லேப்ராஸ்கோபிக் சிஸ்டோ கேஸ்ட்ராஸ்டமி
லேப்ராஸ்கோபி சிஸ்டோ கேஸ்ட்ராஸ்டமி என்பது லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் கணைய போலி நீர் பையை இரைப்பையுடன் இணைப்பதாகும். கணைய போலி நீர்ப்பை உருவாவதற்கு முக்கிய காரணம் பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட கணைய அழற்சியாகும். இந்த கணைய அழற்சியின் போது கணையத்தை சுற்றி நீர் உருவாகி நாளடைவில், பொதுவாக ஆறு வாரங்களுக்கு பின் கணைய போலி நீர் பையாக மாறுகிறது. இந்த போலி நீர் பையானது வயிற்று வலியை உருவாக்குவதோடு, வயிற்றின் மேல் பகுதியில் நீர் கட்டியை உருவாக்குகிறது. சில சமயங்களில் நுண்ணுயிரியின் தாக்கம் இருந்தால் காய்ச்சல் கூட இருக்கலாம். மேலும் இந்த போலி நீர் பையின் வெளிப்பாடு அதன் அளவை பொறுத்து மாறுபடும். வயிற்றுக்கு செய்யப்படும் சாதாரண ஸ்கேன் பரிசோதனை மூலம் இதை கண்டறியலாம். மாறுபடும் திரவத்தின் உதவியுடன் செய்யப்படும் சிடி பரிசோதனை இந்த கணைய போலி நீர் பையை உறுதி செய்யும். இந்த கணைய போலி நீர் பைக்கு சிகிச்சை அதன் அளவை பொறுத்து மாறும். குறிப்பாக ஆறு சென்டிமீட்டருக்கு மேல் இருக்கும் போலி நீர்ப்பைஇரைப்பைக்கு மேலிருந்தால் அதை ஏதாவது ஒரு சிகிச்சை மூலம் நிரந்தரமாக இரைப்பையுடன் இணைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையை லேப்ராஸ்கோப்பி மூலம் எளிதில் செய்து விடலாம். என்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சையும், திறந்த அறுவை சிகிச்சையும், மாற்று அறுவை சிகிச்சை முறைகள் ஆகும். இந்தப் போலி நீர் பை இரைப்பையை விட்டு தள்ளி இருந்தால் அதை முன் சிறு குடலுடன் இணைக்கப்படுவதை சிஸ்டோ ஜெஜினாஸ்டமி என்று அழைக்கப்படுகிறது.
லேப்ராஸ்கோபி சிஸ்டோ கேஸ்ட்ராஸ்டமி என்ற அறுவை சிகிச்சை முழு மயக்கத்தில் செய்யப்படுகிறது. பொதுவாக 5 துவாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதல் துவாரத்தின் வழியாக உள்நோக்கி செலுத்தப்பட்ட பின் நீர் கட்டி இருக்கும் இடத்தை பொறுத்து மற்ற துவாரங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. இதற்குப்பின் இரைப்பையின் முன் பகுதி சிறிதாக திறக்கப்பட்டு அதன் வழியாக இரைப்பையின் பின் இருக்கும் நீர் கட்டியை ஒரு சிறு ஊசியை செலுத்தி உறிஞ்சி வரும் நீரைப் பொறுத்து உறுதி செய்யப்படுகிறது. இரைப்பைக்கு பின் இருக்கும் நீர்க்கட்டி உறுதிப்படுத்தப்பட்டால் இரைப்பையின் பின்பக்கத்தில் இன்னொரு சிறிய துவாரம் உருவாக்கி நீர் கட்டினுள் இருக்கும் அனைத்து நீரும் உறிஞ்சப்படுகிறது. அதற்குப்பின் நீர் கட்டியினுள் ஏதாவது கணையத்தின் அழுகிய பாகங்கள் இருந்தால் அவைகளும் வெளியேற்றப்படுகிறது. பொதுவாக இரைப்பையின் பின்பகுதியும் போலி நீர்ப்பையும் பை போன்ற சுவரும் ஒட்டி இருக்கும் இவ்வாறு ஒட்டி இருக்கும் இரண்டு பாகங்களையும் அறுவை சிகிச்சை தையல் மூலம் தைக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கணையத்தில் உருவாகும் கணைய நீர் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட சிஸ்டோ கேஸ்ட்ராஸ்டமி என்னும் மாற்று வழி மூலம் வெளியேறுகிறது. இதற்கு பின் இரைப்பையின் முன் பகுதியும் அறுவை சிகிச்சை தையல்களால் மூடப்படுகிறது. முடிவில் வயிற்றினில் ஒரு வடிகால் பொருத்தி அறுவை சிகிச்சை முடித்து வைக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின் சில நாட்களில் நோயாளி உணவு உண்ண ஆரம்பிப்பதோடு நோயாளி வெகு விரைவில் வீட்டிற்கு திரும்பலாம்.