இத்தருணங்களில் கணைய சதை அழுகிப்போய் இருக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திடீர் கணைய அழற்சிக்கு பல சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. முதலில் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வாய்வழி உணவு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். தேவையான குளுக்கோஸ் நீர், வலி நிவாரணி, நோய் எதிர்ப்பான் மருந்துகள், போன்றவை ரத்த குழாய் வழியாகவே செலுத்தப்படுகின்றன. இத்துடன் சோமேட்டோ ஸ்டாடின் அல்லது ஆர்டிரியோடைட் என்ற மருந்தும் தொடர்ந்து செலுத்தப்படுவதால் கணைய அழற்சியின் வீரியத்தை குறைக்கலாம்.
நோயாளியின் பொது உடல் நல முன்னேற்றத்தை வைத்து அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு நோயாளியின் பாதிக்கப்பட்ட கணையம், சீரடைகிறதா என்பதை கண்டறியலாம். நோயாளியின் பொதுநிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின் கணைய அழற்சிக்கு காரணமான பித்த குழாய் கற்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதன் தொடக்கமாக எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் பித்த குழாய் கற்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பித்த குழாயில் கற்கள் இருப்பின் இ ஆர் சி பி சிகிச்சை மூலம் பித்தக்குழாய் கற்கள் அகற்றப்பட வேண்டும் இ ஆர் சி பி மூலம் பித்த குழாய் கற்கள் அகற்றப்படுவதால் எதிர்காலத்தில் பித்த குழாய் சம்பந்தப்பட்ட கணைய அழற்சியை தவிர்க்க முடியும். பொதுவாக கணைய அழற்சி ஏற்பட்டால் அதிலிருந்து முழுமையாக குணமடைய சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பித்தக் குழாய் கற்கள் இ ஆர் சி பி சிகிச்சை மூலம் அகற்றப்பட்டாலும் கூட ஏற்கனவே பாதிக்கப்பட்ட கணையம் பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இ ஆர் சி பி மூலம் பித்தக் குழாய் கற்கள் அகற்றப்பட்ட பின் பித்த குழாயில் வடிக்குழாய் ஒன்று பொருத்தப்படுகிறது. இத்தருணத்தில் நோயாளி கணைய பாதிப்பிலிருந்து குணமடைவதாக தெரிந்தால் லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் பித்தப்பையையும், பித்தப்பை கற்களும் அகற்றப்பட வேண்டும்.
சில சமயங்களில் நோயாளி கணைய அழற்சியிலிருந்து குணமடைவது திருப்தியாக இல்லாவிட்டால் அல்லது கணையஅழற்சி சம்பந்தமான சிக்கல்கள் ஏதேனும் ஏற்பட்டாலோ அந்த சிக்கல்கள் ஓரளவு சரியான பின்பு தான் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். கணைய அழற்சியின் பாதிப்புகளான நுண்ணுயிரியின் தாக்கம், கணையம் அழுகுதல், கணையத்தை சுற்றி நீர்க்கட்டி உருவாகுதல், கணையத்தை சுற்றி போலி நீர் கட்டி உருவாகுதல், மற்றும் மற்ற உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் குறிப்பிடத்தக்கவை. கணைய அழற்சியில் பாதிக்கப்பட்ட நபர்களின் ஒரு சிறு தரப்பு நோயாளிகள் மட்டுமே இந்த மாதிரியான சிக்கல்களுக்கு ஆளாவது குறிப்பிடத்தக்கது.
கணைய அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளி கணைய அழற்சியிலிருந்து குணமடையும் போது பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கணைய அழற்சியினால் சிக்கல்கள் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஓரளவு சரி செய்யப்பட்ட பின்னரே பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
கணைய அழற்சிக்கு பின் செய்யப்படும் பித்தப்பை அறுவை சிகிச்சை சில சமயங்களில் கடினமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் கெலோட்டின் முக்கோணத்தில் மற்ற உறுப்புகள் ஒட்டி இருந்து பித்தப்பை குழாய் மற்றும் பித்தப்பை தமனியை பிரிப்பதில் சிரமம் ஏற்படலாம். பித்தப்பை கல் சம்பந்தப்பட்ட கணைய அழற்சிக்கு பின் பித்தப்பை அகற்றப்பட்டாலும் கூட ஏற்கனவே பாதிக்கப்பட்ட கணையம் முழுமையாக குணமடையாமல் கணைய அழற்சி சம்பந்தமான பிரச்சினைகளான கணையம் அழுகுதல், மற்றும் போலி நீர்ப்பை உருவாதல் போன்றவை ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.