
பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட கணையஅழற்சியின் பின் விளைவுகள்
பித்தப்பை கற்கள் பித்த குழாயினுள் நழுவுவதால் கணைய அழற்சி உருவானால் கணைய அழற்சிக்கான சிகிச்சை முறை முதன்மையானதாகும். கணைய அழற்சிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளியின் பொது உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும் போது பித்தக் குழாயில் இருக்கும் கல்லை அகற்றும் முயற்சியான இ ஆர் சி பி சிகிச்சை முறை செய்யப்படுகிறது. இ ஆர் சி டி சிகிச்சை முறையில் பித்த குழாய் கற்கள் அகற்றப்பட்டு பித்த குழாயில் வடிகுழாய் பொருத்தப்படுகிறது. இதற்குப் பின் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இத்தருணங்களில் கணைய அழற்சி சம்பந்தமான பின் விளைவுகள் கூட ஏற்படலாம். குறிப்பாக முக்கியமான பின் விளைவுகளாவன.,
1) கணைய அலர்ஜிக்கு பின் கணையம் அழுகுதல்
பெரும்பாலான கணைய அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உரிய சிகிச்சைக்கு பின் கணைய அழற்சியில் இருந்து குணமடைகின்றனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் கணைய அழற்சி சம்பந்தமான பின் விளைவுகளுக்கு உள்ளாகின்றனர். அதில் முக்கியமானது கணையம் அழுகுதல் ஆகும். கணைய அழற்சியின் போது பாதிப்பு அதிகமாக இருந்தால் கணையத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது தடை ஏற்பட்ட கணையம், பாதிப்புக்கு உள்ளாகின்றது. அழுகிய கணையம் பொதுவாக கறுப்பு நிறத்தில் தோற்றமளிக்கும். இதன் விளைவாக வலி அதிகமாவதோடு காய்ச்சல் மற்றும் மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். நுண்ணுயிரின் தாக்கம் தீவிரமாக இருந்தால் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்து தொடர்ந்து செலுத்தப்பட வேண்டும் இதில் முன்னேற்றம் ஏதும் இல்லாவிட்டால் அழுகிய கணைய பகுதி அகற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
2) கணையத்தை சுற்றி நீர் கோர்த்தல்
கணைய அழற்சிக்கு எந்த ஒரு காரணமாக இருந்தாலும் கணையத்தை சுற்றி நீர் கோர்த்தல் பொதுவான ஒன்றாகும். கணைய அழற்சியால் ஏற்படும் நீர் இதற்கு ஒரு முக்கிய காரணம். சில சமயங்களில் கணைய அழற்சி மிக அதிகமாக இருந்தால் கணைய குழாயில் பாதிப்பு ஏற்பட்டு கணைய குழாயிலிருந்து கணைய நீர் கசிவது இந்த நீர் கோர்ப்புக்கு மிக முக்கியமான காரணமாகும். பொதுவாக கணையத்தை சுற்றி இருக்கும் இந்த நீர் தானாகவே மறைந்து விடும். ஆனால் கணையக்குழாயில் கசிவு ஏற்பட்டால் அந்த கசிவு ஆறு வாரங்களை தாண்டும்போது போலியான நீர்ப்பை ஒன்றை உருவாக்குகின்றது. சில சமயங்களில் இதற்கு அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம்.
3) அழுகிய கணையத்தில் நுண்ணியரியின் தாக்கம்
கணைய அழற்சிக்கு பின் சில நேரங்களில் கணையம் அழுகும் போது அழுகிய கணையத்தை நுண்ணுயிரி தாக்கலாம். இந்த நுண்ணுயிரிகள் ரத்தத்தில் இருந்தோ அல்லது பெருங்குடலில் இருந்தோ அழுகிய கணையத்தை அடையும். இதற்கு நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளே முதன்மை சிகிச்சையாக கருதப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் நுண்ணுயிரியின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தாலோ சீழ் உருவானாலோ அல்லது மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நுண்ணுயிரியின் தாக்கத்துடன் கூடிய அழுகிய கணையத்தை லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது திறந்த அறுவை சிகிச்சை மூலமாகவோ அகற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
4) அழுகிய கணயத்தில் சீழ் உருவாதல்
அழுகிய கணையத்தில் நுண்ணுயிரியின் தாக்கம் உருவாகும் போது அங்கு சீழ் ஏற்பட்டு திரவ வடிவத்தில் அழுகிய கணையத்தினுள் சீழ் தேங்குகிறது. இத்தருணத்தில் நோயாளிக்கு வயிற்றில் அதிக வலி இருப்பதோடு காய்ச்சலும் ஏற்படலாம். மாறுபடும் திரவம் செலுத்தி செய்யப்படும் சிடி பரிசோதனை இந்த குறிப்பிட்ட பிரச்சினையை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். கணைய அழற்சிக்கு பின் தொடர்ந்து வயிற்றில் வலி ஏற்பட்டு அத்துடன் காய்ச்சல் அல்லது மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் கணையத்தின் உள்ளிருக்கும் சீழ் அகற்றப்பட வேண்டும். இந்த செயல் மூன்று வகைகளில் அகற்றப்படலாம், முதல் முயற்சியாக நுண்கதிர் சிறப்பு நிபுணரின் உதவியுடன் வடிகால் பொருத்துவதாகும். இது முடியாத தருணத்தில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது திறந்த அறுவை சிகிச்சை மூலமாகவோ தேங்கி இருக்கும் சீழை அகற்றலாம்.
5) கணையத்தை சுற்றி இருக்கும் போலி நீர்ப்பை
கணைய அழற்சிக்கு பின் கணையத்தை சுற்றி தேங்கும் நீர் ஆறு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதை கணையம் சம்பந்தப்பட்ட போலி நீர் பை என்கிறோம். இது வயிற்று வலியுடன் வயிற்றின் மேற்பகுதியில் கட்டி போல ஏற்படலாம். இந்த போலி நீர்ப்பை 6 சென்டிமீட்டருக்கும் மேல் இருந்து அதனால் வலி போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதை எண்டோஸ்கோப்பி மூலமாகவோ அல்லது லேப்ராஸ்கோப்பி மூலமாகவோ அல்லது திறந்த அறுவை சிகிச்சை மூலமாகவோ இரைப்பை அல்லது சிறு குடலினுள் நிரந்தரமாக வடிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
6) மற்ற உறுப்புகள் செயலிழத்தல்
கணைய அழற்சிக்கு பின் அழற்சியின் பாதிப்பு தீவிரமானால் அது மற்ற உறுப்புக்களையும் பாதிக்கலாம். குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரலை பாதிக்கும். இத்தருணங்களில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டதோ அந்த உறுப்புக்கு சிறப்பு மருத்துவம் மேற்கொள்ளப்படுவதோடு, அதற்கு காரணமாக இருக்கும் அழுகிய கணையம், அல்லது கணையத்தில் சீழ் போன்றவற்றையும் அறுவை சிகிச்சை மூலம் சரிப்படுத்தப்பட வேண்டும்.