blog-post-image

கர்ப்ப காலமும் பித்தப்பை கற்களும்

Posted on 2025-05-22 03:02:11 by Dr. Sathish

கர்ப்ப காலமும் பித்தப்பை கற்களும்

பித்தப்பை கற்களின் பாதிப்பு அதிகமாக பெண்களிடையே காணப்படுவதோடு குறிப்பாக நடு வயதிலேயே அதிகம் வெளிப்படுகிறது. பித்தப்பை கற்களை மூன்றாக பிரிக்கலாம்.,

  • கர்ப்பத்திற்கு முன் பித்தப்பை கற்கள்
  • கர்ப்பத்தின் போது பித்தப்பை கற்கள்
  • குழந்தை பிறப்பிற்கு பின் பித்தப்பை கற்கள்

1) கர்ப்பத்திற்கு முன் பித்தப்பை கற்கள்

பொதுவாக பித்தப்பை கற்களால் பாதிக்கப்பட்டவரின் நோய் வருடத்திற்கு மூன்று சதவீதம் பேருக்கு வெளிப்படுகின்றது.  எனவே கர்ப்பத்திற்கு முன் எதோ ஒரு பிரச்சனைக்காக வயிற்றில் ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது பித்தப்பை கற்கள் கண்டறியப்பட்டால் அவற்றை கர்ப்பத்திற்கு முன்பே உரிய சிகிச்சை மூலம் பித்தப்பை கல்லை அகற்றுதல் நன்று. ஒரு வேளை உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கர்ப்பத்தின் போது பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான வயிற்று வலி, மஞ்சள் காமாலை மற்றும் கணைய அழற்சி ஏற்படலாம்.

இத்தருணங்களில்., சிகிச்சை கடினமாக இருக்கலாம். குறிப்பாக பித்த குழாய் கற்களால் ஏற்படும் மஞ்சள் காமாலை மற்றும் கணைய அழற்சியை உரிய சிகிச்சை மூலம் சரிப்படுத்துவது சிரமமாகும். இன்னும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் பித்த குழாய்க்கு பித்தப்பை கற்கள் நழுவி மஞ்சள் காமாலை உருவாகும் போது இ ஆர் சி பி சிகிச்சை முறை பரிந்துரைக்க முடியாத ஒன்றாகிவிடும். ஏனெனில் இ ஆர் சி பி சிகிச்சையின் போது தொடர் எக்ஸ்-ரே பயன்படுத்துவதால் எக்ஸ்ரே சம்பந்தப்பட்ட பாதிப்புகள் குழந்தைக்கு வரலாம்  என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நடுவயதை சேர்ந்த பெண்களுக்கு பித்தப்பை கற்கள் இருந்தாலோ அல்லது திருமணத்திற்கு பின் கர்ப்பத்திற்காக காத்திருப்பவர்களுக்கோ பித்தப்பை கற்கள் இருந்தாலோ அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

 2) கர்ப்பத்தின் போது பித்தப்பை கற்கள்

பொதுவாக பெண்கள் கருத்தரிக்கும் போது வயிற்றிற்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். இத்தருணத்தில் கர்ப்பத்துடன் பித்தப்பையில் கற்கள் கண்டறியப்பட்டால் அதற்கான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளுதல் நன்று. ஒரு வருடத்திற்கு பித்தப்பை சம்பந்தப்பட்ட கற்களின் வெளிப்பாடு மூன்று சதவீதம் என்பதால் குழந்தை பிறக்கும் வரை சில முன்னெச்சரிக்கையின் மூலம் பல சிக்கல்களை தவிர்க்கலாம். குறிப்பாக கொழுப்பு சத்து மற்றும் கார சம்மந்தப்பட்ட உணவு வகைகளை தவிர்ப்பதால் சிக்கல்கள் வருவதை குறைக்கலாம். ஒருவேளை வலி ஏற்பட்டால், மேற் சொல்லப்பட்ட முன்னெச்சரிக்கையின் மூலம் வலியின் வீரியத்தை குறைக்கலாம். இந்த முன்னெச்சரிக்கையின் மூலம் குழந்தை பிறப்பு நடந்து விட்டால் அதற்குப் பின் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

கர்ப்பத்தின் போது பித்தப்பை கற்களால் வலி, அல்லது மஞ்சள் காமாலை ,அல்லது கணைய அழற்சி ஏற்பட்டால், வேறு வழி இல்லாத தருணத்தில் உரிய சிகிச்சை முறைகள் மேற்கொள்ளலாம். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் செய்யப்படும் சிகிச்சை முறையால் கருவிற்கு பாதிப்பு ஏற்படலாம். கடைசி மூன்று மாதத்தில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் லேப்ராஸ்கோபி சிகிச்சை முறை சிறிது கடினமானதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தாங்க முடியாத வலி இருக்கும் போது மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் கூட அறுவை சிகிச்சையின் பின்விளைவுகளான குழந்தையின் உறுப்பில் பாதித்தல், மற்றும் கரு கலைதல் போன்ற பின் விளைவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

3) குழந்தை பிறப்பிற்கு பின் பித்தப்பை கற்கள்

பித்தப்பையில் கற்கள் இருந்தால் குழந்தை பிறப்பிற்கு பின் அதன் வெளிப்பாடு விகிதம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக குழந்தை பிறந்த பின்பு தாய் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும் என்பதால் தாய்க்கு அதிக உணவு அளிக்கப்படுகிறது. குறிப்பாக உணவில் அதிக கொழுப்பு மற்றும் புரத சத்து சேர்க்கப்படுகிறது இந்த உணவு முறை பித்தப்பையில் இருக்கும் கற்களை பித்தக் குழாய்க்கு நகர வழி வகுக்கின்றது. எனவே சமீபத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்க்கு உணவுக்கு பின் வயிற்றில் வலி வந்தால் அதற்கு முக்கியம் முதல் காரணம், பித்தப்பை கற்களாகவே இருக்கும். இந்த பித்தப்பை கற்கள் பித்தப்பை குழாயில் சிக்குவதாலோ அல்லது பித்தக் குழாய்க்கு நகர்வதாலோ அல்லது கணைய அழற்சி உருவாக்குவதாலோ பித்தப்பை சம்பந்தப்பட்ட வயிற்று வலி வரலாம். குழந்தை பிறப்பிற்கு பின்பு பித்தப்பை கற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் விகிதமும் வீரியமும் அதிகமாக இருப்பதால் கர்ப்பத்திற்கு முன் பித்தப்பை கற்கள் கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.