blog-post-image

திறந்தவெளி அழுகிய கணையம் அகற்றுதல்

Posted on 2025-05-22 03:00:53 by Dr. Sathish

திறந்தவெளி அழுகிய கணையம் அகற்றுதல்

அழுகிய கணையம் அகற்றுதல் என்பது உயிரற்ற அழுகிய கணைய திசுப்பகுதியை அகற்றுவதை குறிக்கும். இது பொதுவாக திடீர் கணைய அழற்சிக்கு பின்வரும் ஒரு பின் விளைவாகும். கணைய  அழற்சியால்  பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சைக்கு பின் குணமடைகின்றனர். ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே கணையம் அழுகுதல், கணையத்தை சுற்றி நீர் தேங்குதல், மற்றும் கணையத்தில் சீழ் பிடித்தல் போன்ற பாதிப்புகள் உருவாகும். இந்த பாதிப்புகளுடன் உடலில் மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அழுகிப்போன கணையத்தை அகற்றுவது இன்றியமையாததாகும். அழுகிப்போன கணையத்தை அகற்றுவதன் மூலம் நுண்ணுயிரியின் தாக்கத்தின் வீரியத்தை குறைக்கலாம் அழுகி போன கணையத்தை அகற்றுவது லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது திறந்த அறுவை சிகிச்சை மூலமாகவோ செய்யலாம். நோயாளியின் பொது உடல்நிலை சீராக இருந்தால் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையும் பொது உடல்நிலை சீராக இல்லாவிட்டால் திறந்த முறை அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது.

பொதுவாக இந்த அறுவை சிகிச்சை முழு மயக்கத்திலோ அல்லது முதுகெலும்பு மயக்கத்திலோ செய்யப்படுகின்றன. மயக்கத்திற்கு பின் அறுவை சிகிச்சை செய்யப்படும் இடம் சுத்தப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அதற்குப் பின் வயிறு வயிற்றின் மேல் பகுதி நேராக திறக்கப்படுகிறது பின்பு இரைப்பை மற்றும் பெருங்குடல் கண்டறியப்பட்டு இரண்டிற்கும் இடையில் இருக்கும் கணையமும் அதன் அழுகிய பாகங்களும் உறுதிப்படுத்தப்படுகின்றது. கணையத்தின் அழுகிய பாகமானது மெதுவாகவும் பார்ப்பதற்கு கருப்பு நிறமாகவும் இருக்கும். இவ்வாறு மாறுதலாக தெரியும், அழுகிய கணைய சதைப்பகுதி அகற்றப்படுகின்றது. இத்தருணத்தில் கணையத்தில் ஏற்படும் இரத்த கசிவு அந்த குறிப்பிட்ட இடம் அழுகவில்லை என்பதை உறுதி செய்கின்றது. லேசான ரத்தக்கசிவு ஏற்பட்ட உடனே இந்த அறுவை சிகிச்சை முடிவுக்கு வந்துவிடும். கண்ணுக்குத் தெரிந்த அழுகிய கணைய சதைப்பகுதி அகற்றப்பட்ட பின் மீதி இருக்கும் கணைய சதைப்பகுதி சுத்தமான நீரால் சுத்தப்படுத்தப்பட்டு ஒன்று அல்லது இரண்டு வடிகால்கள் பொருத்தி வயிறு மூடப்படுகின்றது. பொதுவாக இந்த அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளியின் உடல் நிலையில் முன்னேற்றத்தை காணலாம்.  ஒரு வேளை எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாவிட்டால் ஒரு சில தினங்களுக்கு பின் இதே அறுவை சிகிச்சை மீண்டும் தேவைப்படலாம்.