திறந்த சிஸ்டோ கேஸ்ட்ராஸ்டமி
திறந்த சிஸ்டோ கேஸ்டாட்டமி என்பது கணையத்தில் இருக்கும் போலி நீர் பைக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும். பொதுவாக லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையே இதற்கு பரிந்துரைக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட முடியாத தருணத்தில் திறந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முழு மயக்கம் இல்லாமல் முதுகு வழி செலுத்தப்படும் மயக்க மருந்து மூலம் செய்து முடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உரிய மயக்க மருந்துக்கு பின் வயிற்றின் மேற்பகுதி சுத்தப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பின்பு நேராக வயிறு திறக்கப்படுகிறது. இதற்குப் பின் இரைப்பையின் முன் பகுதியில் இரண்டு தற்காலிக தங்கும் தையல்கள் போடப்பட்டு சுமார்3 சென்டிமீட்டர் நீளத்திற்கு இரைப்பை திறக்கப்படுகிறது. பின்பு இரைப்பையின் பின்புறம் வழியாக நீர் கட்டியினுள் ஒரு ஊசி செலுத்தி நீர் உறிஞ்சும் போது அது நீர்க்கட்டி இருக்கும் இடத்தை உறுதி செய்கிறது. இதற்குப் பின் தங்கும் தையல்களின் உதவியுடன் இரைப்பையின் பின்புறமும் திறக்கப்பட்டு நீர் கட்டியின் உள்ளிருக்கும் நீர் வெளியேற்றப்படுகிறது. சில சமயங்களில் கணையத்தின் சில அழுகிய பாகங்கள் இருந்தால் அதுவும் அகற்றப்படுகிறது. பின்பு சுத்தமான நீரால் போலி நீர்ப்பை நன்றாக சுத்தப்படுத்தப்படுகிறது. முடிவில் இரைப்பையின் பின்புறமும் போலி நீர் பையின் பை பகுதியும் அறுவை சிகிச்சையின் தையலால் தைக்கப்படுகிறது. பின்பு இரைப்பையின் முன் பகுதி அறுவை சிகிச்சை தையலால் மூடப்படுகிறது. வயிற்றினுள் வடிகால் குழாய் பொருத்தப்பட்டு வயிறு மூடப்படுகின்றது. பொதுவாக ஒரு சில நாட்களுக்குப் பின் நோயாளி உணவு உண்ண ஆரம்பிக்கும் போது நோயாளி வீட்டிற்கு அனுப்பப்படுவார்.